Published:Updated:

''அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக யாரும் பேசக்கூடாதா?'' - கேள்வி கேட்கிறார் கே.டி.ராகவன்

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

''பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசனும், 'மாநிலத்தின் அளவைவைத்து முடிவெடுக்கும் விஷயம் அல்ல இது' என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், இதற்காக வானதி சீனிவாசனை எதிர் விமர்சனம் செய்வது எந்தவகையில் நியாயம்?'' என்கிறார் கே.டி.ராகவன்.

அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜி.எஸ்.டி கவுன்சிலில் முன்வைத்த வாதத்தை விமர்சித்திருந்தார் வானதி சீனிவாசன். இது குறித்து பதிலடி கொடுத்த பழனிவேல் தியாகராஜன் ``உங்கள் பொய்களை நிறுத்திவிட்டு, மக்களுக்கான பணிகளைச் செய்யுங்கள்" எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார். பா.ஜ.க - தி.மு.க இடையிலான முட்டல் மோதல்கள் அதிகரித்துவரும் இந்த வேளையில், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினேன்...

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

''சமீபத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருந்தீர்களே... என்ன பேசினீர்கள்?''

''ஒரு வழக்கு சம்பந்தமாக டெல்லி சென்றிருந்தபோது, மரியாதை நிமித்தமாகத்தான் அமைச்சரைச் சந்தித்தேன். அப்போது தமிழ்நாட்டு அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசிக் கொண்டோம்.''

''வேல் யாத்திரை, அகில இந்தியத் தலைவர்கள் பிரசாரம் என அதிரடி காட்டியபோதும், சட்டசபைத் தேர்தலில் தமிழக பா.ஜ.க நான்கு இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறதே?''

''15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில், நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது என்பதே சந்தோஷமான செய்திதான். பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில்தான் எங்கள் கட்சியின் மையக்குழு முடிவுகளை எடுக்கிறது. அதன்வழியிலேயே நாங்களும் கட்சிப் பணிகள் செய்துவருகிறோம். முக்கிய மத்திய அமைச்சர்களும்கூட தேர்தல் பிரசாரம் செய்தனர். எனவே, எத்தனை இடங்களில் வெற்றி பெற்றாலும் அது எங்களுக்குச் சந்தோஷம்தான். அதேசமயம் பா.ஜ.க-வின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் நாங்கள் பரிசீலனை செய்துகொண்டுதான் இருக்கிறோம்!''

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

''ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து வலுவாக உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறாரே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?''

''ஜி.எஸ்.டி கமிட்டி என்பது பல மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்களையும் உள்ளடக்கியது. பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் இந்த கமிட்டியில் இருக்கிறார்கள். எல்லோரையும்போல், மத்திய அரசுக்கும் இந்த கமிட்டியில் ஒரேயொரு ஓட்டு மட்டும்தான். எனவே, எந்தவொரு விஷயத்தையும் மத்திய அரசோ அல்லது பாராளுமன்றமோ முடிவு பண்ணிவிட முடியாது. ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட வழிமுறைகளின் வழியே அனைவரது ஒருமித்த கருத்தோடுதான் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதேபோல், நாமும் ஆரோக்கியமான விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை கேட்டுப் பெற வேண்டும்!''

''மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'உங்கள் பொய்களில் என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள்' என வானதி சீனிவாசனை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?''

''ஜி.எஸ்.டி கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பேசிய பேச்சுக்கு, கோவா மாநில அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசனும், 'மாநிலத்தின் அளவைவைத்து முடிவெடுக்கும் விஷயம் அல்ல இது' என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், இதற்காக வானதி சீனிவாசனை எதிர் விமர்சனம் செய்வது எந்தவகையில் நியாயம்? அப்படியென்றால், அமைச்சர் என்ன வேண்டுமானாலும் பேசுவார். யாரும் அதற்கு எதிர்வினை ஆற்றக் கூடாது என்கிறாரா?''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''15 லட்சம் தருவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்ததில் ஆரம்பித்து, `கோபேக் ஸ்டாலின்’ ஹேஸ்டேக் விவகாரம் வரை... பா.ஜ.க பல்வேறு பொய்களை துணிந்து சொல்லிவருகிறது என்கின்றார்களே எதிர்க்கட்சியினர்?''

''15 லட்சம் கொடுப்பதாக பிரதமர் எந்த இடத்தில் சொன்னார் என்று ஆரம்பத்திலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் தொடர்ந்து இந்தப் பொய்யை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அப்படி பிரதமர் சொன்னதாக ஓர் ஆதாரத்தை நிரூபியுங்களேன் பார்ப்போம்..!

தடுப்பூசி விவகாரத்தில், 'கோயம்புத்தூர் மாவட்டம் வஞ்சிக்கப்படுகிறது' எனக் கோவை மக்கள்தான் ஹேஸ்டேக் போட்டனர். ஆனால், அதற்காக ஒரு முதலமைச்சரை 'கோ பேக்' என்று சொல்வதை சரி என்று நான் சொல்ல மாட்டேன். அதேசமயம் ரஷ்யாவிலிருந்து பிரிந்துவந்த வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் கொண்ட பல நாடுகளிலிருந்து, 'கோ பேக் மோடி' ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தவர்கள் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டாம். பா.ஜ.க உட்கார்ந்துகொண்டு இதுபோல் ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அண்மையில்கூட, உத்தரப்பிரதேசத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் ஒருவர் தாக்கப்பட்டதான செய்தியைச் சமூக ஊடகம் வழியே சிலர் பரப்பினர். ஆனால், அது உண்மையல்ல, பொய் என்பது தெரிந்து வழக்கு பதிவானதும், தமிழ்நாட்டில் அந்தச் செய்தியை பதிவிட்டவர்கள்கூட அவசரம் அவசரமாக பதிவுகளை நீக்கிவிட்டனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட "பிரதமர் நரேந்திர மோடி, திருடன்" என ராகுல் காந்திதான் சொன்னார். பின்னர் "அப்படியெல்லாம் சொல்லாதீங்க" என்று உச்ச நீதிமன்றமே அவரைக் கண்டித்தது. ராகுல் காந்தி அப்படியொரு பொய்யைச் சொன்னதால்தான் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி கொடுத்தனர் மக்கள். எனவே, பொய் சொல்பவர்கள் யார் என்று மக்களுக்கே தெரியும்!''

மும்பை: போலி கொரோனா தடுப்பூசி முகாம்; தடுப்பூசி மருந்தில் தண்ணீர் கலந்த டாக்டர் தம்பதி கைது!

''அண்மையில், காங்கிரஸ் கட்சி தயாரித்ததாக பொய்யான ஒரு டூல்கிட்டை பா.ஜ.க தலைவர்கள்தான் பரப்பிவந்துள்ளனர் என ட்விட்டர் நிறுவனமே முத்திரை குத்தியுள்ளதுதானே?''

''இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட கொரோனா டூல்கிட்டில் பயன்படுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வார்த்தையையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட அந்த வார்த்தைகளை சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பயன்படுத்தினர். வெளிநாட்டு பத்திரிகைகளும் பயன்படுத்தின. இதுமட்டுமல்ல... காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் யாரேனும் கொரோனா படுக்கை வசதி கேட்டால் செய்துதரப்பட வேண்டும் என்பதுகூட அந்த டூல்கிட்டில் உள்ளது. ஆக, இது குறித்த ஒவ்வோர் அசைவையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால், எல்லாவற்றையும் ஒரே வரிசையில் கோக்க முடியும். ஆனால், உண்மை வெளிப்பட்டுவிட்டதும், "நாங்கள் இல்லை" என்று பதறுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஜனநாயக வழியில், பா.ஜ.க-வை வெல்ல முடியாது என்பதைத் தெரிந்துகொண்டு இது போன்ற முயற்சிகளால் புறவாசல் வழியாக வெற்றிபெற நினைக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.''

நரேந்திரமோடி
நரேந்திரமோடி

''கொரோனா 2-வது அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசு காட்டிய அலட்சியமே பேரிடரை ஏற்படுத்திவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தநிலையில், 3-வது அலையை எதிர்கொள்வதிலாவது மத்திய அரசு தயார்நிலையில் இருக்கிறதா?''

''கொரோனா முதல் அலையின்போது, 'எல்லாவற்றையும் மத்திய அரசே பார்த்துக்கொள்கிறது. தடுப்பூசி வாங்குவது, ஊரடங்கு அறிவிப்பு உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்' என்று அனைவரும் கேட்டனர். அதன்படியே மாநிலங்களுக்கான உரிமைகளையும் மத்திய அரசு வழங்கியது. அடுத்ததாக, '2-வது அலை வரப்போகிறது... அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்' என அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திலேயே பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

இது தவிர 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் செயின்' மூலமாக அந்தந்த மாநிலத்தின் ஆக்சிஜன் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுவந்தது. மருந்து, தடுப்பூசிகளும் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்ற மாதம் 20 லட்சம் தடுப்பூசிகள் வந்தன... இந்த மாதம் அதுவே 42,58,000-ஆக உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி மத்திய அரசு, கொரோனாவை மிகச் சரியாக எதிர்கொண்டுதான்வருகிறது. எனவே, 'சரியாகக் கையாளவில்லை...', 'அலட்சியமாக இருந்துவிட்டது' என்றெல்லாம் சொல்வது தவறு. வரப்போகிற 3-வது அலையையும் அனைவரோடும் கைகோத்து செயல்பட்டு நிச்சயம் வெற்றிகொள்வோம்!''

சசிகலா ஆடியோ :``ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து சின்னம்மா போன் செய்தார்" - தச்சநல்லூர் சுந்தரராஜ்!

''ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சிக்கு எதிராக ஓரணியில் எதிர்க்கட்சியினர் திரளக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், அப்படி அமைவதற்கான வாய்ப்பு இல்லை.

சரத்பவார்-பிரசாந்த் கிஷோர்-மம்தா பானர்ஜி
சரத்பவார்-பிரசாந்த் கிஷோர்-மம்தா பானர்ஜி

ஏனெனில், மம்தா பானர்ஜி, சரத் பவார், ஸ்டாலின் என அவரவருக்கு அந்தந்த மாநிலத்தில் மட்டும்தானே செல்வாக்கு இருக்கிறது. இதனால் என்ன நடந்துவிடப் போகிறது? யார் என்ன கூட்டணி அமைத்தாலும் பா.ஜ.க-வின் செல்வாக்கு மற்றும் பிரதமர் மோடி ஆட்சியின் செல்வாக்கு எங்களுக்குக் கைகொடுக்கும்!''

அடுத்த கட்டுரைக்கு