Published:Updated:

பள்ளிக் குழந்தைகள் பசியாறட்டும்! முதல்வரின் காலை உணவுத் திட்டம்! #TNBreakfast

TNBreakfast scheme

பசி என்பது உணர்வல்ல. அதுவொரு சமூக நோய். 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்!' என்று முழங்குகிறான் பாரதி. பசிப்பிணியை ஒழிக்க பாடுபடுவோம் என்கிறார் வள்ளலார். பசியில்லா நாடே சிறந்த நாடு என்கிறார் வள்ளுவர்.

பள்ளிக் குழந்தைகள் பசியாறட்டும்! முதல்வரின் காலை உணவுத் திட்டம்! #TNBreakfast

பசி என்பது உணர்வல்ல. அதுவொரு சமூக நோய். 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்!' என்று முழங்குகிறான் பாரதி. பசிப்பிணியை ஒழிக்க பாடுபடுவோம் என்கிறார் வள்ளலார். பசியில்லா நாடே சிறந்த நாடு என்கிறார் வள்ளுவர்.

Published:Updated:
TNBreakfast scheme

பலவித சமூக விரோத செயல்பாடுகளுக்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பது பசி. இளமை தந்த வறுமையால் கால் வயிறு கஞ்சிக்கு வழியின்றி, தவற்றில் ஈடுபடும் இளைஞர்கள் அநேகம். மக்களின் முதன்மைத் தேவையான உணவை வழங்குவதே அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு... உலகுக்கு பாடம் சொன்ன தமிழகம்!

வறுமையின் காரணமாய் சாப்பிட வழியில்லை. பசி தாங்க முடியா பிஞ்சுக் குழந்தைகளால் என்ன செய்ய முடியும்? உணவுக்கே வழியில்லாதபோது ஏட்டுக்கல்வி மனதில் பதியுமா? இதை மனதில்கொண்டு வருங்கால சமுதாயத்தின் மீதான அக்கறை உணர்வுடன் ஆரம்பிக்கப்பட்டது, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவிடும் அந்த மகத்தான திட்டம்.

சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 'நீதிக் கட்சி'யின் முயற்சியினால், இந்தியாவிலேயே முதன்முறையாக 1922-ஆம் ஆண்டு, அன்றைய சென்னை மாநகராட்சித் தலைவர் சர் பிட்டி தியாகராயர் அவர்களின் தலைமையில், சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அமலானது. தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

TNBreakfast scheme
TNBreakfast scheme

1957-ஆம் ஆண்டு, தமிழகம் முழுக்க தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வழிவகை செய்தார், அப்போதைய முதல்வர் காமராஜர். 1982-ஆம் ஆண்டு அத்திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். 1989-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு புரதச் சத்தை உறுதி செய்ய முட்டை வழங்கப்படும் என அறிவித்தார், அப்போதைய முதல்வர் கலைஞர். 

2022 - இலவச மதிய உணவுத் திட்டத்தின் நூற்றாண்டில், 'பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச காலை உணவு வழங்கப்படும்' என்று ஆணை பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சத்துணவுத் திட்டத்தின் மிக முக்கிய மைல்கல்லாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TNBreakfast scheme
TNBreakfast scheme

முதல்வரின் காலை உணவுத் திட்ட அம்சங்கள்...

இலவச உணவு என்பதைத் தாண்டி, சத்துக் குறைபாடு இல்லா குழந்தைகள் சமுதாயத்தை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது. பல்வேறு காரணங்களால் அதிகளவிலான மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ள முடியாத நிலை இருப்பதை உணர்ந்து, அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி, ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார், ரவா கேசரி, சேமியா கேசரி ஆகிய உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன.

TNBreakfast scheme
TNBreakfast scheme

உணவுப் பொருள்கள் மற்றும் சமையலின் தூய்மை & தரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முன்னணி சமையல் கலைஞர் செப் தாமு அவர்களால் சமையற்கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது! இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுக்கு என்று பிரத்தியேக செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், முறைகேடுகளும் தொய்வும் இன்றி பணிகள் நடைபெறும்.

பெண்கள் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவும்...

தமிழகப் பெண்களின் நலனுக்காக சுய உதவிக் குழுக்கள் திட்டம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதாந்திர நிதியுதவி, மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, கைம்பெண்கள் நிதியுதவி என்று பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமும் இனி முக்கிய பங்காற்றும்.

பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில் இருக்கும் குடும்பங்கள் பல. காலையிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய தாய்மார்கள், பள்ளி செல்லும்  குழந்தைகளுக்காக காலை உணவை சமைக்க பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இனி அந்த அயராத ஓட்டத்துக்கு சற்று இளைப்பாறுதல் கிடைக்கும். தமிழக பெண்களின் வேலைப்பளு குறையும். குழந்தைகளுக்கு செலவிடும் காலை உணவுக்கான தொகை மிச்சப்படும். வறிய குடும்பங்களுக்கு இது பேருதவியாக அமையும்!

திராவிட மாடலின் மிக்க முக்கிய திட்டம்!

பசியின்றி கல்வி கற்றல்,  அறிவாற்றல் வளர்ச்சி, மாணவர் வருகை அதிகரித்தல் மற்றும் தக்கவைத்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு உற்ற உதவி, குழந்தைகளின் உடல்நலம் பேணுதல் என்று ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதை அலசி ஆராய்ந்த பின்னர் 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுக்க 1,14,095 மாணவர்கள் முதற்கட்டமாக பயனடைகின்றனர்.

'இலவசங்கள் குறித்து பல்வேறு தவறான கருத்துகள் ஒவ்வொரு ஆட்சியிலும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இது இலவசம் அல்ல. ஊட்டச்சது மிக்க உணவுக்கான உரிமையின் முதல் முன்னெடுப்பு.' என்பது தமிழக முதல்வர் ஸ்டாலினின் கருத்தாக இருக்கிறது. ஆரோக்கியமான, அறிவார்ந்த வருங்கால தமிழகத்தை உருவாக்கிட பேருதவி புரியும் என்பதால் இத்திட்டம் திராவிட மாடல் ஆட்சியின் மிக முக்கிய திட்டமாக கருதப்படுகிறது.