Published:Updated:

'திராவிடம்... ஒன்றியம்...' - ஸ்டாலின் தொடங்கும் தனித்துவ அரசியல்!

குறிப்பாக தி.மு.க வெற்றி பெற்றவுடன் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

ஐம்பதாண்டு கால அரசியல் பயணத்தில் புதிய மைல்கல்லை தொட்டுள்ளார் தமிழக முதலவர் ஸ்டாலின். தேர்தலில் வெற்றி பெற்றது முதல், முதல்வராக பதவியேற்றது வரை சில குறியீடுகள் மூலம் தனது தனித்துவத்தை தொடர்ந்து வெளியுலகுக்கு அடையாளப்படுத்தி வருகிறார் ஸ்டாலின். ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடந்து, அதன் முடிவுகள் கடந்த மே 2-ம் தேதி வெளியானது. தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றது. குறிப்பாக தி.மு.க மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளார்.ஆனால், தி.மு.க ஆட்சியைப் பிடித்தது முதல் ஸ்டாலின் நடவடிக்கைகள் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

குறிப்பாக தி.மு.க வெற்றி பெற்றவுடன் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில் “ மக்கள் நலனில் மாநில அரசுகள், மத்திய அரசோடு தோளோடு தோள் நிற்கும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஸ்டாலின் அளித்த பதிலில் “கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழக அரசு, ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படும்” என்று பதில் அளித்தார். அதாவது தி.மு.க வின் நீண்ட நெடிய கோரிக்கையான மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி”என்கிற தத்துவத்திளை மத்திய அரசுக்கு அறிவுறுத்தும் வகையில் அவரது இந்த பதில் இருந்தது.

அதே போல் முதல்வராக பொறுப்பேற்ற போது “ மு.க.ஸ்டாலின் என்று சொல்லாமல், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்னதும் தி.மு.க வினர் உட்பட அனைவருமே ஆச்சர்யத்தோடு பார்த்தனர். உறுதிமொழி எடுக்கும் போது உளமாற என்று சொல்லியே பகுத்தறிவு பாதையில்தான் எனது பாதை என்பதை காட்டியிருக்கிறார். அதே போல் அமைச்சரவை பட்டியல் வெளியானபோது பல துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தி.மு.க வின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான சமூகநீதியைத் துாக்கிப் பிடிக்கும் வகையில் சில மாற்றங்களையும் சொல்லியிருக்கிறார். குறிப்பாக சமூக நலத்துறையை இனி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை” என்று பெயர் மாற்றம் செய்தார்.

இப்படி தொடர்ந்து திராவிட சிந்தாத்தை நான் தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன் என்பது போன்ற நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக முதல்வராக அவர் பொறுப்பேறதும் அவரது ட்விட்டர் கணக்கில் தமிழக முதல்வர் என்று மாற்றம் செய்யப்பட்டது. அதோடு 'திராவிடத்தின் இருப்பு' என்றும் சுட்டியிருக்கிறார்.இது எல்லாமே கடந்த ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க மீதும் மத்திய அரசின் மீதுமான கோபத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் தி.மு.க வினர்.

“மத்திய அரசு ஒரே நாடு ஒரே மொழி, ஒரே இனம் என்கிற கூற்றினை செயல்படுத்த முனைப்பு காட்டிவருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை திராவிடத்தின் சிந்தனை அதிகமாக உள்ள பகுதி. இங்கு மத்திய அரசுக்கு எதிராக ஒரு அரசு வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் தி.மு.க-வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை தலைவர் அறிந்துவைத்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எனவே ஆரம்பம் முதலே மத்திய அரசு என்பதே ஒன்றிய அரசு என்பதையும், மாநில கூட்டாட்சி என்பதையும் அறிவித்தார். அதே போல் தமிழகத்திலிருந்து திராவிடத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை உணர்த்தவே தனது ட்விட்டர் பக்கத்தில் திராவிடத்தையும் இணைத்துள்ளார். இனி மத்திய அரசு மாநில அரசுக்கு எதிராக எந்த திட்டங்களை கொண்டுவந்தாலும் அதையும் துணிவோடு எதிர்பார்ப்பார். காரணம்,அ.தி.மு.க வை போன்று வலுவில்லாத நிலையில் தி.மு.க இல்லை. தான் ஒரு திராவிட வழியில் வந்த தலைவர் என்பதை நிருபிக்க வேண்டிய பொறுப்பும் ஸ்டாலினிடம் இருக்கிறது. இதனால் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து அவரிடம் எதிர்பார்க்கலாம்” என்கிறார்கள் தி.மு.க வினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு