Published:Updated:

`மருமகனே உதயநிதி' - உருகிய கனிமொழி; தேம்பியழுத டி.ஆர்.பாலு - நூல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்

டி.ஆர்.பாலு நூல் வெளியீட்டு விழா ( ட்விட்டர் )

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய `பாதை மாறாத பயணம்' என்ற நூலின் வெளியீட்டு விழா, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

`மருமகனே உதயநிதி' - உருகிய கனிமொழி; தேம்பியழுத டி.ஆர்.பாலு - நூல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய `பாதை மாறாத பயணம்' என்ற நூலின் வெளியீட்டு விழா, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

Published:Updated:
டி.ஆர்.பாலு நூல் வெளியீட்டு விழா ( ட்விட்டர் )

தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து 'பாதை மாறாப் பயணம்' என்ற தலைப்பில் சுயசரிதை நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, ஐ.பெரியசாமி, நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த இரண்டு பாகங்களையும் வெளியிட்டார். இந்த நூலின் முதல் பாகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், இரண்டாம் பாகத்தை வைரமுத்துவும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிரிப்பும் நெகிழ்ச்சியுமாக முதலமைச்சர் தொடங்கி, உதயநிதி, துரைமுருகன் ஆகியோர் பேசினார்கள். தனக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் இருக்கும் நெருக்கத்தைச் சொன்ன உதயநிதி ஸ்டாலின், `நூலில் அனைவரையும் மறக்காமல் குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருக்கிறார்' எனச் சுட்டிக்காட்டிப் பேசினார். கனிமொழி, “அமைச்சர், என் அன்பிற்குரிய மருமகன் உதயநிதி அவர்களை வரவேற்கிறேன்” எனக் கூறியதோடு, உதயநிதியுடன் அமர்ந்து நிகழ்ச்சி முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
ட்விட்டர்

நிகழ்ச்சியில் முத்தரசன், பாலகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், ஜெயரஞ்சன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டனர். டி.ஆர்.பாலு நூல் வெளியீட்டு நிகழ்வின் சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு…

 "சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு கையில் எடுக்க வேண்டும்”

டி.ஆர்.பாலுவுக்கும் தனக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பற்றி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``நான் 5,000 ரூபாய் கொடுத்து ஒரு கார் வாங்கினேன். 7960 அந்த காரின் நம்பர். இப்போதும் அது நியாபகத்தில் இருக்கிறது. அந்த கார் வாங்கி சில நாள்களிலேயே ஒரு விபத்து ஏற்பட்டது. அதைச் சரி செய்ய சுமார் 7,000 ரூபாய் வரை செலவு செய்தேன். விபத்து ஏற்பட்டுவிட்டதால் அந்த காரை விற்கலாம் என முடிவு செய்தபோது, ‘அந்த காரை நானே வாங்கிக் கொள்கிறேன். என்ன விலை’ என டி.ஆர்.பாலு கேட்டார். எனக்கு லாபம் வேண்டாம். அசல் மட்டும் கிடைத்தால் போதும். வாங்கிய விலை 5,000 செலவு 7,000 எனவே மொத்தம் 12,000 ரூபாய் கொடுத்தால்போதும் என்று சொன்னேன். உடனடியாக அவர் 100 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். அவ்வளவுதான் அவர் அதை மறந்துவிட்டார். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். அப்படி, இப்படியென இதுவரை மொத்தம் 2,000 ரூபாய் வரை கொடுத்திருப்பார். ஆகவே இன்றைக்கும் எனக்கு அவர் கடன்காரராகத்தான் இருக்கிறார்” எனச் சொன்னதும் அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
ட்விட்டர்

அதையடுத்து, ``சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த தலைவர் கலைஞர் தீவிரம் காட்டினார். சேது சமுத்திரத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க உதவியாக இருந்தவர் டி.ஆர்.பாலு. ஆனால், அந்தத் திட்டத்தை பா.ஜ.க தடுத்துவிட்டது. சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு கையிலெடுத்து, அது நடைமுறைக்கு வருவதற்கு உதவ வேண்டும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

“தொண்டனிடம் மன்னிப்புக் கேட்ட மகத்தான தலைவர் கலைஞர்”

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது, “ஒரு விவகாரம் குறித்து விவாதம் நடந்தபோது கலைஞர் சொன்னதை மறுத்துப் பேசினார் டி.ஆர்.பாலு. ஆனால், தலைவர் கலைஞர் தான் சொன்னதுதான் சரி எனப் பேசி, பாலுவிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துகொண்டார். கோவமான பாலு உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார். குளிக்கச் சென்ற தலைவர் சிறிது நேரம் கழித்து வந்து, ‘பாலு சொன்னதுதான்யா சரி. அவன வரச் சொல்லுயா’ என என்னிடம் சொன்னார். அப்போது நான் இப்போதைக்கெல்லாம் பாலு பல்லாவரத்தைத் தாண்டியிருப்பார் எனச் சொல்ல, ‘இங்கேதான் இருப்பான் வரச் சொல்லுயா’ என்றார். பாலு வந்ததும், ‘பாலு நீ சொன்னதுதான்ப்பா கரெக்ட். நான்தான்ப்பா அவசரப்பட்டுச் சொல்லிட்டேன்' என்றவர், அடுத்த வார்த்தை என்ன சொன்னார் தெரியுமா... `என்னை மன்னிச்சிடு பாலு' என்றதும் பாலு உருண்டு புறண்டு அழத் தொடங்கிவிட்டார். தான் சொன்ன கருத்துக்குத் தொண்டனிடம் மன்னிப்புக் கேட்ட மகத்தான தலைவர் கலைஞர்” என துரைமுருகன் சொன்னபோதே, டி.ஆர்.பாலு தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். இந்தச் சம்பவத்தால் அரங்கமே நெகிழ்ந்து போனது.

துரைமுருகன்
துரைமுருகன்

துரைமுருகன் அதைத் தொடர்ந்து, சேது சமுத்திரத் திட்டத்தை மையமிட்டுப் பேசினார். ``சேது சமுத்திர திட்டத்தை பாலு கொண்டு வர வேண்டும். தற்போதைய தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்க வேண்டும்" எனச் சொன்னதும் அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.