Published:Updated:

'வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்!' - முதல்வர் பழனிசாமி உறுதி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ( உ.பாண்டி )

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மூன்று மசோதக்கள் மூலம் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். அதனாலேயே அதை அ.தி.மு.க ஆதரிக்கிறது. ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்கு எதிராகப் பேசியது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்.’’

``புனித ஜார்ஜ் கோட்டையில் பா.ஜ.க கொடி பறக்காது. எப்போதும் தேசியக்கொடிதான் அங்கு பறக்கும்” என பா.ஜ.க தலைவர் முருகனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடபாடி பழனிசாமி நேற்று ராமநாதபுரம் வந்திருந்தார். மாவட்டத்தில் நடந்து முடிந்த திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிய முதல்வர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு விவசாய சங்கத்தினர், சிறு, குறு தொழிலபதிர்கள், மீனவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் வளர்ச்சிப் பணிகள் குறித்துக் கலந்துரையாடினார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி பேட்டி
உ.பாண்டி

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 48.50 கோடி மதிப்பீட்டில் 94 குடிமராமத்துப் பணிகள் முடிவடைந்திருக்கின்றன. இந்த ஆண்டில் மேலும் 31 கோடி ரூபாய் செலவில் 44 பணிகள் நடந்துவருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் முதன்முதலாக 14,000 கோடி திட்ட மதிப்பீட்டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதன்படி முதல் பகுதியில் 118 கி.மீ, 2-ம் பகுதியில் 108 கி.மீ, 3-ம் பகுதியாக 33 கி.மீ எனப் பணிகள் மேற்கொள்வதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பலனடையும். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், மாவட்டத்திலுள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள் அனைத்தும் நிரப்பப்படுவதுடன், நிலத்தடி நீரும் உயரும்.

மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி மற்றும் நான்கு அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுளன. விரைவில் கடல் உணவு மற்றும் ஜவுளித் தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இது தவிர மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான படகுக்கு மத்திய மாநில அரசுகள் 70% மானியம் வழங்குகின்றன. மீனவர் நலனுக்காக மூக்கையூரில் துறைமுகம், குந்துகாலில் மீன் இறங்கு தளம் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றன'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
உ.பாண்டி

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ``மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மூன்று மசோதாக்கள் மூலம் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். இதனாலேயே அதை அ.தி.மு.க ஆதரிக்கிறது. ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்கு எதிராகப் பேசியது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். பா.ஜ.க தலைவர் முருகன், `விரைவில் கோட்டையில் பா.ஜா.க கொடி பறக்கும்’ என்று கூறியிருக்கிறார். இது அவரது விருப்பம். ஆனால், கோட்டையில் எப்போதும் தேசியக்கொடிதான் பறக்குமே தவிர பா.ஜ.க கொடி பறக்காது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு