வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு, மேயர் பிரியா ஆகியோர் நேற்று வட சென்னை பகுதியில் புயலால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், மாண்டஸ் புயலை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கையாண்டதாகப் பலரும் வாழ்த்திவருவதாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சென்னையிலிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ``இரண்டு நாள்களாக பார்க்கிறவர்கள் எல்லாம் இதைத்தான் பாராட்டிட்டு இருக்காங்க. நம்ம ஆட்சிக்கு வந்தபோது என்ன நிலை, ஒரு பெரிய கொடிய தொற்றுநோய் கொரோனா, அதிலிருந்து மீண்டோம்.

அன்னைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த மா.சுப்ரமணியன் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சரல்ல, முதலமைச்சர்ல இருந்து எல்லா அமைச்சர்களும் சுகாதாரத் துறை அமைச்சர்களாக மாறினோம். அதனால்தான் அதை கட்டுப்படுத்த முடிந்தது. அது முடியக்கூட இல்ல அதற்குள் வெள்ளம் வந்திருச்சு. அதையும் சமாளித்து வெற்றிகொண்டோம். இப்போ பெரிய புயல் வந்துச்சு. புயலையே சந்திக்கின்ற ஆற்றல் இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கு.

நேற்றிலிருந்து போனை வைக்கவே முடியவில்லை. எல்லோரும் போன் பண்ணி ரொம்ப சிறப்பாக பண்ணிட்டீங்கனு பாராட்டிட்டே இருக்காங்க. சமூக வலைதளங்கள்ல இன்னும் பாராட்டுகள் வந்துட்டே இருக்கு. நம்பர் ஒன் முதலமைச்சர் அப்படிங்கிறதுல எனக்கு அதிக பெருமையோ, பாராட்டோ நெனைக்கல. என்னைக்கு நம்பர் ஒன் தமிழ்நாடு என்று வருகிறதோ அன்றைக்குத்தான் எனக்குப் பெருமை. அதையும் நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின் என்பதை இந்த நேரத்தில் உறுதியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏன்னா நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்று கூறினார்.