Published:Updated:

`பச்சைப்பொய் பேசும் ஆளுநர் முதல் தடா, பொடாவையே பார்த்தவர்கள் வரை’ - முதல்வர் ஸ்டாலினின் முழு உரை

தி.மு.க கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

``ஒன்றிய அளவில் ஒற்றுமையை உருவாக்கி உன்னதமான அரசை தலைநகர் டெல்லியிலும் அமைப்போம்.” - தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Published:Updated:

`பச்சைப்பொய் பேசும் ஆளுநர் முதல் தடா, பொடாவையே பார்த்தவர்கள் வரை’ - முதல்வர் ஸ்டாலினின் முழு உரை

``ஒன்றிய அளவில் ஒற்றுமையை உருவாக்கி உன்னதமான அரசை தலைநகர் டெல்லியிலும் அமைப்போம்.” - தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்லாவரம் - கன்டோன்மென்ட் பகுதியில் நேற்று நடைபெற்ற தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசிய முழு உரை பின்வருமாறு...

’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், உங்கள் பேரன்போடு முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ஆறாவது முறையாக அன்னைத் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது – சீரோடும் சிறப்போடும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘திராவிட மாடல்‘ அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 1,222 பொதுக்கூட்டங்களை இன்றும், நாளையும், நாளை மறுநாளும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மூன்றே நாள்களில் 1,222 கூட்டங்கள் நடைபெறுவது என்பது இதுவரை நடைபெறாத எண்ணிக்கை. இது ஒரு வரலாற்றுச் சாதனை. நமது சாதனைகளை 100 கூட்டத்திலோ 200 கூட்டத்திலோ சொல்லிவிட முடியாது. 1,000 கூட்டத்தில் சொல்லும் அளவுக்கு நாம் சாதனைகளைச் செய்திருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் பல்லாவரம் - கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமைப்படுகிறேன். இந்தக் கூட்டத்தை ஒரு மாவட்ட மாநாடுபோல் மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய மாவட்டச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

வீழ்ந்து கிடந்த இந்த தமிழ்ச் சமுதாயத்தைக் காக்க வந்த விடிவெள்ளியாம் பேரறிஞர் அண்ணா பிறந்தது காஞ்சிபுரம் மாவட்டம். அந்தக் காஞ்சிபுரத்தின் வரலாற்றில் புகழ்பெற்றது இந்தப் பல்லாவரம் பகுதி. ஒரு காலத்தில் இது பல்லவபுரம் என்று அழைக்கப்பட்ட பகுதி. கல்வெட்டுகளில் பல்லவபுரம் என்றுதான் இருக்கிறது. பல்லவ மன்னன் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கலைகள் வளர்ந்தது இந்தப் பல்லவபுரம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பழைய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி இந்தப் பகுதி. திருமங்கை ஆழ்வாரும் - பூதத்தாழ்வாரும் பாடிய திருநீர்மலை கோயில் இங்கேதான் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக காஞ்சிபுரம் வட்டாரத்துக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங், 'திராவிடத்தின் தலைநகராக காஞ்சி விளங்கியது' என்று எழுதியிருக்கிறார். அத்தகைய திராவிடத்தின் தலைநகரான, காஞ்சி மாவட்டத்தின் பல்லாவரத்தில் பேசுவது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தது தமிழ்நாடு... பத்தாண்டு காலம் பாழ்பட்டுக் கிடந்தது.

திமுக கூட்டம்
திமுக கூட்டம்

முதல் ஐந்தாண்டுக்காலம், தன்மீதான வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளில் இருந்தார் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். சிறைக்குப் போனார், திரும்பி வந்தார். அதன் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டார். மறைந்தும் போனார். பழனிசாமி - பன்னீர்செல்வம் - சசிகலா என்று பிரிந்து நின்று மோதியதன் காரணமாக அவர்களின் உட்கட்சிப் பதவிப் போட்டியில் தமிழ்நாடே அனைத்து வகையிலும் சீரழிந்தது. ஊழல் முறைகேட்டின் காரணமாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தை சூறையாடி சின்னாபின்னமாக ஆக்கினார்கள். தனது செயலின்மையால் நிதி நிர்வாகத்தையே பாழடித்தார்கள். கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற சூழலை உருவாக்கினார்கள். தூத்துக்குடியில் ஊர்வலமா... துப்பாக்கியால் சுட்டுக்கொல். பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையா... குற்றவாளிகளைக் கைதுசெய்யாதே. இவ்வாறு அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டிலேயே கொலை நடந்தது. கொள்ளை நடந்தது. மர்ம மரணங்கள் நடந்தது.

குட்கா விற்பனை ஏகபோகமாக இருந்தது. குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கியதாக அமைச்சர் மீதும், டிஜிபி மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் புகார் வந்து, அவர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்தது. தலைமைச் செயலாளர் வீட்டிலேயே ரெய்டு நடந்தது. இவை அனைத்துக்கும் மேலாக, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் எல்லாம் டெல்லி பா.ஜ.க தலைமையிடம் அடகுவைக்கப்பட்டிருந்தது.

1991-96-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலம் என்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஆட்சிக்காலமாக இருந்தது என்று சொன்னால் - அதைவிடவும் மிகமிக மோசமான காலமாக, 2016-21 அ.தி.மு.க ஆட்சிக்காலம் இருந்தது. விடியல் பிறக்காதா... திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் வராதா... என்று ஏங்கிக்கிடந்த தமிழ்நாட்டு மக்களின் தாகம் தீர்க்க 2021 மே மாதம் உதயமானதுதான் உதயசூரியன் ஆட்சி.

தி.மு.க கூட்டம்
தி.மு.க கூட்டம்

இந்த இரண்டாண்டுக்காலத்தில், பத்தாண்டுக்கால பாதாளத்தைச் சரிசெய்திருக்கிறோம்; ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் செய்து காட்டியிருக்கிறோம் என்பதை பல்லவ மன்னர்கள் உலவிய மண்ணில் நின்று கம்பீரமாகச் நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்ல விரும்புகிறேன். சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை – மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய கோட்பாடுகளின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ - அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருக்கிறோம். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சியானது அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக நாம் திட்டமிட்டோம்.

பொருளாதாரம் - கல்வி - சமூகம் – சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் `திராவிட மாடல்’ வளர்ச்சி. 'திராவிடம்' என்றால் காலாவதியான கொள்கை என்று சொல்லியிருக்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். அவருக்குச் சொல்வேன்... திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தைக் காலாவதி ஆக்கியது திராவிடம். வர்ணாசிரமத்தைக் காலாவதி ஆக்கியது திராவிடம். மனுநீதியைக் காலாவதி ஆக்குவது திராவிடம். சாதியின் பேரால் இழிவு செய்வதைக் காலாவதி ஆக்குவது திராவிடம். பெண் என்பதால் புறக்கணிப்பதைக் காலாவதி ஆக்குவது திராவிடம். இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்றேன்... ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் உண்டு. எத்தகைய அந்நியப் படையெடுப்புகளாக இருந்தாலும், ஆரியப் படையெடுப்புகளாக இருந்தாலும் - அதை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். அதனால்தான் ஆளுநர் அதைப் பார்த்து பயப்படுறார். ஆளுநர் அவர்களே… பயப்படத் தேவையில்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நான் முன்பு சொன்னதையே நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்... திராவிட மாடல் என்பது, எதையும் இடிக்காது. உருவாக்கும். எதையும் சிதைக்காது. சீர் செய்யும். யாரையும் பிரிக்காது. அனைவரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் தாழ்த்தாது. அனைவரையும் சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது. தோளோடு தோள் நின்று அரவணைக்கும். அப்படிப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சியை நோக்கிய பயணமானது வெற்றிப் பயணமாக – ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு மட்டும், 647 நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் 8,549 கிலோமீட்டர் தொலைவுக்கு நான் சுற்றி வந்திருக்கிறேன். அரசு நலத்திட்ட விழாக்கள் மூலமாக, ஒரு கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 355 பேர் பயனடைந்திருக்கிறார்கள். நேரடியாகப் பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை இது.

அதுமட்டுமல்ல, ஆளுநர் உரை அறிவிப்புகள், சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன்கீழ் நான் வெளியிட்ட அறிவிப்புகள், மாவட்ட விழாக்களில் செய்த அறிவிப்புகள், மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அறிவித்த அறிவிப்புகள், அரசு செய்தி வெளியீடு அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை, அமைச்சர் பெருமக்களால் மானியக் கோரிக்கைகளின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்று… இதுவரை அறிவிக்கப்பட்டதில் 85 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன. உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டில் எவ்வாறு வளர்ச்சி அடைந்தோம் என்றால் - சொன்னதைச் செய்தோம்; அதனால் வளர்ந்திருக்கிறோம். அதுதான் உண்மை. இன்னும் சொன்னால், சொல்லாததையும் செய்திருக்கிறோம். அதுதான் பெரிய உண்மை. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அண்மையில் மாநிலங்களின் வளர்ச்சிநிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அ.தி.மு.க-வின் பத்து ஆண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் மட்டும்தான் வழங்கப்பட்டன. ஆனால் நாம், நம்முடைய அரசு, நம்முடைய கழக அரசு ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, இந்த இரண்டு ஆண்டு காலத்திலேயே 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை நாம் வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமா, மகளிருக்கு `இலவசப் பேருந்து’, மாணவர்களுக்கு `காலைச் சிற்றுண்டி’, 234 தொகுதியிலும் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்’, நகர்ப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், `இல்லம் தேடிக் கல்வி’, `மக்களைத் தேடி மருத்துவம்’, `நான் முதல்வன்’, `இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், சமத்துவபுரங்கள், உழவர் சந்தைகள், அரசு முன் மாதிரிப்பள்ளிகள், பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், கோவில் நிலங்கள் மீட்பு, 21 கலை அறிவியல் கல்லூரிகள், 12 புதிய ஐடிஐ நிறுவனங்கள், காவல் ஆணையம், சிறுகுறு புத்தாக்க நிறுவனங்கள், போதைப் பொருள் ஒழிப்பு, ஆன்லைன் ரம்மி ஒழிப்புச் சட்டம், புதுமைப்பெண், நீட் தேர்வு விலக்குச் சட்டம், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம், இப்படி இன்னும் ஏராளமான சாதனைகளை நாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். ஒரு சில திட்டங்களைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். துறைவாரியாகச் சொன்னால் நேரம் ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 616 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன. 217 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 311 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்திலிருந்து, இப்போது 3-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது தமிழ்நாடு. அண்மையில், "ஸ்டார்ட் அப் இந்தியா" வெளியிட்ட தரவரிசைப் பட்டியலிலும் பல படிகள் முன்னேறி சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக, "லீடர்" என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது தமிழ்நாடு. இவை அனைத்தும் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை உயர்த்திச் சொல்கின்றன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் அதிகமாகியிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்திருக்கிறது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். நான் ஏனோ தானோ என்று சொல்லவில்லை. மக்களின் வாங்கும் திறன் தமிழ்நாட்டில் அதிகமாகியிருக்கிறது. சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்ததுதான் 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உணவுப்பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடுகளை அடையும் மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால் பணவீக்கம் குறைந்து வருகிறது என்று ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாம் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றன. இதே வேகத்தில் போனால், தமிழ்நாடு தன்னிகரற்ற மாநிலமாக உயர்ந்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதைப் பார்த்துத்தான் சிலருக்கு வயிறு எரிகிறது. இந்த மோசமான நிதிநிலைமையைக்கூட சீர்செய்துவிட்டார்களே - நிர்வாகத்தைச் சீர்படுத்தி விட்டார்களே என்று சிலர் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அய்யோ தமிழ்நாடு எந்தக் கலவரமும் இல்லாமல் இருக்கிறதே - அமைதிப்பூங்காவாக இருக்கிறதே - தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான புதிய தொழில்கள் வருகிறதே - நாம் இனி பொழப்பு நடத்த முடியாதே என்று பொறாமையிலும் வன்மத்தோடும் அவர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகள் பேசுவதைப் பற்றி நான் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அவர்கள் அப்படித்தான் பேசியாக வேண்டும். ஆனால், அரசு நிர்வாகத்தின் அங்கமாக இருக்கின்ற ஆளுநர் எதற்காக எதிரிக்கட்சித் தலைவரைப்போல செயல்பட வேண்டும்... எந்த நோக்கத்துக்காக அவர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்... மாநிலத்தில் நிலவும் அமைதியைக் குலைக்க வந்திருக்கிறாரா... தமிழ்நாட்டின் சமூகச் சூழலை ஏதாவது பேசி குழப்புவதற்காக அவரை அனுப்பிவைத்திருக்கிறார்களா என்பதுதான் மக்களின் சந்தேகமாவும், கருத்தாகவும் இருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால், ஆளுநர் அவர்கள் ஆங்கில நாளேட்டுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் நமது அரசுமீது பல்வேறு அவதூறான கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதே பேட்டியில், முதலமைச்சர் அவர்கள் நல்ல மனிதர் என்றும், என்னிடம் அன்பாக நடந்துகொள்கிறார் என்றும், நானும் அவரிடம் அன்பாக நடந்துகொள்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அதற்காக ஆளுநர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் – நட்பு பாராட்டுவதுதான் தமிழர் பண்பாடு என்பதைத்தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் நம்முடைய தலைவர் கலைஞரும் எங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில், எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் நான் அந்தப் பண்பிலிருந்து இம்மியளவும் விலகிப் போக மாட்டேன். ஆனால், அதே நேரத்தில், நட்பையும் கொள்கையையும் குழப்பிக்கொள்ள மாட்டேன். தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன். அதில் என்றும் உறுதியாக இருப்பான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கடந்த ஜனவரி மாதம் 9-ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உரையாற்ற வந்த ஆளுநர் அவர்கள், நாம் தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல், அதை மாற்றி வாசித்தார். நாம் எழுதித் தந்ததை விட்டுவிட்டும் - அவராகச் சில செய்திகளைச் சேர்த்தும் வாசித்தார். அவருக்கு அவை நடவடிக்கைகள் பற்றி, மரபைப் பற்றித் தெரியவில்லை.

அப்படி அவர் நடந்துகொண்டது அவையின் உரிமையை மீறிய செயல் என்பதால்தான், நாம் தயாரித்து அனுப்பிய உரையே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினோம். அவையின் மாண்பைக் காப்பதற்கு இதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. நாட்டுப் பண்ணுக்குக்கூட காத்திருக்காமல் வெளிநடப்பு செய்தார் ஆளுநர் அவர்கள். அப்போது சட்டமன்றத்தில் பேசிய நான், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும் - மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் - நூற்றாண்டைக் கடந்த நம்முடைய சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் - நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இம்மாமன்றமும் - என்னை இந்தச் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்ப் பெருமக்களும் நன்கு அறிவார்கள்" என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே சொன்னவன் நான். தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட உரையை ஏன் வாசிக்கவில்லை, திருத்தினேன் என்பதைப் பொதுவெளியில் மிக நீண்ட பேட்டியாக ஆளுநர் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

திமுக கூட்டம்
திமுக கூட்டம்

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இல்லை என்று ஆளுநர் அவர்கள் அதில் சொல்லியிருக்கிறார். மிஸ்டர் ஆர்.என்.ரவி அவர்களே… நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன். பா.ஜ.க ஆளுகின்ற மணிப்பூர் மாநிலம் இன்று பற்றி எரிகிறதே – அதுபோல தமிழ்நாடு பற்றி எரிகிறதா... என்ன பேசுகிறார் ஆளுநர்... சில நாள்களுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் கலவரம் நடந்ததே... அது பா.ஜ.க ஆளும் மாநிலம்தானே... அதுபோல இங்கு நடந்ததா... பி.எப்.ஐ என்ற அமைப்பைத் தடை செய்ததைத் தொடர்ந்து வன்முறை நடந்ததாகச் சொல்கிறார். அந்த சம்பவங்களில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. தொடர்புடைய 16 பேரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார்கள். 6 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள்.

23.09.2022 அன்று, கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தோம். தொடர்புடையவர்களைக் கைதுசெய்தோம். அன்றைய தினமே வழக்கு பதிந்தோம். மூன்றாவது நாளிலேயே தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இது தமிழ்நாட்டின் Record Break. கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட வன்முறைச் சம்பவத்தில் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து துப்பாக்கிச் சூடு இல்லாமல், சில மணி நேரத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்தியது நம்முடைய தமிழ்நாடு காவல்துறை. அன்றைய தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு யாராவது மரணம் அடையும் சூழல் ஏற்பட்டிருந்தால் அதையும் குறையாக ஆளுநர் சொல்லியிருப்பார். ஆனால், அது போன்ற ஒரு சூழல் உருவாகாமல் தடுத்தது நம்முடைய அரசு. தி.மு.க கூட்டத்தில் பெண் காவலருக்குத் தொல்லை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் கைதுசெய்தோம். கட்சியை விட்டே நீக்கினோம். சொந்தக் கட்சிக்காரர் என்பதற்காகக் குற்றம்சாட்டப்பட்டவரை நான் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சர்வதேசப் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு தமிழ்நாட்டுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆளுநர் சொல்கிறார். தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அப்படி எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அப்படி ஒரு தகவல் வந்திருக்கிறது. அதற்கும் தி.மு.க ஆட்சிக்கும் தொடர்பே இல்லை. பிறகு எதற்காக பழைய சம்பவங்களைச் சொல்லி, தி.மு.க ஆட்சிக்கு ஆளுநர் களங்கம் ஏற்படுத்துகிறார்... 19.4.2022 அன்று தர்மபுரம் ஆதினத்துக்கு தான் போனபோது தனது வாகனம் வழிமறித்து தாக்கப்பட்டதாக ஆளுநர் அபாண்டமாக பொய் சொல்கிறார். பச்சைப் பொய், அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்று சொல்வார்களே… அவரது வாகனம் சென்ற பிறகுதான் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் கையில் இருந்த கொடிகளை வீசியது வீடியோவில் பதிவாகியிருக்கிறது. ஆளுநரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்க்க முடியாத வகையில் போலீஸ் வாகனங்களுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டார்கள் என்பதும் வீடியோவில் தெளிவாக பதிவாகியிருக்கிறது. தனது வாகனம் வழிமறிக்கப்பட்டதாக அவர் சொல்வது பச்சைப் பொய். இப்படிக் கறுப்புக்கொடி காட்டியது தி.மு.க-காரர்கள் இல்லை. கறுப்புக்கொடி காட்டிய பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் 73 பேரை அன்றே கைதுசெய்தது கழக அரசு.

அதேபோன்று, சிதம்பரத்தில் நடந்த குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்கை முன்வைத்து ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அவருக்கு அப்போதே பதில் கடிதம் அனுப்பியிருக்கிறோம். ஆனால், பதில் அனுப்பவில்லை என்று ஒரு அபாண்டமான பொய் சொல்கிறார் ஆளுநர். நேற்று முன்தினம் காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி இது தொடர்பாக தெளிவாக பதிலளித்து அறிக்கை கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். சிதம்பரத்தில் குழந்தைத் திருமணங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததால் வழக்கு பதியப்பட்டது. இதில் இவருக்கு என்ன வந்தது... குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. யார்மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறாரா... அந்தக் காலத்தில் 7 வயதில், 8 வயதில் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தார்களே அத்தகைய சனாதன காலத்தை உருவாக்க நினைக்கிறாரா... 13 வயது சிறுமிக்கும் - 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது தவறு. அதனால்தான் 11 பேர் கைதுசெய்யப்பட்டார்கள். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார் ஆளுநர்... குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறாரா... இதைக் கண்காணிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டுக்கு இவர் வந்திருக்கிறாரா?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அவர் சொன்னதில் இன்னொரு விநோதமான புகார் என்னவென்றால்... மதுரையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்கள்தான் வாங்குகிறோம். இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய மொழிகளின் புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம்... குஜராத் மாநில நூலகத்தில் தமிழ் புத்தகங்களை வைப்பார்களா... நாகாலாந்து ஆளுநராக இருந்தாரே அங்குள்ள நூலகத்தில் எல்லாம் எல்லா மொழிப் புத்தகங்களையும் வைக்கச் சொல்லி சட்டம் போட்டாரா... என்ன பேசுகிறார் ஆளுநர்... இன்னொன்று சொல்கிறார், அட்சயபாத்திரா திட்டத்தை எதற்காக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேட்கிறார். தமிழ்நாடு அரசே, காலைச் சிற்றுண்டித் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறோம். பிறகு எதற்காக தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டும்... இவர் எதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஊதுகுழலாக மாறுகிறார்... அதற்கு என்ன அவசியம் வந்தது... ஏற்கெனவே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெழுத்துப் போடாமல் இழுத்தடித்தவர் இந்த ஆளுநர். யாரோ சிலரின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற சந்தேகம்தான் இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் வலுப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்துகொண்டு ஆட்சி நடத்தப் பார்க்கிறார் ஆளுநர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பாதி அதிகாரங்கள் கவர்னர்களிடமும் கவர்னர் ஜெனரல்களிடமும் இருக்கும். பாதி அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளிடம் இருக்கும். அதை மாற்றி, முழுமையான மக்களாட்சியை உருவாக்கியதுதான் இந்தியாவின் விடுதலைப் போராட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மையக் கரு என்பதே மக்களாட்சிதான். ஒன்றிய அரசை ஆளும் அதிகாரம் இந்தியாவின் தலைமை அமைச்சரான பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் இருக்கிறது. அதேபோல், மாநிலத்தை ஆளும் அதிகாரம், மாநிலத்தின் முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் இருக்கிறது. சட்டத்தை இயற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும்தான் இருக்கிறது. இதை மாற்றி, தனக்கு ஏதோ சர்வ அதிகாரங்களும் இருப்பதைப்போல ஆளுநர் அவர்கள் நினைத்துக்கொள்கிறார். ஏராளமான சட்டங்களையும், சட்டத் திருத்தச் சட்டங்களையும் நிறைவேற்றுகிறோம் என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் நிறைவேற்றுவது இல்லை. அனைத்துமே அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டே நிறைவேற்றப்படுகின்றன. அதில் ஆளுநருக்கு சந்தேகம் இருந்தால், மாநில அரசிடம் விளக்கம் கேட்கலாம். அதைச் சொல்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அப்படி விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

திமுக கூட்டம்
திமுக கூட்டம்

மாறாக, பரிசீலனை செய்கிறேன் என்கிற போர்வையில் சட்ட மசோதாக்களை எல்லாம் ஊறுகாய்ப் பானையில் போட்டு ஊற வைக்கின்ற மாதிரி ஆளுநர் மாளிகையில் முடக்க நினைத்தால் அதைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உண்டு. இது எனது அதிகாரம் மட்டும் அல்ல, மக்களின் அதிகாரம். எனது உரிமை மட்டுமல்ல, மக்களின் உரிமை. அதனால்தான், இப்படி நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தின் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அவையில் இருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் அது. கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் இதை ஆதரித்து எனக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இது மிகச் சரியான தீர்மானம் என்பதை வழிமொழிந்திருக்கிறார்கள்.

இது ஏதோ தனிப்பட்ட ஸ்டாலினுக்கும், ஆர்.என்.ரவிக்குமான பிரச்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் பிரச்னை மட்டுமல்ல. இது இந்தியாவின் பிரச்னை. இந்திய மக்களாட்சியின் பிரச்னை. கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்பிவைத்த மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டத்தை ஒரு நியமன ஆளுநர் நிறுத்திவைப்பார் என்றால், அதைவிட மக்களாட்சிக்கு வேறு அவமானம் இருக்க முடியுமா... ஆளுநர் கையெழுத்து தேவை என்பதையே அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நீக்க வேண்டாமா... அதற்கான குரலைத்தான் எழுப்பிவருகிறோம். இதையும் இந்த திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் காட்டும். ஆளுநர் மூலமாகவோ - வேறு எதன் மூலமாகவோ எங்களை அச்சுறுத்த நினைத்தால் அதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். மொழிப்போரை பார்த்தவர்கள். மிசாவைப் பார்த்தவர்கள். தடாவைப் பார்த்தவர்கள். பொடாவைப் பார்த்தவர்கள். இதையெல்லாம் பார்த்து நாங்கள் மிரள மாட்டோம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

எங்களுக்கு என்று ஓர் இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கிய பயணத்தை எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் எவருக்கும் அஞ்சாமல் செய்துகாட்டுவோம். கட்சி என்பது செயல் திட்டங்களை வகுப்பதற்கு - ஆட்சி என்பது அந்த திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவதற்கு. இந்த இரண்டும் எனது தோளில் சுமத்தப்பட்டிருக்கிறது. தமிழினத் தலைவர் கலைஞரின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் துணையோடு – நான் எனது பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். ஆட்சியாக இருந்தாலும் - கட்சியாக இருந்தாலும் - தொண்டர்கள் என்னோடு இருக்கிறார்கள் என்ற துணிச்சலில்தான் நான் இருக்கிறேன். ஏனென்றால் இளைஞரணித் தொண்டர்களால் வளர்க்கப்பட்டவன் நான். இளைய சக்திகளால் வளர்க்கப்பட்டவன் நான். இன்றும் இளமையோடு நான் வேகத்தோடும், உறுதியோடும் செயல்பட தொண்டர்கள் கொடுக்கும் உற்சாகமும் ஊக்கமும்தான் காரணம். என் முகத்தைப் பார்க்கும்போது நீங்கள் எத்தகைய மலர்ச்சியை அடைகிறீர்களோ - அதே மகிழ்ச்சியை உங்களை நான் பார்க்கும்போதும் அடைகிறேன். மழையைப் பார்த்து மண் மலர்வதைப் போன்றது நம்முடைய உணர்வு.

திமுக கூட்டம்
திமுக கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம், கறுப்பு சிவப்புக் கொடி, உதயசூரியன் சின்னம், முரசொலி என்ற நமது போர்வாள், அறிவாலயம் என்ற கற்கோட்டை, இந்த ஐந்தையும் காக்கும் கோடிக்கணக்கான தொண்டர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன். நாம் கரம் கோத்து கழகம் காப்போம். கட்சியைக் காப்போம். இவை இரண்டின் மூலமாக தமிழ்நாட்டு மக்களைக் காப்போம். இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டுவோம். தமிழ்நாட்டை முன்னேற்றுகின்ற திராவிட மாடலை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்ப்போம். ஒன்றிய அளவில் ஒற்றுமையை உருவாக்கி உன்னதமான அரசை தலைநகர் டெல்லியிலும் அமைப்போம். அத்தகைய நாடாளுமன்றத் தேர்தல் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. தயாராவோம்” என்று முடித்தார்.