Published:Updated:

``இந்திக்குத் தாய்ப்பாலும், பிற மொழிகளுக்குக் கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது..!" - ஸ்டாலின் காட்டம்

மு.க.ஸ்டாலின்

``இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

``இந்திக்குத் தாய்ப்பாலும், பிற மொழிகளுக்குக் கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது..!" - ஸ்டாலின் காட்டம்

``இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published:Updated:
மு.க.ஸ்டாலின்

மத்திய அரசைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள்கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ‘ஒரே நாடு’ என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக்குழு கடந்த மாதம் அளித்திருக்கும் அறிக்கையில் (11-வது தொகுதி) மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் இருக்கும் இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் பலவும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

அமித் ஷா
அமித் ஷா

இந்தி பேசும் மாநிலங்கள் எனும் `A' பிரிவு மாநிலங்களில் இதை முழுமையாகச் செயல்படுத்தி, ஓரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதைத் தொடர்வதுடன், இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதில் அடங்கியிருக்கிறது. இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தியைப் பயிற்றுவிப்பதற்கான பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அச்சுறுத்தல் தொனியில் பரிந்துரைகள் அமைந்திருக்கின்றன.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் சம உரிமையைக்கொண்ட மொழிகள். இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்கவேண்டிய அவசரமோ, அவசியமோ எங்கிருந்து வந்தது?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்... இந்தி படித்தால் மட்டுமே வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது, அதிகாரிகளோ அலுவலர்களோ இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தலைமையிலான நாடாளுமன்றக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.

‘பாரத் மாதா கி ஜே’ என்று நாடாளுமன்ற அவையில் அதை ஒரு அரசியல் கோஷமாக்கிக் குரல் எழுப்பிக்கொண்டே, இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடியது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது. மொழிவழிப் பண்பாடு இருக்கிறது. அந்தத் தனித்துவமான பண்பாட்டுச் சிறப்பைப் பாதுகாக்கவும், இந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காப்பதற்குமான வேலியாகத்தான் ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி, ஒன்றிய அரசின் இணை அலுவல் மொழியாக நீடிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் 1957-ம் ஆண்டில் முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குச் சென்றபோதே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கான உரிமையையும் பாதுகாப்பையும் வலியுறுத்திக் குரல் கொடுத்தது.

``இந்திக்குத் தாய்ப்பாலும், பிற மொழிகளுக்குக் கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது..!" - ஸ்டாலின் காட்டம்

அதில் உள்ள நியாயத்தை ஏற்றுத்தான் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜனநாயகச் சிந்தனையுடனும், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும், `இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் நீடிக்கும்' என்கிற உறுதிமொழியை வழங்கினார்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைகொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள்மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்'’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டாலின்.