Published:Updated:

`தமிழ்வழிப் பள்ளி; முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்கும்!’ - குஜராத் முதல்வருக்கு பழனிசாமி கடிதம்

குஜராத் தமிழ்ப் பள்ளி
குஜராத் தமிழ்ப் பள்ளி ( Karthikeyan K )

`குஜராத் தமிழ்வழிப் பள்ளிக்கூடத்துக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது’ என முதல்வர் பழனிசாமி கடிதத்தின் மூலம் குஜராத் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத், மணி நகரில் கடந்த 1971-ம் ஆண்டு, தமிழ்வழியில் கற்பிக்கும் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறைந்ததாகக் கூறி, அந்தப் பள்ளியை அம்மாநில அரசு மூடுவதற்கு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அதில், ``அகமதாபாத் நகரில் தமிழ்வழியில் நடத்தப்பட்டுவரும் பள்ளிக்கூடம், மாணவர்களின் சேர்க்கைக் குறைவு காரணமாக திடீரென மூடப்படுவது குறித்து வருத்தமடைந்தேன். இந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டால், அந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும். தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். குஜராத்தில் வசிக்கும் தமிழ்ச் சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

`எங்கள் சாதனைகளை எடுத்துச் சொல்ல ஸ்டாலின் உதவுகிறார்!’ - எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

ஆகவே, நீங்கள் தலையிட்டு, அந்தப் பள்ளிக்கூடம் தொடர்ந்து நடைபெறச் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிக்கூடத்துக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. தமிழ் மொழி, சிறுபான்மையினரின் கல்வி உரிமைகளை குஜராத் அரசு பாதுகாக்கும் என நம்புகிறேன்’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.

குஜராத் தமிழ் பள்ளி
குஜராத் தமிழ் பள்ளி
Karthikeyan K

தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ்வழியில் கற்பிக்கும் மேல்நிலைப் பள்ளி மூடப்படுவதற்கு தங்களின் வருத்தத்தை தெரிவித்ததோடு, தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்துவருகிறார்கள். குஜராத் மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு