'கறுப்புப் பண, கள்ளப் பண சந்தைக்காரர்கள் தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்குத்தான் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவிசெய்திருக்கிறது' என கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` `2016 நவம்பர் 8-ல் மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்’ என ஆறு ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதில், நீதிபதி பி.வி.நாகரத்தினம்மா, `பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது செல்லாது!’ என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார். தீர்ப்பு வழங்கிய மற்ற நான்கு நீதிபதிகள், `பண மதிப்பிழப்புத் திட்டத்துக்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள்படும் அவதி வேதனையாக இருக்கிறது.
அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை’ என்று கூறியதோடு, இந்த நடவடிக்கையை எடுக்க ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 26(2)-ன்படி மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறியிருக்கிறது. ஆனால், அந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரிசைகொண்ட ரூபாய் நோட்டுகளை மட்டுமே பண மதிப்பிழப்பு செய்ய இந்தப் பிரிவு அனுமதி அளிக்கிறது. அப்போது, புழக்கத்திலிருந்த 86 சதவிகிதம், அதாவது ரூ.17,67,000 கோடி மதிப்புள்ள ரூபாய் 500, 1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன.

இதையடுத்து, 125 கோடி மக்கள்தொகைக்கு ரூபாய் 2,00,000 கோடி எஞ்சிய கரன்சி நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டன. ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய பரிந்துரையின் பேரில்தான் மத்திய அரசு செயல்பட முடியும். ஆனால், அதற்கு மாறாக மத்திய அரசு முடிவுசெய்து ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்து அதன்மீது பண மதிப்பிழப்பு நடவடிக்கை அவசர அவசரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது, மத்திய வாரியத்தில் 10-ல் ஏழு பதவிகள் காலியாக இருந்தன. மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு ரிசர்வ் வங்கி பணிந்திருக்கிறது.
சாதாரணமாக ரெப்போ ரேட், பொருளாதார கொள்கைகள் ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி இரண்டு நாள்கள், மூன்று நாள்கள் விவாதித்துத்தான் முடிவெடுக்கிறது. ஆனால், நாட்டில் புழக்கத்திலிருந்த 86 சதவிகித நோட்டுகளை நீக்குவது என்கிற முடிவை மத்திய அரசின் நிர்பந்தத்தின் பேரில் ஏனோதானோ என்று அவசரக்கோலத்தில் முடிவெடுத்து தனது சுயாட்சி தன்மையைக் கேலிக்குரியதாக ஆக்கிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது ரூ.15,44,000 கோடி புழக்கத்தில் இருந்தது. அதில் ரூ.15,31,000 கோடி திரும்ப வந்துவிட்டது.
ரூ.12,87,700 கோடி திரும்ப வரவில்லை. இதற்கு மாறாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க, ரூ.12,677 கோடி செலவு ஆகியிருக்கிறது. இந்த வகையில், ரூ.100 கோடி மட்டுமே அரசுக்குப் பலனாகக் கிடைத்திருக்கிறது. கறுப்புப் பண, கள்ளப் பணச் சந்தைக்காரர்கள் தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்குத்தான் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவி செய்திருக்கிறது. அதற்கு மாறாக, 2015-16-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.01 சதவிகிதத்திலிருந்து 2017-18 இல் 6.5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது.
இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முயன்றவர்களில் 140 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 35,00,000 பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் 50 சதவிகிதம் நசிந்து லட்சக்கணக்கான பேர் வேலை இழந்திருக்கின்றனர். ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களின்படி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக கடந்த 2016, நவம்பர் 4-ம் தேதி நாட்டின் மொத்த ரூபாய் நோட்டுப் புழக்கம் ரூபாய் 17.74 லட்சம் கோடியாக இருந்தது.

ஆனால், அது தற்போது டிசம்பர் 2022-ல் படிப்படியாக அதிகரித்து ரூ.32.42 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் 83 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. எனவே, பிரதமர் அறிவித்தபடி கறுப்புப் பணமோ, கள்ளப் பணமோ, பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்தபாடில்லை. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரிப்பதற்கு மாறாக மக்களிடையே பணப் புழக்கம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதாரப் பேரழிவுக்கும், மக்கள்மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகவும்தான் அமைந்துவிட்டது.
உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்குப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டா இல்லையா என்பது குறித்துதான் தீர்ப்பு வழங்கியதே தவிர, இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்தோ, மக்கள் சந்தித்த துன்பங்கள் குறித்தோ தீர்ப்பில் கூறப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோதப் பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது" எனத் தெரிவித்திருக்கிறார்.