Published:Updated:

``தேசியக்கொடிமீது பாஜக-வுக்கு திடீர் பற்று ஏன்..?" - கே.எஸ்.அழகிரி கேள்வி

கே.எஸ். அழகிரி

``இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது'' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

``தேசியக்கொடிமீது பாஜக-வுக்கு திடீர் பற்று ஏன்..?" - கே.எஸ்.அழகிரி கேள்வி

``இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது'' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கே.எஸ். அழகிரி

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியை சமூக வலைதள கணக்குகளில் புரொஃபைல் படமாக வைக்கவும், வீட்டு வாசல்களில் தேசியக்கொடியேற்றவும் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

இந்த நிலையில், இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், `` இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது. இந்தியாவின் தேசியக்கொடியில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற ஈடுபாட்டையும் பங்களிப்பையும் எவரும் மறுத்திட இயலாது. ஆனால், தேசியக்கொடியின்மீது பா.ஜ.க-வுக்கு திடீர் பற்று ஏற்பட்டு, அதற்குச் சொந்தம் கொண்டாட முயல்கிறது. தேசியக்கொடியை பா.ஜ.க உள்ளிட்ட எவரும் ஏற்றுக்கொள்வது குறித்து நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், திடீரென்று அந்தப் பற்று ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டவேண்டிய கடமை நமக்கு உண்டு.

தேசியக்கொடி
தேசியக்கொடி

நாகபுரியில் 1925-ல் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் பா.ஜ.க-வின் தாய் ஸ்தாபனம். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட அரசியல் இயக்கம்தான் முதலில் ஜனசங்கமாகத் தொடங்கி, தற்போது பாரதிய ஜனதாவாகச் செயல்பட்டுவருகிறது. ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறதோ, அதைத்தான் அடல்பிகாரி வாஜ்பாய் செய்தார். அதே பாதையில்தான் பிரதமர் மோடியும் செயல்பட்டுவருகிறார். மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி வாக்குவங்கியை விரிவுபடுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தம். அத்தகைய சீர்குலைவுச் சக்திகள் திடீரென தேசியக்கொடிக்குச் சொந்தம் கொண்டாடுவது நமக்கு வியப்பைத் தருகிறது.

பா.ஜ.க-வின் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் எத்தனை முறை தேசியக்கொடியை ஏற்றிக்கொண்டாடியிருக்கிறார்கள்... ஆகஸ்ட் 15, 1947, ஜனவரி 26 1950 ஆகிய இரண்டு நாள்களைத் தவிர, 52 ஆண்டுகள் தொடர்ந்து தேசியக்கொடியை ஆர்.எஸ்.எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை?

மோடி
மோடி

தேசியக்கொடிமீது அவர்களுக்கு உண்மையான பற்று இல்லை என்பதைத்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் இத்தகைய அலட்சியப் போக்கு நமக்கு உணர்த்துகிறது.

எனவே, விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வினர் வருகிற ஆகஸ்ட் 15 அன்று தேசியக்கொடிக்கு உரிமை கொண்டாடுகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். தேசியக்கொடியை அவர்கள் மதித்து ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய தேசிய காங்கிரஸுக்கு ஆகஸ்ட் 15 அன்று கோலாகலமாகக் கொண்டாடுவதற்கும், தேசியக்கொடியைச் சொந்தம் கொண்டாடுகிற உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டுமென மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும், காங்கிரஸ் நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.