Published:Updated:

தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு கட்... தமிழக அரசு கேபிள் டிவி-க்குத் தீர்ப்பாயம் செக்!

மலையரசு

தமிழக அரசு கேபிள் டிவிக்கு அபராதம் விதித்து TDSAT தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கேபிள்
தமிழக அரசு கேபிள்

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த மாதம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. ``சென்னை, மதுரை போன்ற பெரு மாநகராட்சிகளில் ஊழல் அதிகமாகிவிட்டது. இதனால் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளை பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக மாநகராட்சி கமிஷனர் அம்பலப்படுத்த வேண்டும்'' என்று வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக அரசு கேபிள்
தமிழக அரசு கேபிள்

இந்த உத்தரவை மேற்கோள்கட்டி ``மதுரை மாநகராட்சி ஊழல், தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவார்களா அதிகாரிகள்?'' என்ற தலைப்பில் கடந்த மாதம் 11-ம் தேதி சத்தியம் டிவியில் விவாத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அன்று இரவே தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பல நாள்களாக அதன் ஒளிபரப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த விஷயத்தை அந்தத் தொலைக்காட்சியின் நேயர்கள் 3 பேர் TDSAT எனப்படும் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தில் வழக்காகத் தொடர்ந்தனர். வழக்கு தொடர்ந்த பிறகு, 30-ம் தேதி தொலைக்காட்சி ஒளிபரப்பு மீண்டும் தொடங்கியது. அதையடுத்து மீண்டும் ஒளிபரப்பியதைச் சுட்டிக்காட்டி வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அரசு கேபிள் சார்பாக கோரப்பட்டது. கோரிக்கையின்படி மனுவை டிஸ்மிஸ் செய்தாலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்ரேஷனுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து தொலைத்தொடர்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அபராதம்
அபராதம்

இரண்டு வாரத்தில் அரசு கேபிள் டிவியின் மீது வழக்கு தொடர்ந்த சிங்காரவேல் என்பவருக்கு அந்தத் தொகையைத் தர வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 2007-ம் ஆண்டு அரசு கேபிள் ஆரம்பித்த பிறகு, அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு TDSAT அபராதம் விதித்துள்ளது இதுவே முதல்முறை. இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். ``இதுகுறித்து பேச விரும்பவில்லை'' என்றதோடு முடித்துக்கொண்டனர்.