Published:Updated:

கொரோனா தொகுப்பு திட்டத்தில் ரூ.88 கோடி நஷ்டம்! - ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரிக்கு விளக்கமளித்த அரசு

ஜூனியர் விகடன் அட்டைப்படம்
ஜூனியர் விகடன் அட்டைப்படம்

கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் டெண்டரில், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பற்றிய புரிதல் இல்லாமல், தவறாகக் கொள்முதல் செய்ததால் அரசுக்கு 88 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜூனியர் விகடனில் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்திக்கு அரசுத் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணத் தொகுப்பு வழங்கும் திட்டத்தில், தவறான ஜி.எஸ்.டி வரிக்கொள்கையால் அரசுக்கு சுமார் 88 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை, 13.06.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘சர்ச்சையில் அதிகாரிகள் நியமனம்; அலட்சியத்தால் அரசு இழந்த 88 கோடி - சறுக்குகிறாரா ஸ்டாலின்?’ என்கிற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இந்த விவகாரம் தமிழக அரசியலிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜாராமன் புகாருக்கு விளக்கமளித்து நமக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவர் அளித்திருக்கும் விளக்கங்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

1. 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டத்தில், கோவிட் பெருந்தொற்று நேரத்தில் அனைத்து மக்களுக்கும் குறுகிய காலத்தில், பொருள்கள் விரைவில் வழங்கப்பட வேண்டிய அவசியம் மற்றும் தனித்தனியாக மளிகைப் பொருள்களை கொள்முதல் செய்து அவற்றைத் தொகுப்பாக்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகத்தான் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாகக் கொள்முதல் செய்யாமல், தொகுப்பாகச் சேர்த்து கொள்முதல் செய்யும் முடிவு, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நிர்வாக நலன் கருதி எடுக்கப்பட்டது.

கொரோனா நிவாரண மளிகைத் தொகுப்புகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்
கொரோனா நிவாரண மளிகைத் தொகுப்புகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

2. தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை, 2000 சட்டம் மற்றும் விதிகளில் ஒப்பந்தப்புள்ளி கோரும்போது, விலையில் ஜி.எஸ்.டி வரி உள்ளடங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அல்லது சேவைகளை ஒன்றாகச் சேர்த்து, ஒரு தொகுப்பாக ஒரே விலையில் வழங்கும்போது, ஜி.எஸ்.டி விதிகளின்படி, அது Mixed supply என்று கருதப்படும். இதில் ஒவ்வொரு பொருள்களும் தனியாக விற்கக்கூடியவையாக இருக்கும். இவை மற்ற பொருள்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் தொகுதிப்பில், எந்த ஒரு பொருளுக்கு அதிக வரி விதிப்பு உள்ளதோ, அது வந்த முழுத் தொகுப்புக்கு வரியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சர்ச்சையில் அதிகாரிகள் நியமனம்... சறுக்குகிறாரா ஸ்டாலின்?

4. எனவே, கோவிட் - 19 நிவாரணத் தொகுப்பில் சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. (மளிகைப் பொருள்கள் தொகுப்பில் சோப்புக்கு அதிக அளவான வரி விகிதம் உள்ளது. அதாவது 18 சதவிகிதம்).

5. மேலும், தொகுப்பாகக் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரி, ஒப்பந்தப்புள்ளிகளின் முடிவின் பிறகு, நிபந்தனைகளை மாற்றியமைத்து, தனித்தனியாகப் பணி ஆணை வழங்கினால், அது ஒரு தனிநபருக்குச் சாதகமாக செயல்பட்டதாகக் கருத வாய்ப்புள்ளது.

ரேஷன் கடை விகடன்
ரேஷன் கடை விகடன்

6. மேற்கண்ட தொகுப்பு பொருள் வழங்கும் திட்டத்தில், மளிகைப் பொருள்களை தொகுப்பாகக் கொள்முதல் செய்து, தனித்தனியாகப் பணி ஆணை வழங்கினால், இதை முன்னுதாரணமாக வைத்து இதே போன்ற நிகழ்வுகள் தனியார்துறையில் எழ வாய்ப்புள்ளது. அதன் மூலம் அரசுக்குப் பல நூற்றுக்கணக்கான கோடி ஜி.எஸ்.டி வரி இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

7. அரசு நிறுவனத்தால், அரசுக்கு ஜி.எஸ்.டி வரி செலுத்தப்படுவதால் இதில் வருவாய் இழப்பு ஏதுமில்லை. 88 கோடி ரூபாய் எந்தத் தனிநபருக்கும் செல்லவில்லை. இதில், 44 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசுக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக திரும்பப் பெறப்படும். மீதமுள்ள 44 கோடி ரூபாயில், ஒரு பகுதி ஒன்றிய அரசிடமிருந்து பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகளில் ஒன்றாக மீண்டும் பெறப்படும்.

ஸ்டாலின் அரசு; ஏற்றமும் ஏமாற்றமும்! - ஒரு பார்வை!

8. ஜி.எஸ்.டி வரியை முறையாகச் செலுத்தி, வரி செலுத்துவதில் அரசே எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். எனவே, வரியைக் குறைப்பதற்காக அரசே ஒரு தொகுப்பிலுள்ள பொருள்களைப் பிரித்து வாங்கும் முறை, ஓர் அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் வரி இணக்கத்தை மேலும் பாதித்து, நாளடைவில் நூற்றுக்கணக்கான கோடி வரி இழப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நிதித்துறை, வணிகவரித்துறை போன்ற துறைகளை கலந்தாலோசித்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அலட்சியமும் இல்லை.

இவ்வாறு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜாராமன் நமக்கு அளித்திருக்கும் பதிலில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு