Published:Updated:

மதுரை:``எப்போது நடக்கும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் பணிக்கான தேர்வு?" - காத்திருக்கும் பட்டதாரிகள்.

 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் தேர்வு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் தேர்வு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் தேர்வை நடத்தாததால், அப்பணிக்காக தயாரகியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலருக்கான 777 பணியிடங்களுக்கு அறிவிப்பு செய்துவிட்டு தேர்வை நடத்தாதால் ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு பணிகள் தேங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஊரக வளர்ச்சித் துறை பணிகள் ( மாதிரி படம்)
ஊரக வளர்ச்சித் துறை பணிகள் ( மாதிரி படம்)

கடந்த அதிமுக ஆட்சி முடிவடையும் காலத்தில் இப்பணிகளுக்காக மாவட்ட அளவில் நேரடியாகத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்ட அரசு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் தேர்வை நடத்தாததால், அப்பணிக்காக தயாரகியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய விண்ணப்பதாரர்கள், "தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலருக்கான 777 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தவுள்ளதாக கடந்த ஆண்டு நவம்பரில் அரசு அறிவித்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான கல்வித்தகுதி உடையவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் தேர்வு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் தேர்வு

படித்துவிட்டு வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு விண்ணப்பித்தோம். என்ன காரணமோ தெரியவில்லை. டிசம்பரில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு பின்பு தள்ளி வைக்கப்பட்டது.

அடுத்து ஜனவரி, பிப்ரவரியில் தேர்வு நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். தேர்வுக்குழுவில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அறிவித்தனர். ஆனால், அதன் பின்னும் தேர்வு நடத்தவில்லை.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
உ.பாண்டி

அதற்குள் சட்டமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அப்படியே அந்த தேர்வு கிடப்பில் போடப்பட்டது. புதிய ஆட்சி வந்தபிறகாவது அந்த தேர்வை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாமான்ய மனிதர்களின் புகார்களைக்கூட உடனே தீர்த்து வைக்கிறார். அதுபோல் சாமான்ய குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளோம். தேர்வை நடத்த உத்தரவிடும் ஒரு கையெழுத்தால் 777 பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். அதனால் உடனே தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்.தேர்வை நடத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலி இடங்களை நிரப்பினால்தான் கிராமப்புற மக்களுக்கு அரசு அறிவித்துள்ள பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்களை சரியான முறையில் கொண்டு சேர்க்க முடியும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு