நாளை (ஜனவரி 26) இந்தியா முழுவதும் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஆளுநரின் குடியரசு தின வாழ்த்துக் குறிப்பில், ``அரசுப் பள்ளிகளின் நிலையை, தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் வரும் எதிர்மறையான வேறுபாடுகள் மிகுந்த கவலையளிக்கின்றன. ஏழை மாணவர்களால் தனியார் பள்ளிகளில் கல்வி பயில்வதென்பது மிகக் கடினமான ஒன்று. எனவே, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசரத் தேவையாக இருக்கிறது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீட் தேர்வின் மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆளுநர், ``மருத்துவத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டுக்கு முன்னர், நீட் தேர்வின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் தன் குறிப்பில் இறுதியாக, ``நம் மாநிலத்தின் உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரை மீண்டும் பெற நாம் உழைப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
