Published:Updated:

``நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டனர்!" - நாகர்கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆளுநர் ஆர்.என்.ரவி

"நம் நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்தது." - ஆர்.என்.ரவி

``நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டனர்!" - நாகர்கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

"நம் நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்தது." - ஆர்.என்.ரவி

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் விதமாக பாரதிய இதிகாச சங்கலன் சமிதி தமிழ்நாடு கிளை சார்பில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சக்குளம் அமிர்தா பொறியியல் கல்லூரியில் 'கன்னியாகுமரி தின விழா' நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதிய இதிகாசன் சங்கலன் சமிதி மாநிலத் தலைவர் சுப்பிரமணியபிள்ளை தலைமை வகித்தார். இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``சென்னை மாகாணத்துடன் இணைந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒருங்கிணைக்க பாடுபட்டார். நம்முடைய கலாசாரமும், வரலாறும் வெளிநாட்டவர்கள் சொல்லித்தான் நமக்கு தெரிகிறது. மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் நம் நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு, மேற்கத்திய கண்ணோட்டத்தோடு வரலாற்றை கூறியிருக்கின்றனர்.

நம் நாட்டின் ஆன்மிகத்தை அழிக்கும் வகையிலும், கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும் வரலாற்றை எழுதியிருக்கின்றனர். பசுவை வணங்குகிறார்கள், குரங்கை வணங்குகிறார்கள் என நம்மை கீழ்த்தரமாக எழுதியிருக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. கடந்த சில நாள்களுக்கு முன்பு கவர்னர் மாளிகையில் நடந்த பயிற்சி முகாமில் பாரதம் குறித்து அறிந்துகொள்ளும் பயிற்சி அளிக்கப்பட்டது. பாரதம் குறித்த பயிற்சி என்றதும் மாணவர்கள் கேலியாகச் சிரித்தனர். உணவு இடைவேளையின்போது பாரதம் பற்றி இவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் இருக்கிறதா என ஆச்சர்யப்பட்டனர். மாலையில் பயிற்சி முகாமை மேலும் ஒரு நாள் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாகர்கோவிலில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னருக்கு ஆளுயர  மாலை அணிவிக்கப்பட்டது
நாகர்கோவிலில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது

1947-ல் சுதந்திரம் கிடைத்த சமயத்தில் கொண்டாட்டங்கள் நடந்தன. காந்தி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஓரமாக இருந்தார், அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு `ஆங்கிலேயரின் தோற்றம்தான் இங்கிருந்து சென்றிருக்கிறது. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற பிளவுபடுத்தும் சிந்தனைகள் மாற பல ஆண்டுகள் ஆகும் என்பதால் அதைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்' என்று கூறினார். பாரதம் என்றால் ஆன்மிகம், கலாசாரம் நிறைந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ள இன்னும் நிறைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறான வரலாற்று கண்ணோட்டம் இந்தியாவில் இன்னும் இருக்கிறது. அதற்கு இதுபோன்ற அமைப்புகள் முன்வந்து விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். இன்னும் நம் நாட்டின் உண்மையான வரலாறு குறித்த ஆய்வுகள் நடத்த வேண்டும்.

நம் நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்தது. உலக பொருளாதாரத்தில் 30 சதவிகித பொருளாதாரம் நம் நாட்டில்தான் இருந்தது. பிரென்ச், டச்சு, போர்த்துகீசியர்கள், பிரிட்டீஷ்காரர்கள் உள்ளிட்டோர் 150 ஆண்டுகளாக கம்பெனி நடத்தி இங்கிருந்து பொருளாதாரத்தை கொள்ளையடித்து கொண்டுபோய்விட்டனர். இதற்கு முன்பு பலரும் நம்மை ஆண்டார்கள், ஆனால் மேற்கத்தியர்கள் வந்த பிறகுதான் நம் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டது. நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது, கலாசாரம் தவறாக பரப்பப்பட்டது. ஜாலியன்வாலாபாக் படுகொலை உள்ளிட்ட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த சமயத்தில் காமராஜர் அதை கண்டித்து இயக்கம் நடத்தினார். அந்த படுகொலையின் வேதனையை உணர்ந்துதான் அவர் போராட்டம் நடத்தினார். நம் நாட்டுக்கு ஒரு பாதிப்பு வந்தால் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

உலகம் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் 2047 என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். இந்தியா பொருளாதாரம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பெரும் வளர்ச்சியை நோக்கி போய்கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் பலம். ஆனால் வேற்றுமையை மேற்கத்தியர்கள் பிரிவினையாக சித்திரித்துவிட்டனர். இந்தியா என்ற குடும்பத்தில் நாம் அனைவரும் ஓர் அங்கம். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. அவர்கள் எதிர்கால இந்தியாவை கட்டமைப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.