Published:Updated:

100 ரூபாய் மதுவுக்கு 20 கி.மீ பயணம்... 40 ரூபாய் செலவு!

தனியரசு சொல்லும் ‘தண்ணி’ கணக்கு

பிரீமியம் ஸ்டோரி

“கிராமங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர். மாலை நேரங்களில் டாஸ்மாக்கில், ஒரு பாட்டில் வாங்குவதே மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும்” என்று காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு சட்டசபையில் பேசியுள்ளார். தமிழ்நாட்டில், மதுவிலக்குக்கான குரல் வலுத்துவரும் நிலையில், தனியரசுவின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், தனியரசுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தண்ணீர் பிரச்னை தொடங்கி தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவிவரும் நிலையில், சட்டசபையில் டாஸ்மாக் குறித்து பேச வேண்டியதன் அவசியம் என்ன?’’

“குடிநீர் பிரச்னை தொடர்பாகவும் பேசியுள்ளேன். கிராமப்புறங்களில் டாஸ்மாக்குக்கு 20 கி.மீட்டர் தூரம் பயணித்து, நூறு ரூபாய் மதுவுக்கு, 40 ரூபாய் செலவு செய்கிறார்கள். அப்படிச் செல்பவர்கள், சில நேரங்களில் சாலை விபத்தில் சிக்கி இறந்துவிடுகின்றனர். தவிர, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்காகவும் அபராதம் செலுத்திவருகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்திலேயே மது கிடைத்தால், இதுபோன்றவற்றைத் தவிர்க்கலாம். அதனால்தான், அப்படியொரு கோரிக்கையை வைத்தேன்.’’

“வேளாண்துறை மானியக் கோரிக்கையில் இதைப் பேசியுள்ளீர்கள். உங்கள் கொங்கு மண்டலத்திலேயே கெயில், உயர் மின்கோபுரம் என்று விவசாயத்துக்கு எதிராகப் பல திட்டங்கள் உள்ளன. அவற்றைவிட இது முக்கியமா?

‘‘விவசாயத்துறையில் பால் விலை தொடர்பாகப் பேசினேன். அதேபோல, என் தொகுதி சம்பந்தமாகவும் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். கெயில், உயர் மின்கோபுரம் பிரச்னைகளுக்காகப் பல இடங்களில் குரல் கொடுத்துள்ளேன். மதுவும், விவசாயிகளின் பிரச்னைதான். கிராமத்தில் இருக்கும் அவர்கள், மது வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர். மக்களோடு மக்களாக இருந்து இந்தப் பிரச்னைகளை எல்லாம் பார்த்தால்தான், அதுகுறித்துப் பேசினேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘மதுவால் விபத்துகள், குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், நடமாடும் டாஸ்மாக் கடைகள் வருவதால் என்ன நன்மை நடந்துவிடப் போகிறது?’’

‘‘இந்த நேரத்துக்குள், இவ்வளவு தூரம் சென்று மது வாங்க வேண்டும் என்ற அழுத்தத்துடன்தான் ஒருவர் மதுவை வாங்குகிறார். அந்த அழுத்தத்துடன் மது வாங்கிப் பருகுபவர், சாலை விபத்தில் சிக்க வாய்ப்புகள் அதிகம். தனிப்பட்டரீதியாக நானும் மதுவை எதிர்க்கிறேன். ஆனால், நம் சமூகம் முழுக்கவே மதுவை மையமாக வைத்துத்தான் இயங்குகிறது. அவர்களின் இடத்துக்கே மது கிடைக்கும்போது, சமூகக் குற்றங்கள், விபத்துகள் குறையும். நுகர்வோருக்கு நிதிச்சுமையும் குறையும். நான் இதை நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை. சமூகத்தின்மீது இருக்கும் பற்று காரணமாக, அறிவியல்பூர்வமாக யோசித்துத்தான் சொல்கிறேன்.’’

100 ரூபாய் மதுவுக்கு 20 கி.மீ பயணம்... 40 ரூபாய் செலவு!

‘‘சசிபெருமாள் தொடங்கி தற்போது மதுரை நந்தினி வரை மதுவிலக்குக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உங்களின் கோரிக்கை அவர்களின் போராட்டத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் அல்லவா?’’

“சசிபெருமாள் ஐயா, நந்தினி என்று அனைவருடனும் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். சசிபெருமாளைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் சென்றதே நான்தான். பூரண மதுவிலக்குதான் எங்கள் கட்சியின் கொள்கையும்கூட. தமிழகத்திலேயே மது குடிப்பவர்கள் இல்லாத ஒரே கட்சி எங்கள் கட்சிதான். மதுவை விற்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்து விட்டது. மக்களும் வாங்கிக் குடிப்பது என்று முடிவெடுத்துவிட்டனர். நான் சொல்வதையோ, நந்தினி சொல்வதையோ யாரும் கேட்க மாட்டார்கள். அதைத் தடுப்பதற்கான அதிகாரமும் எங்களிடம் இல்லை. எனவே, மதுவிலக்கு வரும்வரை, அதை வாங்கிப் பருகுபவர்களுக்குச் சிரமம் இருக்கக் கூடாது. அதற்காக மது விற்பதுடன் நிறுத்திவிடாமல், அதனால் ஏற்படும் தீங்கு குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி, மது குடிப்பவர்களின் எண்ணிக்கை யைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சொல்லி வருகிறேன்.’’

‘‘சமூக வலைத்தளங்களில் உங்களை ‘தண்ணியரசு’ என்று மீம்ஸ் போட்டு வருகின்றனரே?’’

“மிகக்கடுமையான விமர்சனங்களை வைப்பதை நானும் கவனித்தேன். அதைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது. உண்மை கசக்கத்தான் செய்யும். முதிர்ச்சியில்லாத இந்த விமர்சனங்களை எல்லாம் நான் கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னுடைய பேச்சுக்கு, வெகுஜன மக்கள் மத்தியில் ஆதரவு அலை அதிகரித்துள்ளது. நான் செல்லும் இடங்களில் எல்லாம், ‘நீங்கள்தான் சரியான விஷயத்தைப் பேசியிருக்கிறீர்கள்’ என்று எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அறிவு சார்ந்தவர்கள், என் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு