நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள காக்காத்தோப்பு பகுதியில், நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு விழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் பலரும் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, "ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வேண்டும் என நீலகிரி மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் தற்போது ஊட்டியில் ரூ.37 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீதித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நீதித்துறையினர் வைக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் செய்து கொடுத்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்னையில் 7.50 ஏக்கர் பரப்பளவில் புதிய நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்திருக்கிறார். பெண்களுக்கு சம உரிமை பெற்றுக் கொடுத்தது கலைஞர் ஆட்சியில்தான். பெண்களுக்குச் சொத்துரிமை அளித்ததும் கலைஞர் அரசுதான். இதன் காரணமாக இன்று இந்தியா முழுவதிலும், பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சமூக நீதிக்காகப் பாடுபடும் அரசாக இன்றைக்கு தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது. நீதித்துறைக்கும் அரசுக்கும் பாலமாக சட்டத்துறை இருக்க வேண்டும் என எப்போதும் முதல்வர் வலியுறுத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதற்கு நீதித்துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது" என்றார்.