
தமிழகத்தில் இன்று நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் ஹைலைட்ஸ்!
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை - கல்வீசி தாக்குதல்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் நகர்மன்ற தலைவரின் மறைமுக தேர்தலில் திமுக அறிவித்த வேட்பாளர் செல்விக்கு எதிராக மற்றுமொரு திமுக வேட்பாளர் சகுந்தலா விருப்ப மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் திமுக அறிவித்த செல்வியின் ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நகராட்சி அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
வால்பாறை மறைமுக தேர்தலும் தள்ளிவைப்பு..!
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி தேர்தலில் 21 வார்டுகளில் திமுக 19 வார்டுகளை கைப்பற்றியது. இதையடுத்து திமுக தலைமையின் சார்பாக 10-வது வார்டில் வெற்றி பெற்ற காமாட்சி கணேசன் நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நகராட்சியின் தலைவருக்கான மறைமுக தேர்தலில் , அவருக்கு எதிராக திமுக சார்பாக 14வது வார்டில் வெற்றி பெற்ற அழகு சுந்தரவள்ளி தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து இரு தரப்பினரும் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மறைமுக தேர்தலில் அழகு சுந்தரவல்லி 12 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அப்போது, காமாட்சி கணேசனின் ஆதரவாளர்கள் தேர்தல் நடத்தும் இடத்துக்கு சென்று அலுவலக பொருள்களை அடித்து உடைத்தனர். மேலும் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு நகராட்சி தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். இருவருக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு பொருள்கள் உடைக்கப்பட்டதால், அங்கு மறைமுக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கூட்டணி தர்மத்தை மீறியதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தேனி: திமுக தலைமை அறிவிப்பை மீறி தேனி - அல்லிநகரம் நகராட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக பெண் கவுன்சிலர் வெற்றி. கூட்டணி தர்தமத்தை மீறியதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேனி - அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக 19 வார்டுகளிலும், அதிமுக - 7 வார்டுகளிலும், காங்கிரஸ் -2, அமமுக -2, பாஜக - 1, சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். தேனி - அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேனி - அல்லிநகரம் நகர் மன்றத் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி சார்பாக 22-வது வார்டு கவுன்சிலர் சற்குணம் என்பவர் நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நகர்மன்றத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், 10-வது வார்டு திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா பாலமுருகன் என்பவர் அவரை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார்.
அதனால் மறைமுகத் தேர்தலைப் புறக்கணித்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியே வந்தனர். கூட்டணி தர்தமத்தை மீறி நகர் மன்றத் தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர் வேட்புமனு தாக்கல் செய்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டு திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா நகர்மன்றத் தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தேர்தலுக்காக வருகை தந்தவர்கள் விவரம்.
திமுக கவுன்சிலர்கள் - 19 பேர், காங்கிரஸ் - 2 பேர், அமமுக - 2 பேர், சுயேச்சை -2 பேர், அதிமுக - 1, பாஜக - 1 என 27 கவுன்சிலர்கள் வருகை தந்தனர்.
இவர்களில்ல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவர், ஒரு சுயேச்சை வேட்பாளர் என மூன்று பேர் தேர்தலைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் இளமதியை அமைச்சர் ஐ.பி.சக்கரபாணி வாழ்த்தினார்.

ஆட்டோ டிரைவர் டு கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயர்!
கும்பகோணம் மாநகராட்சி வேட்பாளராக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் அறிவிக்கப்பட்டார். அவர் போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்டோ டிரைவரான சரவணன் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகியிருக்கிறார்.
வேலூர் மேயராக சுஜாதா ஒருமனதாக தேர்வு!

வேலூர் மாநகராட்சி மேயர் தேர்தல், மன்ற அரங்கில் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. 48 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் மேயர் வேட்பாளராக சுஜாதா ஆனந்தகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத காரணத்தால், திமுக வேட்பாளர் சுஜாதாவின் மனு ஏற்கப்பட்டு, ஒருமனதாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக, தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும் 20-வது வார்டு உறுப்பினருமான ஜெகன், போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.

நாகர்கோவில் மாநகராட்சி: பாஜக-வும் வேட்புமனு தாக்கல்!

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் மீனாதேவ், தி.மு.க சார்பில் மகேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா!

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா. போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிபெற்றதும், அனைத்து உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராகத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் வழங்கி மேயர் நாற்காலியில் அமரவைத்தனர்.
மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க நகரச் செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜை தி.மு.க. அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் முன்னாள் சேர்மனும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மைத்துனருமான லிங்கராஜன் அவரை எதிர்த்து போட்டியிடவிருக்கிறார். இரண்டு தரப்பினரும் தனித்தனியாக உறுப்பினர்களோடு வந்திருக்கிறார்கள்.
- மு.ராகவன்
சென்னை மேயராகப் பதவியேற்ற பிரியா ராஜன்!
தனது ஆதரவு கவுன்சிலர்களைச் சிறைவைத்ததால் விஷம் குடித்த திமுக மாவட்ட பொருளாளர்!

கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு, கடலூர் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை அறிவித்திருந்தது தி.மு.க தலைமை. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடலூர் மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தரப்பு தங்களது ஆதரவு கவுன்சிலர்களை அழைத்துச் சென்று புதுச்சேரியிலுள்ள சொகுசு தனியார் விடுதியில் தங்கவைத்தது. 10 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நிலையில் இரவு 12 மணி முதல் கவுன்சிலர்களை வெளியே விடாமல் தனியார் விடுதியில் சிறை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் மனமுடைந்த வி.எஸ்.எல்.குணசேகரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
- ஜெ.முருகன்
வெள்ளலூர் பேரூராட்சியல் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு..!

கோவை வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மறைமுகத் தேர்தல் நடைபெறவிருந்த இன்று காலை அங்கு அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சட்டம், ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி மறைமுகத் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிமுக வெற்றிபெற்ற ஒரே பேரூராட்சி வெள்ளலூர்தான் என்பது குறிப்பிட்டத்தக்கது.
தாம்பரம் மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வசந்தகுமாரி இருசக்கர வாகனத்தில் பேரணியாக தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்...
திமுக சார்பில் பெண் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியா ராஜன் சென்னை மாமன்றத்துக்கு வருகை. அவருடன் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் வந்திருக்கிறார்கள். பின்னர் அவர் மறைமுகத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.


அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால், அவர் போட்டியின்று தேர்வுசெய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மேயராகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவருக்கு ஆணையர் ககன்தீப் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இன்று மறைமுகத் தேர்தல்:

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கிறது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் திமுக கூட்டணிக்குப் பெரும்பான்மை இருப்பதால் எதிர்த் தரப்பு வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. எனினும் மேயர் வேட்பாளர் அறிவிப்பில் கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் அதிருப்தி இருப்பதால், சில கடைசி நேர ட்விஸ்ட்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.