Published:Updated:

உள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...

Edappadi K. Palaniswami
பிரீமியம் ஸ்டோரி
Edappadi K. Palaniswami

தமிழக அமைச்சர்களின் தாறுமாறு தர்பார்!

உள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...

தமிழக அமைச்சர்களின் தாறுமாறு தர்பார்!

Published:Updated:
Edappadi K. Palaniswami
பிரீமியம் ஸ்டோரி
Edappadi K. Palaniswami

‘மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு தடவை நிரூபித்துக்கொண்டே இருக்கிறாயே’ - இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் வடிவேலு சொல்லும் வசனம். நம் அமைச்சரவையில் சில அமைச்சர்களின் பேச்சு வடிவேலுவின் நகைச்சுவைக்கே சவால் விடும்! செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி எனத் தென்மாவட்ட மந்திரிகள்தான் அதில் டாப்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
KT Rajenthra Bhalaji
KT Rajenthra Bhalaji

விகடனில் வெளியான ‘மந்திரி தந்திரி’ தொடருக்காக திண்டுக்கல்லில் சீனிவாசனைச் சந்திக்கப் போயிருந்தேன். என் அடையாள அட்டையைக் காட்டச் சொன்னார். அரசால் வழங்கப்படும் செய்தியாளர் அடையாள அட்டையை நீட்டினேன். ‘`அலுவலக ஐ.டி கார்டைக் காட்டுங்கள்’’ என்றார். காட்டினேன். ‘`விகடனில் எத்தனை ஆண்டுகள் வேலை செய்கிறீர்கள்?’’ என்றார். சொன்னேன். நிறைய விசாரித்தார். ‘`நீங்கள் அங்கேதான் வேலை செய்கிறீர்கள் என எப்படி நம்ப முடியும்?’’ எனக் கேட்டார். ‘`சார்... உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அலுவலகத்துக்கு போன் செய்து விசாரித்துக்கொள்ளுங்கள்’’ என்றேன். உறுதி செய்துகொண்ட பிறகுதான் பேச ஆரம்பித்தார். இந்த அளவுக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணா வாக... உஷார் பேர்வழியாக இருக்கும் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி திண்டுக்கல் சீனிவாசனுக்கு இந்தியாவை யார் ஆள்கிறார்கள்... பா.ம.க-வின் சின்னம் எது என்பவைகூடத் தெரியவில்லை.

Edappadi K Palaniswami
Edappadi K Palaniswami

ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது “அம்மா இட்லி சாப்பிட்டார்; அமைச்சர்களிடம் பேசினார்’’ எனப் பொய்களைக் கொட்டினார்கள் அமைச்சர்கள். ஜெயலலிதா இறந்தபிறகு, “நாங்கள் ஏற்கெனவே சொன்னதெல்லாம் பொய். மருத்துவமனையில் அம்மாவை சசிகலா குடும்பம் பார்க்க விடவில்லை” என திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்தார். அப்போலோவில் நடந்த அத்தனை அக்கப்போர்களின் உச்சம் இது. ஜெயலலிதாவின் உடல்நிலையை மட்டு மல்ல... “அம்மாவால் கொள்ளை யடிக்கப்பட்ட பணத்தை, டி.டி.வி. தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்கள் பெற்றுக்கொண்டு, மக்களை ஏமாற்றுகிறார்கள்’’ எனச் சொல்லி அவரின் இமேஜையும் சரித்தார் சீனிவாசன்.

சீனிவாசன் அப்படிச் சொன்னபோது ‘`இது உளறல் அல்ல, உண்மை. நீண்டநாள்களாக மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித்தான் வரும்’’ எனச் சொன்னார் ராமதாஸ். அவரே நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க- வோடு கூட்டணி வைத்தார். அந்த ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டே மாம்பழச் சின்னத்தை ஆப்பிள் என சீனிவாசன் மாற்றிப் பேசியபோது ராமதாஸுக்கு அது உளறலாகத் தெரிந்திருக்காது.

O. Panneerselvam
O. Panneerselvam

இது மட்டுமா... கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாவட்டம்தோறும் ஆய்வு மேற்கொண்ட போது, “அம்மா இருந்தபோதுகூட ஆளுநர் ஆய்வு நடத்தலாம், தப்பில்லை. டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார் சீனிவாசன். சென்னா ரெட்டிக்கு ஜெயலலிதா எப்படி சிம்மசொப்பனமாக இருந்தார் என்கிற வரலாறு தெரியாமல்தான் ஆய்வைப் பாராட்டுகிறார் என இதை எடுத்துக்கொள்ள முடியாது. போயஸ் கார்டனைவிட ராஜ்பவனுக்குத்தான் இப்போது சக்தி அதிகம் என்கிற உண்மை சீனிவாசனுக்குத் தெரிந்திருக்கிறது. ‘`அம்மாவின் ஆட்சியைவிடச் சிறப்பான ஆட்சியை எடப்பாடி நடத்திவருகிறார்’’ என்கிறார் சீனிவாசன். எடப்பாடியைப் போற்றுவதற்காக அரசியலில் வாழ்வு கொடுத்த தலைவிக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிறோம் என்கிற குற்றவுணர்வு கொஞ்சம்கூட அவருக்கு இல்லை.

ஜெயலலிதா காலத்தில் சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தங்கள் துறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பப் போகும் கேள்விகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்ல வேண்டும் என ஒரு வாரத்துக்கு மேல் ஹோம் ஒர்க் செய்வார்கள் மந்திரிகள். காரணம் அசிங்கப்பட்டு விடக்கூடாது என்கிற அச்சம் மட்டுமல்ல, பதவி நிலைக்க வேண்டும் என்கிற பயமும்தான். ஆனால், இன்றைக்கு மேடையில் தன்னோடு அமர்ந்திருந்தவரின் பெயரைக்கூடத் தெரியாமல், ‘‘ஏம்மா, நீங்க பரதநாட்டியம்தானே?” என சுதா ரகுநாதனிடமே சீனிவாசன் கேட்டபோது ‘‘பாடகி’’ என்று சங்கடத்துடன் பதில் சொன்னார் சுதா ரகுநாதன். ஆனால், அசிங்கப்பட்டாலும் சிரித்தபடியே பேசினார் சீனிவாசன்.

உள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...

மோடியின் பெயருக்குப் பதிலாக மன்மோகன் பெயரை, பிரதமர் என்று சீனிவாசன் தவறாகச் சொன்னபோது, ‘உலகில் முதலாளி பெயரைத் தவறாகக் கூறிய முதல் அடிமை இவர்தான்!’ என காட்டமாக எதிர்வினை ஆற்றினார் டாக்டர் ராமதாஸ். ஆனால் அதற்கப்புறம் மாம்பழமே ஆப்பிள் ஆன மாயம் நிகழ்ந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் உலர்ந்து போயிருந்த மந்திரிகளின் உதடுகள் திறக்க ஆரம்பித்தன. அப்போது முதலில் திறந்தது செல்லூராரின் உதடுதான். ஜெயலலிதா இருந்தபோது பால்காவடி, பன்னீர்க்காவடி என அதிரிபுதிரி விஷயங்களை அரங்கேற்றிப் பலரின் கவனத்தை ஈர்த்த செல்லூர் ராஜு, அரசு விழாக்களில் அளந்துதான் பேசுவார். ஜெயலலிதா இறந்த பிறகு சுதந்திரப் பறவை ஆனார்.

‘மங்குனி மந்திரி’க்கு முதன்முதலில் பொழிப்புரை கொடுத்தவர் செல்லூர் ராஜுதான். தெர்மாகோலையே அரசியலுக்கு நெம்புகோலாக மாற்றினார். வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோலை செல்லூர் ராஜு மிதக்க விட்டபோதுதான் உலகெங்கும் பேசுபொருள் ஆனார். ‘அணையை தெர்மோகோலால் மூட முடியாது; ஆவியாவதைத் தடுக்க முடியாது’ என்பது ஆறாம் வகுப்பு மாணவனுக்குக்கூடத் தெரிந்த உண்மை. ‘மாண்புமிகு’வுக்குத் தெரியாதா? உலகம் சிரித்தாலும் கொஞ்சமும் கூச்சப்படாமல் ‘மதுரையை சிட்னியாக்குவேன்’, ‘வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது’ என அடுத்தடுத்து உளறிக்கொண்டிருந்தார் செல்லூரார். அமைச்சர் என்கிற அந்தஸ்தைத் தாண்டி, “ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் உயிரோடு இருப்பது அம்மா போட்ட பிச்சை’’ என அவரது நாக்கு நாகரிகமில்லாமல் சுழன்றது.

Sellur K. Raju
Sellur K. Raju

ஆட்சி முடிந்து அ.தி.மு.க-வுக்கு அஸ்தமனம் ஏற்பட்டால், பா.ஜ.க-வுக்குப் படையெடுக்கும் பிரமுகர்களில் முதலிடத்தில் இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜிதான். அந்த அளவுக்கு பா.ஜ.க-வின் துதிபாடியாக இருக்கிறார். பிரதமர் மோடியே வீடு தேடி வந்து தன்னைப் பார்க்கும் இடத்தில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவரின் காலில் விழுந்து கிடந்த ராஜேந்திர பாலாஜி, இப்போது “நாம யாருக்கும் பயப்படத் தேவையில்ல, ட்ரம்ப்பே வந்தாலும் சரி. நமக்கு மோடி இருக்கிறார்’’ என ஜாகையை மாற்றுகிறார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தலைவியின் பிறந்தநாளுக்குப் பால்குடம் எடுப்பதற்காகத் தலைமையிடம் பலநாள் காத்திருந்து அனுமதி பெற்ற பிறகுதான் விழாவை நடத்தினார் ராஜேந்திர பாலாஜி. அன்றைக்குப் பால்குடம் எடுக்கவே அனுமதி வாங்கியவர், இன்றைக்கு ‘`தனியார் நிறுவனப் பாலில் கலப்படம் இருக்கிறது’’ என அதிரடியாக அறிவிக்கிறார். ஒரு இறப்பு, சிலரின் அரசியலில் படிநிலைகளை உயர்த்துகிறது.

உள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...

‘படிப்படியாகப் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும்’ என கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையிலும்கூட இது இடம்பெற்றிருந்தது. தலைவியின் இந்தச் செய்தியை வாக்காளர்களுக்கு அன்றைக்குக் கொண்டு சேர்த்த ராஜேந்திர பாலாஜி, இன்றைக்கு ‘`திடீரெனக் குடியை நிறுத்தினால் நரம்புத்தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது. உடனடியாகக் குடியை நிறுத்தச் சொன்னால், எப்படி ஒருவரால் நிறுத்த முடியும்? அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது’’ என்கிறார். குடிமக்கள் பக்கத்தில் இருக்க வேண்டிய மந்திரிகள், ‘குடி’மகன்கள் பக்கத்தில் நிற்பதை எல்லாம் பார்க்க ஜெயலலிதா உயிருடன் இல்லை.

‘`மோடியா... இந்த லேடியா?’’ எனக் கேட்டார் ஜெயலலிதா. அந்த லேடியை ஓரங்கட்டிவிட்டு மோடியை டாடி ஆக்கிவிட்டார் ராஜேந்திர பாலாஜி. ஜெயலலிதா இருந்தபோது ‘இந்தியாவின் இரண்டாவது பெண் பிரதமரே வருக’’ என பேனர் வைத்தார். அவர் இறந்தபிறகு ‘மோடியே எங்கள் டாடி’ என ரைமிங் பாடுகிறார். எதிர்க்கட்சிகள்கூட ஜெயலலிதாவை இந்த அளவுக்குச் சிறுமைப்படுத்தவில்லை. அரசியல் புகலிடம் கொடுத்த தங்கள் தலைவியின் நற்பெயருக்கு இதைவிட யாராலும் அசிங்கத்தைத் தேடித் தந்துவிட முடியாது. ராகுல்காந்தியை அரசியல்ரீதியாக விமர்சிப்பதை விட்டுவிட்டு, ‘இந்தியாவின் வித்து மோடிதான். ராகுல்காந்தி தாய்மாமன் மடியில் உட்கார்ந்து காதுகுத்தினாரா?’ என்று காமெடி பண்ணிக் கலவரத்தைக் கூட்டுகிறார். சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் குறித்து ராஜேந்திர பாலாஜி பேசியது அநாகரிகத்தின் உச்சம்.

`நடிகை சுஹாசினி மணிரத்னம்’ என்பதற்குப் பதிலாக, `சுஹாசினி மணிவாசகம்’ என மாற்றிப் பேசினார் செங்கோட்டையன். “காவிரி நீர் என் பாக்கெட்டிலா இருக்கு அல்லது என் வீட்டுக் குழாயிலா இருக்கு. போனவுடன் தண்ணி திறந்துவிடுவதற்கு’’ என்று அலட்சியமாகக் கேட்கிறார் அமைச்சர் துரைக்கண்ணு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாடகி சுதா ரகுநாதனை `சுதா ரங்குநாதன்’ என்றனர். கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்கிறார், முதல்வர் எடப்பாடி.

அமைச்சர்களின் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுகள் முடிவே பெறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜெயலலிதா இருந்தவரை, பத்திரிகையாளர்களைக் கண்டால் ஓட்டம் எடுத்த மந்திரிகள், தொலைக்காட்சி மைக்குகளைக் கண்டதும் குதூகலிக்கிறார்கள். இது ஆரோக்கியம் என எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஆர்வக் கோளாறில், பொது இடங்களில் உளறுவதும் அதிகரித்துள்ளது.

உள்ளூர் உளறல்களும்... வெளிநாட்டு பயணங்களும்...

“தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்து லஞ்ச ஆட்சி எனப் பேசுகிறீர்கள்? தவறாகப் பேசினால் உங்கள் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள்’’ என்கிறார் அமைச்சர் துரைக்கண்ணு. ‘`கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’’ எனச் சவால் விடுகிறார் ராஜேந்திர பாலாஜி. ‘இறையாண்மையைக் காப்பேன்’ எனச் சொல்லிப் பதவியேற்றவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார்கள். இவர்களை விட்டுவைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, உடுமலை ராதா கிருஷ்ணன் மீது புகார் சொன்ன காரணத்துக்காக மணிகண்டனை மந்திரி பதவியிலிருந்து தூக்குகிறார். ‘அம்மா வழியில் நடக்கும் அரசு’ என அமைச்சர்கள் கிளிப்பிள்ளைபோல முழங்குவார்களே தவிர உளறியதற்காகப் பதவிகளை முழுக்குப் போட மாட்டார்கள். ‘எடப்பாடி இருக்க பயமேன்’ எனக் கபடி ஆடிக்கொண்டிருக்கிறார்கள் மந்திரிகள்.

‘அந்நிய முதலீடுகளை ஈர்க்கிறேன்’ என்று எடப்பாடி வெளிநாடு கிளம்பியதும் அமைச்சர்களும் ஃபாரின் டூருக்குத் திட்டம் போட்டுப் பறக்கிறார்கள். ‘காவிரிநீர் கடைமடைக்கே வந்து சேரவில்லை’ என்று விவசாயிகள் ஆதங்கப்படும்போது ‘நீர் சிக்கனம் பற்றித் தெரிந்துகொள்ள இஸ்ரேலுக்குச் செல்கிறேன்’ என்கிறார் எடப்பாடி. ஃபின்லாந்து கல்விமுறை பற்றி பாடமெடுத்த செங்கோட்டையன் ஐந்தாம் வகுப்புக்கும் எட்டாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வைத் திணிக்கிறார்.

அமைச்சர்கள் கண்டபடி உளறுவதையும் வெளிநாட்டுக்கு விமானத்தில் பறப்பதையும் பார்த்தால் ஒன்று உறுதியாகத் தெரிகிறது. ‘அடுத்தமுறை ஆட்சிக்கு வருவோமோ இல்லையோ, இருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் அனுபவி ராஜா அனுபவி’ என்பதுதான் இவர்களின் இப்போதைய மனநிலையாக இருக்கிறது.