Published:Updated:

டெல்லி தேர்தல் முடிவுகள்... தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

மோடி - கெஜ்ரிவால் - சோனியா காந்தி
மோடி - கெஜ்ரிவால் - சோனியா காந்தி

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தத் தேர்தல் வெற்றி குறித்து தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஹாட்ரிக் அடித்து, மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார், அரவிந்த் ஹெஜ்ரிவால். கடந்த சட்டமன்றத் தேர்தலைப்போலவே இந்த முறையும் 60-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து அரிதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்போகிறது ஆம் ஆத்மி கட்சி. அதற்கு அடுத்தபடியாக, 8 இடங்களைப் பிடித்து இரண்டாவது இடத்தில் பா.ஜ.க-வும் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாமல் மூன்றாவது இடத்தில் காங்கிரஸும் வந்திருக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
Twitter / AAP

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தத் தேர்தல் வெற்றிகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம்.

இந்த வெற்றி, டெல்லி மக்களின் வெற்றி. இது, டெல்லியின் வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றியும்கூட. டெல்லி மக்கள் சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளனர். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளோம். கடவுள் அனுமன் நம்மை ஆசிர்வதித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பானதாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
அரவிந்த் கெஜ்ரிவால்

முரளி அப்பாஸ் (மக்கள் நீதி மய்யம்)

மூன்றாவது வெற்றியின் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஒரு தனிமனிதனால் உருவாக்கமுடியும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் நிரூபித்திருக்கிறார். எங்களைப் போன்று மாற்றத்தை விரும்பும் கட்சிகளுக்கு அவர்தான் முன்னுதாரணம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தபோது, அவர் அவ்வளவுதான் என விமர்சனங்கள் வந்தன. ஆனால், அந்தக் கணிப்புகளைத் தற்போது தவிடுபொடியாக்கிருக்கிறார். இதே போன்ற முடிவுகள் தமிழகத்திலும் வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

சாதி, மதம் போன்ற எந்த வட்டத்துக்குள்ளும் சிக்காத பொருளாதார மேம்பாட்டை மட்டுமே முன்னிருத்துகிற அரசியல் இங்கும் வரவேண்டும். அதை முன்னெடுக்கும் எங்களுக்கு, இந்தத் தேர்தல் முடிவு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதே போல தமிழகத்திலும் மாற்றம் வர கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இங்கே, கட்சி விசுவாசம், தலைவர் விசுவாசம், சின்னம் மீதான விசுவாசம் எனப் பல விஷயங்களில் மக்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். அதிலிருந்து முதலில் மக்களை மீட்க வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க-வை மக்கள் நிராகரித்துவிட்டனர். சிஏஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
மம்தா பானர்ஜி

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ் கட்சி)

``டெல்லி தேர்தல் முடிவையொட்டி இரண்டு விதமான உணர்வுகளும் கருத்துகளும் எனக்குள் எழுகின்றன. முதலில், வகுப்புவாத அரசியலும் பாசிசத் தேர்தல் பிரசாரமும் இந்தத் தேர்தலில் பரிதாபமாகத் தோற்றிருக்கிறது என்பதிலே ஒரு ஆறுதல். மறுபுறம் ஜாதி, மதம், மொழி ஆகிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, தேசியப் பார்வையும் மத நல்லிணக்க வழிமுறைகளையும் கொண்ட தேசியக் கட்சியான காங்கிரஸால் ஒரு பெரிய வெற்றியைத் தேர்தல் களத்தில் பெறமுடியவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. பா.ஜ.க -வின் தேர்தல் யுக்திகள், தேர்தல் களத்தை ஒரு மதவாத அணிதிரட்டலாக மாற்றுகிறபோது, மதங்களுக்கு அப்பாலும் சாதி, வட்டார, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுகின்ற கட்சிகளுக்கு இடையில் நடக்கின்ற தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸைப் போன்ற வெகுஜன கட்சிக்கு அங்கு இடமில்லாமல் போவது துரதிர்ஷ்டம். காங்கிரஸ் தன்னை உற்றுப்பார்த்துக்கொள்ள வேண்டிய காலம் உருவாகிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

மாறிவருகின்ற அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பா.ஜ.க-வின் தேர்தல் அணுகுமுறைகளை எதிர்கொள்கிற வகையிலேயே, அதேநேரத்தில் நாட்டில் இளைஞர்கள் மற்றும் நடுத்தட்டு மக்களின் கவனத்தையும் ஆதரவையும் பெறுகின்ற வகையிலேயே கட்சியை எப்படி புதிதாக வடிவமைப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தின் அரசியல் களமும் வாக்காளர்களின் பரிணாமமும் வகுப்புவாத அரசியல் தாக்கத்துக்கு அப்பாற்பட்டது. டெல்லியில் செய்த வகுப்புவாதத்தை தமிழகத்தில் பா.ஜ.க-வால் செய்யமுடியாது. பா.ஜ.க-வும் அமித் ஷாவும் மோடியும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு ஆயுதத்தை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ அவ்வளவு வேகமாக அது தேய்ந்துபோகும். வகுப்புவாத அரசியலின் ஆயுள் முடிந்துவிட்டது. இதற்குமேல் மக்களால் அதை நிராகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. டெல்லி தேர்தல் முடிவுகள் அதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது. இது பா.ஜ.க -வுக்கு நல்ல பாடம்.

டெல்லியில் மூன்றாவது முறையாக அரியணையில் கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி மகுடம் சூடியது எப்படி?

ஶ்ரீனிவாசன் (பாரதிய ஜனதா கட்சி)

தேர்தல் இட எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், கடந்த தேர்தலைவிட இந்தமுறை நாங்கள் அதிக இடங்களையும் அதிகமான வாக்கு சதவிகிதத்தையும் பெற்றிருக்கிறோம். அந்த வகையில் எங்களுக்கு வெற்றிதான். அடுத்ததாக, அரசியல் ரீதியாகப் பார்க்க, இந்தத் தேர்தல் நடக்கும்போது டெல்லியில் நடந்த கருத்துக்கணிப்பை நாம் எடுத்துக்கொள்ளலாம். அந்த கருத்துக்கணிப்பில், டெல்லி மக்கள் சட்டமன்றத் தேர்தல் என்றால் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்போம். அதுவே நாடாளுமன்றத் தேர்தல் என்றால், நாங்கள் பா.ஜ.க-வுக்குத்தான் வாக்களிப்போம் எனத் தெரிவித்திருந்தார்கள். அவர்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் என்பதால்தான் அவர்கள் தற்போது கெஜ்ரிவாலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தல் என்றால் அவர்களுக்கு மோடியைத் தவிர வேறு வாய்ப்பில்லை.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்

அடுத்ததாக, இந்தத் தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் எந்த இடத்திலேயும் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசவே இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் பேசியபோதும் அரவிந்த் கெஜ்ரிவால் அதைப் பற்றி தன்னுடைய பிரசாரத்தில் எதுவும் பேசவில்லை. அதேபோல, பாகிஸ்தானிலிருந்து பிரதமருக்கு எதிராக ஒரு கருத்து வந்தபோது, எங்கள் நாட்டு பிரதமரை விமர்சிக்க நீங்கள் யார் எனக் கண்டித்து கருத்து தெரிவித்தார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நரேந்திர மோடியின் ஷூவுக்குள் காலைவிட்டு கெஜ்ரிவால் நடக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த ஷூதான் வெற்றிக்கான வழி என அவர் உணர்ந்திருக்கிறார். இது, சித்தாந்த ரீதியாக பி.ஜே.பி-க்கு எதிரான வெற்றி அல்ல. நிர்வாகம் இலவசத் திட்டங்கள் மூலமாக மக்களின் மனத்தை வென்றெடுத்து, அதன் மூலம் பெற்ற வெற்றி.

காங்கிரஸ் கட்சிக்குத்தான் நாடு முழுவதும் இந்தத் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியை தி.மு.க கழற்றிவிடவே அதிக வாய்ப்பிருக்கிறது. மத்தியில் மோடி இருப்பது போல ஒவ்வொரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வில் வலுவான தலைவர்கள் உருவாக வேண்டும். அதுமட்டுமே இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து பா.ஜ.க கற்றுக்கொள்ளவேண்டிய விஷயமாக நான் பார்க்கிறேன்.

மிகப்பெரிய வெற்றியுடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எனது வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் தோற்கடிக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். நாட்டின் நலன் கருதி, கூட்டாட்சி உரிமைகள் மற்றும் மாநிலத்தின் விருப்பங்கள் ஆகியவை பலப்படுத்த வேண்டும்.
மு.க.ஸ்டாலின்

அறிவுச்செல்வன் (நாம்தமிழர் கட்சி)

பா.ஜ.க-வின் மதவாத பிரசாரம் டெல்லியில் தோற்றிருக்கிறது. தேசியவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான யுத்தம் என்று வீடு வீடாகச் சென்று அமித் ஷா மக்களிடம் பிரசாரம் செய்தார். ஆனால், மக்களிடம் அது எடுபடவில்லை. தேசியம், மதம் இதையெல்லாம் தாண்டி குடிநீர், சுகாதாரம், கல்வி என மக்கள் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்த அரவிந்த் கெஜ்ரிவாலை அந்த மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கின்றனர்.

அறிவுச்செல்வன்
அறிவுச்செல்வன்

இதை ஒரு நல்ல முன்னேற்றமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். புதிதாக வளர்கின்ற கட்சிகளுக்கு இது ஒரு நல்ல படிப்பினையாக இருக்கும். அதேசமயம், தமிழகத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் அறிவுசார் விவாதங்களுக்கு வித்திடுமே தவிர, தமிழக மக்களிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிடாது.

அடுத்த கட்டுரைக்கு