Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

‘‘கட்சி மாறக்கூட முடியலியே!’’

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் கோலோச்சிய மலைவாசஸ்தல புள்ளி, தற்போது கவனிப்பாரின்றி ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் கட்சிப் பதவியும் பறிபோய், வேட்பாளர் வாய்ப்பும் மறுக்கப்பட்டதால், தேர்தல் சமயத்தில்கூட பெரிதாக வெளியில் தலைகாட்டவில்லை. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாததால், சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருக்கிறாராம். இதனால், நல்ல பதவி கிடைத்தால், ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியில் சேரலாம் என்று ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலரையும் ரகசியமாகச் சந்தித்துவருகிறார். ‘‘சுயபுத்தியோட ஒழுங்கா கட்சி வேலை செஞ்சுருந்தா, எதுக்கு ஓரங்கட்டப் போறாங்க?’’ என்று சொந்தக் கட்சியினர் குரல் எழுப்ப, “இங்க வெச்சுக்க நாங்க மட்டும் என்ன தொக்கா?’’ என்று மாவட்ட தி.மு.க-வினரும் கலாய்க்கிறார்கள். “கட்சி மாறக்கூட முடியலையே...” என்று புலம்பிவருகிறாராம் மாஜி!

கரைவேட்டி டாட் காம்

ஹேக் செய்யப்பட்டதா ஃபேஸ்புக் பக்கம்?

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரில் ‘S.P.Velumani Team’ என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கை இயக்கிவருகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். 1.64 லட்சம் பேர் பின்தொடரும் அந்தக் கணக்கில், வேலுமணி மற்றும் அ.தி.மு.க சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக இரவு நேரத்தில் ஆபாசப் படங்களுடன் பதிவுகள் வர ஆரம்பித்திருப்பதால் அந்தக் கணக்கை பின்தொடர்பவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதையடுத்து, ‘அந்த ஃபேஸ்புக் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது’ என்று விளக்கம் கொடுத்தார்கள் அட்மின்கள். ஆனால், தி.மு.க-வினரோ அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, விவகாரத்தை வில்லங்கம் ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்களாம்!

கொலை மிரட்டல் வரை சென்ற கோஷ்டிப்பூசல்!

நாமக்கல் மாவட்ட காங்கிரஸில் ஏற்பட்டுள்ள கோஷ்டிப்பூசல், கடைசியில் கொலை மிரட்டலில் போய் நிற்கிறது. நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் ‘சர்வேயர்’ செல்வக்குமாருக்கும், துணைத் தலைவர் லோகநாதனுக்கும் இடையில்தான் பிரச்னை. “எந்தக் கூட்டத்துக்கும் என்னை ஏன் கூப்புடுறதில்லை?” என்று ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரின் முன்பும் லோகநாதன், செல்வக்குமாரிடம் கேட்டிருக்கிறார். அதையடுத்து, “செல்வக்குமார் அடியாட்களோடு வந்து வீடு புகுந்து தாக்கி, கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். டூ வீலரில் போகும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் என்னை இடித்துக் கீழே தள்ள முயல்கிறார்கள்’’ என்று குமுறுகிறார் லோகநாதன். ‘‘திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. டி.எஸ்.பி., எஸ்.பி., கலெக்டர், டி.ஜி.பி-னு பலருக்கும் மனு அனுப்பியும், எதுவும் நடக்கலை. கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. என் உயிருக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, அதுக்கு செல்வக்குமார்தான் காரணம்’’ என்று கண்ணீர் வடிக்கிறார் லோகநாதன்.

கரைவேட்டி டாட் காம்

‘‘கமிஷனர் இன்னைக்கு இருப்பாரு... நாளைக்குப் போயிடுவாரு!’’

‘‘கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 50 கடைகளை அ.தி.மு.க நிர்வாகிகளே வாடகைக்கு எடுத்துக்கொண்டனர்’’ என்று சொல்லி, தி.மு.க-வைச் சேர்ந்த தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகம் போராட்டம் நடத்தினார். கடைகள் தங்கள் தரப்புக்குக் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரான சரவணகுமார், ஓப்பன் டெண்டர் மூலம் அந்தக் கடைகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை எடுத்தார். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த நீலமேகம், ‘‘கமிஷனர் இன்னைக்கு இருப்பார்... நாளைக்கு வேற ஊருக்குப் போயிடுவார். ஆனா, நாம எப்பவும் இங்கதான் இருப்போம். அதனால, ஒற்றுமையாக இருக்கணும்’’ என எதிர்முகாமிடமே நட்பு பாராட்டினாராம். “இவரு கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே...” என்று கிறுகிறுத்துப் போயிருக்கிறார்கள் தஞ்சை உடன்பிறப்புகள்!

‘‘அரசு நிலத்தை ஆட்டையைப் போட்டிருக்காரே!’’

பிரபல மர வியாபாரியால் வளர்த்தெடுக்கப்பட்டு, கோடிகளை வாரியிறைத்து மக்கள் பிரதிநிதியாக உருவாக்கப்பட்ட மலை மாவட்ட ஜெயமான பிரமுகர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஏற்கெனவே மரக்கடத்தல் வழக்குகளில் தலையிடுகிறார் என்று அவர்மீது புகார்கள் வந்த நிலையில், தற்போது தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தையும் வளைத்துப் போட்டிருக்கும் விஷயம் வெளிவந்திருக்கிறது. விவகாரம் வெளியே கசிந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் பிரதிநிதி பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். இதையடுத்து, ‘‘ `இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கேன்’னு நம்ம எம்‌.எல்.ஏ மேடையில பெருமை பேசிட்டு, கமுக்கமா அரசு நெலத்தை ஆட்டையப் போட்டுருக்கார் பாரு...’’ என்று அவர் காதுபடவே கலாய்க்கிறார்கள் தொண்டர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism