Published:Updated:

`25 வாக்குகளுக்காக அள்ளி வீசப்படும் கோடிகள்!' - என்ன நடக்கிறது பார் கவுன்சில் தேர்தலில்?

ஆ.விஜயானந்த்

தேர்தலின் முக்கிய அம்சமாக சாதியை முன்னிறுத்தி வாக்கு கேட்கின்றனர். ரவுடியிஸமும் களமிறங்கியுள்ளதால் உ.பி-யில் நடந்ததைப்போல இங்கும் நடக்குமோ என்ற அச்சமும் வாட்டியெடுக்கிறது.

பார் கவுன்சில் அலுவலகம்
பார் கவுன்சில் அலுவலகம்

தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் 29-ம் தேதி நடக்கவிருக்கிறது. `25 உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் இந்தப் பதவிக்காகக் கோடிக்கணக்கில் பணம் வாரியிறைக்கப்படுகிறது. தங்களுக்கு ஒத்துவராத உறுப்பினர்களை மிரட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன' என வேதனைப்படுகின்றனர் மூத்த வழக்கறிஞர்கள்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் பார் கவுன்சில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்தாண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி நடைபெற்ற பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தலில் 192 பேர் போட்டியிட்டனர். தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 54,000 வழக்கறிஞர்கள் வாக்களித்தனர். தேர்தல் தொடர்பாக சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மறுநாள் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்காக வேட்புமனுத் தாக்கல் நடைபெற இருக்கிறது. 29-ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. பார் கவுன்சில் உறுப்பினர்களாகத் தேர்வான 25 பேரில் 13-க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். வழக்கறிஞர் சமூகத்தில் கவுரவமாகப் பார்க்கப்படும் இந்தப் பதவியைப் பிடிப்பதற்காக கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வோர் அணியினரும் தங்கள் தரப்பை வெற்றி பெறச் செய்வதற்கான முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில்தான் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

`` சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ் தலைமையிலும் அகில இந்திய பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் பிரபாகரன் தலைமையிலும் இரு அணிகளாகப் போட்டியிடுகின்றனர். பிரபாகரன் அணியில் தலைவர் பதவிக்கு அமல்ராஜும் துணைத் தலைவர் பதவிக்கு பிரிசில்லா பாண்டியனும் போட்டியிடுகின்றனர். அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு பிரபாகரன் போட்டியிடுகிறார். தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவிக்குப் பால் கனகராஜும் துணைத் தலைவர் பதவிக்குக் கார்த்தி என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்த அணியின் சார்பாக அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ஐயப்ப மணி என்பவர் போட்டியிடுகிறார். இதில், அமல்ராஜுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் தேர்தல் வேலை பார்க்கிறார். பிரிசில்லா பாண்டியனுக்காக அவரது கணவரும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ஜான் பாண்டியன் வேலை செய்கிறார்.

ஆர்.சி.பால் கனகராஜ்
ஆர்.சி.பால் கனகராஜ்

பால் கனகராஜ் அணிக்கு முன்னாள் பார் கவுன்சில் தலைவர்கள் சந்திரமோகனும் செல்வமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். `இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும்' என்பதால், வெளியில் உள்ள சில அரசியல் கட்சிகளின் துணையோடு சிலர் களமிறங்கியுள்ளனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகின்றன" என ஆதங்கத்தோடு விவரித்த மூத்த வழக்கறிஞர்கள் சிலர், ``25 உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்காக ஒரு ஓட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரையில் விலை பேசுகின்றனர்.

`பணத்தை வாங்கிவிட்டு ஓட்டு போடாவிட்டால் நாங்கள் வேறு மாதிரி செயல்பட வேண்டியது வரும்' எனவும் மிரட்டுகின்றனர். சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினர் தேர்வாகியிருக்கிறார். அவர் பால் கனகராஜ் அணிக்கு ஆதரவாக இருந்தவர், தற்போது பிரபாகரன் அணிக்குப் போய்விட்டார். அவரிடம் கேட்டபோது, `என்னை சாகடித்துவிடுவேன் எனக் கூறிவிட்டார்கள், வேறு வழியில்லை, நான் அந்த அணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதை பால் கனகராஜ் அணியினர் எதிர்பார்க்கவில்லை. தேர்தலின் முக்கிய அம்சமாக சாதியை முன்னிறுத்தி வாக்குக் கேட்கின்றனர். ரவுடியிஸமும் களமிறங்கியுள்ளதால் உ.பி-யில் நடந்ததைப்போல இங்கும் நடக்குமோ என்ற அச்சமும் வாட்டியெடுக்கிறது.

`ஆடி கார்; துணை நடிகை; தினமும் ஒரு லட்சம்'- போலி ஏ.டி.எம். கார்டு மன்னனின் அதிர்ச்சி வாக்குமூலம்

இத்தனைக்கும் தேர்தலில் வெற்றி பெறுபவர் பார் கவுன்சில் நடவடிக்கைகளில் முறைகேடு செய்து சம்பாதிப்பதற்கு வாய்ப்பில்லை. வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நேரத்தில் மட்டுமே தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பார் கவுன்சில் பதவியின் மூலமாக வழக்கு விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும். கடந்தமுறை ஒரு ஓட்டுக்கு 35 லட்ச ரூபாய் வரையில் கொடுத்தார்கள். இந்தமுறை ஒன்றரை கோடி ரூபாய் வரையில் கொடுக்கின்றனர். உறுப்பினர்களாகத் தேர்வானர்களில் பலரும் செலவு செய்துதான் வெற்றி பெற்றார்கள். ஆறு பேர் மட்டுமே பெரியளவில் செலவு செய்யாமல் உறுப்பினர்களாகியுள்ளனர்.

பிரபாகரன்
பிரபாகரன்

`நான் ஒரு கோடி செலவு செய்துதான் உறுப்பினர் பதவிக்கு வந்தேன். அந்தப் பணத்தைக் கொடுங்கள்' எனச் சிலர் நேரடியாகவே கேட்கின்றனர். உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 20 வருடத்துக்கு மேல் வக்கீலாக இருப்பவர்களுக்கு 15,000 ரூபாயும் 10 வருடங்களுக்கு மேல் வக்கீலாக வேலை பார்ப்பவர்களுக்கு 10,000 ரூபாயும் 5 வருடங்களுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு 5,000 ரூபாய் எனச் செலவு செய்து சிலர் வெற்றி பெற்றனர். இந்தப் பணத்தையெல்லாம் மீட்கும் வழியாகத் தான் தலைவர் பதவிக்கான தேர்தலைப் பார்க்கிறார்கள். கவுரவம் வேண்டும் என்பதற்காகத் தேர்தல் விதிமுறைகளையெல்லாம் சிலர் காற்றில் பறக்கவிடுகிறார்கள்" என்கின்றனர் வேதனையுடன்.

அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பிரபாகரனிடம் பேசினோம். ``இங்கு யாரும் வாக்குக்குப் பணம் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுப்பதாகத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய சமூகத்துக்கான தேவைகள் என்ன என்பது பற்றித்தான் பேசுகிறார்கள். அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகின்றனர். வாக்குகளைப் பெறுவதற்காக பார்ச்சூனர் கார் கொடுத்தார்கள் என்றெல்லாம் கடந்தமுறை தகவல் பரப்பினார்கள். பணம் கொடுத்து வெற்றி பெறுவதால் என்ன செய்துவிட முடியும். அதுவும் வக்கீல்கள் பணம் கொடுப்பார்களா என்பதையும் ஆராய வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன். எங்கள் அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்றார் உறுதியாக.

பிரிசில்லா பாண்டியன்
பிரிசில்லா பாண்டியன்

பார் கவுன்சில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பால் கனகராஜிடம் பேசினோம். ``ஒன்றரை கோடி ரூபாயைக் கொடுத்து வாக்குகளை வாங்கும் அளவுக்கு நிலைமை இல்லை. இதுதொடர்பாக ஏராளமான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். ஒரு கோடி, ஒன்றே கால் கோடி என்றெல்லாம் சொல்கின்றனர். எனக்குத் தெரிந்தவரையில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் ஓர் அணி சார்பாக நிற்கிறேன். எங்கள் அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சமூகரீதியாக மிரட்டுவது தொடர்பாக எனக்குத் தகவல் எதுவும் வரவில்லை. எங்கள் அணியில் அப்படிப்பட்ட புகார்கள் எதுவும் இல்லை" என்றார் இயல்பாக.