புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி விக்னேஷ், உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரத்தில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணத்தினால் இந்தியா திரும்ப மாணவன் கார்த்தி விக்னேஷ் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். தாயகம் திரும்பிய நிலையில் தனது சொந்த ஊரான காரைக்காலை அடுத்த பச்சூருக்கு வந்து சேர்ந்தார். அவரை அவரின் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றனர். மேலும் அவருக்கு உணவு ஊட்டி அன்பை வெளிப்படுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியா திரும்பியது குறித்து கார்த்தி விக்னேஷ், ``இந்திய அரசு விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என கூறியது. நாங்க கார்கிவ் நகரத்திலிருந்து உக்ரைன் எல்லைக்குச் செல்ல ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்தது.

அதில் இந்தி பேசும் மாணவர்களை மட்டும் முதலில் மீட்டு அழைத்துச் சென்றாங்க. தமிழ் மாணவர்களை அதிகாரிகள் பாரபட்சமாக நடத்தினாங்க. நாங்க ரயிலில் ஏறி தப்பித்து வருவதற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ரயிலில் ஏறி எல்லைப் பகுதிக்கு வந்தோம். தாயகம் திரும்பி பத்திரமாக வந்து விட்டாலும் 4 ஆண்டுகள் அங்கு மருத்துவம் படித்ததற்கு சான்றிதழ்கள் எதுவம் எங்களிடம் இல்லை. தற்பொழுது நின்றுள்ள மருத்துவ படிப்பை எவ்வாறு தொடர்வது என்றும் தெரியலை. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மருத்துவப் படிப்பு சான்றிதழ் கிடைக்கவும் நின்ற படிப்பைத் தொடர வைக்கவும் வழி வகை செய்ய வேண்டும்" என்றார்.