Published:Updated:

`இதுவரையில் 144 பேர் பலியாகிவிட்டனர்!' - அரசின் அலட்சியத்தால் கொதிக்கும் கே.எஸ்.அழகிரி

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்

மனிதக் கழிவுகளை அகற்றும் இழிவில், இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியிருந்தார். இதை ஆமோதித்துள்ள, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இது தேசிய அவமானம் எனக் குற்றஞ்சாட்டியிருப்பதோடு, இந்த இழிநிலையை அகற்ற தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

இதுகுறித்து நம்மிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ``மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களே ஈடுபடுத்தப்படுவது தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. 1993 முதல் இன்று வரையில், இந்தப் பணியில் 144 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ விழாக்களுக்குத் தேவையற்ற அளவில் பணத்தை விரயமாக்கும் தமிழக அரசு, மனிதக் கழிவுகளை அகற்ற மட்டும் இயந்திரங்களை வாங்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக எங்கள் கட்சியின் தலைவர் ப.சிதம்பரமும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலையைத் தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ``1993 முதல் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தில் 620 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மிக அதிகமாக, தமிழகத்தில் தான் 144 பேர் மாண்டுள்ளனர். குஜராத்தில் 131 பேரும் கர்நாடகாவில் 73 பேரும் உயிரிழந்துள்ளனர். மிகவும் பின் தங்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகாரைக் காட்டிலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்

மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்துப் பேசிய ராம்தாஸ் அத்வாலே, ``மொத்தம் கண்டறியப்பட்டுள்ள 620 மரணங்களில், 445 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2013 முதல் ஜூன் 2019 வரையில், நாடு முழுவதும் 53,598 மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில், அவர்களை பணியமர்த்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த மாநிலமும் மத்திய அரசுக்கு தகவல் அளிக்கவில்லை” என்றார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களையே ஈடுபடுத்துவதை தடுக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும், மத்திய சமூகநலத்துறைக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளித்திட வேண்டும்.

ராம்தாஸ் அத்வாலே
ராம்தாஸ் அத்வாலே

இப்பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளித்திட வேண்டும். ஒருசில மாநிலங்களில், இவ்விவகாரத்தை ஆளுங்கட்சியினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளாததால், மாவட்ட ஆட்சியர்களும் அலட்சியமாக இருக்கிறார்களாம். அவர்களது அலட்சியத்தைக் கலைக்கும் பொருட்டு, இனி நோட்டீஸ் அனுப்ப மத்திய சமூகநலத்துறை முடிவெடுத்துள்ளதாக, அத்துறையின் அதிகாரிகள் கூறுகின்றனர்.