Published:Updated:

`தமிழன்டா எந்நாளும், சொன்னாலே திமிரேறும்' - தமிழ்நாடு இதிலெல்லாம் எப்பவும் டாப்! #தமிழ்நாடுநாள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தன்னிகரில்லா தமிழ்நாடு
தன்னிகரில்லா தமிழ்நாடு ( விகடன் )

வெளிமாநில நண்பர்கள் எவரேனும் தமிழ்நாட்டைக் குறை சொன்னால் இந்தப் புள்ளி விவரங்களைக் காட்டுங்கள்.

``50 வருடத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது", "மாற்றம் முன்னேற்றம்", "சிஸ்டம் சரியில்ல"

இப்படியாகவும், இன்னும் பலவாகவும் பல்வேறு கட்சிகளும் முழங்கிக் கொண்டுதான் உள்ளன. இந்தக் கட்சிகள் அனைத்தும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டதாக இருந்தாலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துகொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளை (தி.மு.க & அ.தி.மு.க) ஒழிக்கவேண்டும் என்ற புள்ளியில் ஒன்றாக நிற்கின்றன. இதில் ஒரு சில கட்சிகள் தேர்தல் வரும்போது திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டாலும் திராவிடத்தால் தமிழ்நாடு பின் தங்கிவிட்டது என்ற கருத்தைப் பலமுறை முன் வைத்தவர்கள்தாம். ஆனால், தமிழகம் பின் தங்கிய மாநிலம் இல்லை என்பதைப் புள்ளி விவரங்கள் கொண்டு விளக்குவதே இந்தக் கட்டுரை.

தமிழ்நாடு
தமிழ்நாடு
விகடன்

1956-ம் ஆண்டு, இதே நாளில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தமிழ் பேசும் நிலம், தமிழ்நாடாகப் பிறந்து இன்றோடு 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அடுத்த ஆண்டு முதல், நவம்பர் 1-ம் தேதி 'தமிழ்நாடு நாள்' அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன் காரணமாக இன்று மாநிலம் முழுவதும் முதன் முறையாக `தமிழ்நாடு நாள்' அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் பிறந்து வளர்ந்த இந்த 63 ஆண்டுகளில், 52 ஆண்டுகள் திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இணையவெளியிலும், பல்வேறு சோஷியல் மீடியா தளங்களிலும் முன்வைப்பதுபோல, திராவிடத்தால் தமிழகம் பின்தங்கிவிடவில்லை. சொல்லப்போனால், பல விஷயங்களில் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது என்பதுதான் உண்மை.

தமிழ்நாடு நாள் விழா அழைப்பிதழ்
தமிழ்நாடு நாள் விழா அழைப்பிதழ்

2018-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘மேடம் ஸ்பீக்கர், திஸ் இஸ் வெரி இம்பார்ட்டன்ட்’ என்று கூறிவிட்டு அறிவித்த திட்டம் “10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு” என்பதுதான். இந்த பட்ஜெட்டின் மிக முக்கியத் திட்டமாக பி.ஜே.பி-யினர் பாராட்டியதும் இந்தத் திட்டத்தைத்தான். எதிர்க்கட்சியினரோ இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒபாமா கேர்’ எனச் சொல்லப்படும் அமெரிக்காவின் ‘யுனிவெர்சல் ஹெல்த் கேர்’ திட்டத்தின் காப்பி என்று சாடினர். ‘ஒபாமா கேர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது 2010-ம் ஆண்டு, அதற்கு முன்னரே 1 கோடி குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்தது தமிழக அரசுதான்.

2009-ம் ஆண்டே ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' கொண்டுவரப்பட்டது. இந்த ஒரு திட்டம் மட்டுமல்ல 2018-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில முக்கியத் திட்டங்கள், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் அறிவித்த திட்டங்களின் அக்மார்க் நகல்தான்! இலவச மதிய உணவுத் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டம், இலவச கேஸ் இணைப்புத் திட்டம், சிறுதொழில் முன்னேற்றத் திட்டம் என அறிவித்த பல திட்டங்கள், திராவிடக் கட்சிகளிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டவையே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னோடி மாநிலம் தமிழ்நாடு!

ஜி.டி.பி

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜி.டி.பியை (மொத்த உள்நாட்டு உற்பத்தி) தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள்தான் அளிக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடுதான்.

GDP
GDP
Romania Journal

சிறந்த ஆட்சி!

சிறப்பான வகையில் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை, 2017-ம் ஆண்டு வெளியிட்டது ‘ 'Public Affairs Centre' என்று கூறப்படும் பொது அலுவல்கள் மையம். இந்தப் பட்டியலில், முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பது, மத்திய அரசான பா.ஜ.க ஆட்சி செய்யாத தென்மாநிலங்கள்தான். முறையே கேரளா, தமிழகம், மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள்தான் முதல் மூன்று இடங்களைப்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் பத்துப் பிரிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்கள் தடுப்பு பிரிவில் முதலிடத்திலும், மனித வளர்ச்சிக்கான ஆதரவு, விரைந்து நீதி வழங்குதல், சுற்றுப்புறச் சுழல் ஆகிய பிரிவுகளில் இரண்டாமிடத்திலும் உள்ளது தமிழ்நாடு.

உயர்கல்வியில் முதலிடம்!

2016-ம் ஆண்டு, NAAC (National Assessment and Accreditation Council), நாடு முழுவதும் உள்ள 2734 உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையில், உயர்கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் கல்லூரி, மேலாண்மைக் கல்லூரி, பல்கலைக்கழகம் எனத் தனித்தனியே டாப் 25 பட்டியலை வெளியிட்டது NAAC. இதில், தமிழ்நாட்டிலிருந்து முதல் 25 இடங்களுக்குள் 4 பொறியியல் கல்லூரிகளும், 3 மேலாண்மைக் கல்லூரிகளும், 2 பல்கலைக்கழங்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

டெட்ராய்ட் ஆஃப் ஏசியா

கடந்த சில மாதங்களாக, உலகம் முழுவதுமே ஆட்டோமோபைல் துறை சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தச் சரிவு ஏற்படுவதற்கு சில காலம் முன் சென்று பார்த்தால், கார் உற்பத்தி செய்வதில், ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய பங்காற்றியது தமிழகத்தின் தலைநகரான சென்னைதான். உலகிலேயே மிக அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் நகரம் அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரம்.

ஆசியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்து வந்ததால் சென்னைக்குக் கிடைத்த பெயர் ‘டெட்ராய்ட் ஆஃப் ஏசியா’.

பொது சுகாதாரம்

இந்தியாவிலேயே முதன்முதலில் பொது சுகாதாரச் சட்டத்தைக் கொண்டுவந்தது தமிழகம்தான்.1939-ல் தமிழகம் மெட்ராஸாக இருந்தபோதே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளில் கேரளாவிற்குப்பின் இரண்டாமிடத்தில் உள்ளது தமிழகம்தான் என்கிறது NCBI (National Center for Biotechnology Information).

மகாபலிபுரம்
மகாபலிபுரம்

தமிழ்நாடு சுற்றுலாத் துறை

இந்தியாவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் மாநிலம் தமிழ்நாடுதான். 2015-ன் நிலவரப்படி சுமார் 33.3 கோடி உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும்,46.5 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் விசிட் அடித்துள்ளனர். சீன அதிபரின் வருகைக்குப் பிறகு மகாபலிபுரம் உலக அரங்கில் இடம்பிடித்துவிட்டது. எனவே வரும் ஆண்டுகளிலும் சுற்றுலாத் துறையில் தமிழகம்தான் முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ்நாட்டை, வடமாநிலங்களோடு ஒப்பிடுவதே தவறு, முன்னேறிய நாடுகளோடுதான் ஒப்பிட வேண்டும்“
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமெர்த்தியா சென்

உயரமான சிலை!

உலகின் 6-வது உயரமான சிலை, கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைதான். வல்லபபாய் படேல் சிலை கட்டுவதற்கு முன்பு இந்தியாவின் மிக உயரமான சிலை என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்ததும், 133 அடி உயரம் கொண்ட வள்ளுவர் சிலைதான்.

உலகின் உயரமான சிலைகள்
உலகின் உயரமான சிலைகள்
விகடன்

மகளிர் காவல் நிலையம்

இந்தியாவில் முதன்முதலாக மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது தமிழகத்தில்தான்.1992-ல் அ.தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தென்மாநிலங்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவாக நடைபெறுகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - 2017
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - 2017
விகடன்

மேலும் பல...

சாம்சங், நோக்கியா, லேனோவா உள்ளிட்ட முக்கிய எலக்ட்ரானிக் கம்பெனிகள் தெற்காசியாவின் எலக்ட்ரானிக் தயாரிப்பு மையமாக சென்னையைக் கொண்டுள்ளது. இந்தியாவில், சாப்ட்வேர் ஏற்றுமதி மதிப்பில் இரண்டாவது மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. மின்னுற்பத்தியில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவின் சிறந்த காவல் நிலையம் கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் காவல் நிலையம்தான். இதுபோன்று தமிழகத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் திராவிட ஆட்சியில் வந்தவைதான் என்பதை மறந்துவிடக்கூடாது.

தன்னிகரில்லா தமிழ்நாடு
தன்னிகரில்லா தமிழ்நாடு
Vikatan Infographics

தமிழகத்திலும் குற்றங்கள், ஊழல்கள் என்பது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு என்பதுதான் உண்மை. இனி வரும் காலங்களில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புவோம். நம் மாநிலத்தை நாமே குறை கூறுவதைச் சற்று குறைத்துக்கொண்டு, நாமும் தமிழகத்தின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்வோம் என்று 'தமிழ்நாடு நாளில்' உறுதி எடுத்துக்கொள்வோம். இனி வெளிமாநில நண்பர்கள் எவரேனும் தமிழ் நாட்டை பற்றிக் குறை கூறினால், அவர்களுக்கு இந்தப் புள்ளி விவரங்களை எடுத்துக் காண்பித்து 'தமிழன்டா எந்நாளும், சொன்னாலே திமிரேறும்' என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!

மாநில உரிமைகளைப் பறிப்பதில் காங்கிரஸும், பா.ஜ.க-வும் ஒன்றுதான்! #தமிழ்நாடுநாள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு