Published:Updated:

தி.மு.க-வில் என்னை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறார்கள்!

வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

- வெளுத்து வாங்கும் வேல்முருகன்

தி.மு.க-வில் என்னை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறார்கள்!

- வெளுத்து வாங்கும் வேல்முருகன்

Published:Updated:
வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. ‘கூட்டணியில் இருந்துகொண்டு, அரசை விமர்சிக்க என்ன காரணம்...’ என்ற கேள்வியோடு வேல்முருகனிடம் பேசினேன்...

“ ‘தி.மு.க-வுக்கு ‘ஜிங் சாங்’ அடிக்க மாட்டேன்’ என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறீர்களே... என்னதான் பிரச்னை?”

“பா.ம.க-வைச் சேர்ந்த தம்பிகள் சிலர், ‘வேல் முருகன் தி.மு.க-வுக்கு ‘ஜிங் சாங்’ அடிக்கிறார்’ என்ற கருத்தைத் தொடர்ந்து முன்வைத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையிலும், ‘என் கண் முன்னே என் சமூக மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், நான் துணிந்து கேள்வி கேட்பேன், கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி இருக்க மாட்டேன்’ என்பதையும் உணர்த்தவுமே அப்படிப் பேசினேன்.”

“தி.மு.க அரசில், அப்படியென்ன அநியாயம் நடந்துவிட்டது?”

“நிறைய இருக்கின்றன. என்னுடைய தொகுதியில் ஆற்றில் மூழ்கி இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு நிதியுதவி கேட்டிருந்தேன். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களுக்கெல்லாம் நிதியுதவி வழங்கப்பட்டுவிட்டது. நான் கேட்ட நபருக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஜூலை ஒன்றாம் தேதி நடந்த பாலியல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு கோரினேன். அதுவும் நடக்கவில்லை. மற்ற சமூகத்தினர் பாதிக்கப்பட்டால், உடனே பரிகாரம் கிடைக்கிறது. வன்னியர் சமூகத்துக்கு மட்டும் கிடைப்பதில்லை.

இட ஒதுக்கீட்டுக்காகப் போராடிய தியாகிகளின் நினைவாக 4 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. அதன் மூலம் யாருக்கு என்ன பயன்? அவர்களின் குடும்பத்தினருக்கு வீடு கட்டிக் கொடுக்குமாறு சட்டமன்றத்திலேயே பேசினேன். அதுவும் நடக்கவில்லை. வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்துக்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை.

தி.மு.க வெற்றிக்கு நானும் எள் முனை அளவேனும் உதவியிருக்கிறேன். பா.ம.க-வைத் தவிர, மற்ற அனைத்து வன்னியர் அமைப்புகளும் தி.மு.க-வைத்தான் ஆதரித்தோம். ‘கூட்டணியில் இருக்கிறீர்களே... நீங்கள் சொல்லக் கூடாதா?’ என்று வன்னிய மக்கள் என்னிடம் முறையிடுகிறார்கள். மக்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

தி.மு.க-வில் என்னை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறார்கள்!

துறைச் செயலாளர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர் கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என்று எந்தப் பொறுப்பிலும் வன்னியருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாநகராட்சி மேயர்களிலும் பிரதிநிதித்துவம் இல்லை. வாக்கு அரசியலுக்கு மட்டும் வன்னிய மக்களைப் பயன்படுத்திக் கொண்டு விட்டுவிடுகிறார்கள் என்ற கொதிப்பு எங்கள் சமூக மக்களிடம் இருக்கிறது. இப்படியான வன்னியர் சமூக எதிர்ப்பால்தான் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ‘வன்னியருக்கு எதிரான ஆட்சி’ என்கிற பிம்பம் ஏற்படுகிறது. இதைவைத்தே பா.ம.க அரசியல் செய்யும். அது, 2024 தேர்தலில், கூட்டணி வெற்றியைக்கூட பாதிக்கும்.”

“வன்னியர் சமூகத்தை தி.மு.க முழுமையாகப் புறக்கணிக்கிறது என்று சொல்கிறீர்களா?”

“அப்படிச் சொல்லிவிட முடியாது. தி.மு.க-வில் இருக்கும் ஒருசிலர்தான் புறக்கணிக்கிறார்கள். முதல்வர் அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.”

“தி.மு.க-வின் மிக உயர்ந்த பதவியான பொதுச் செயலாளர் பதவியிலேயே வன்னியர்தானே இருக்கிறார்?”

“துரைமுருகன் பெயருக்குத்தான் பொதுச்செயலாளர். அவருக்கு தி.மு.க-வில் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது, தி.மு.க-விலுள்ள அத்தனை பேருக்கும் தெரியும்.”

“முதல்வர் ஸ்டாலினைத் தாண்டி, உதயநிதி, சபரீசன் என தி.மு.க-வில் பல ‘பவர் சென்டர்கள்’ இருப்பதாகச் சொல்கிறார்களே...”

“அது இயற்கை. முதல்வராக இருப்பவரின் குடும்பத்தில் இருப்பவர்கள் பவராக இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதான். அதிகாரிகள் வர்க்கமே, பவர் இல்லாதவர்களுக்கும் ஜிங் சாங் அடித்து, அவர்களை பவரானவர்களாக உருவாக்கிவிடுகிறது.”

“புதிதாக வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரத் தாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”

“முதல்வருக்கு மனமிருக்கிறது... ஆனால், தி.மு.க-வில் இருக்கும் உயர் சாதியினர் சிலர்தான் தடுக்கிறார்கள். அப்படித் தடுக்கும் சக்திகளின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதேசமயம் முன்னேறிய அந்த சாதிக்காரர்கள்தான் முதல்வருக்கு நெருக்கமாகவும், ஆலோசகர்களாகவும், நண்பர்களாகவும், வேண்டப்பட்டவர் களாகவும் இருக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்திலேயே சாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது.”

“இப்போதெல்லாம் வன்னியர் சமூகத்துக்காக மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்களே... தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ‘வன்னியர் வாழ்வுரிமை கட்சி’யாகிவிட்டதா?”

“என்னைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களின் குற்றச்சாட்டு இது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சி.ஏ.ஏ., மீத்தேன், காவிரி, முல்லைப்பெரியாறு, ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது என என்னுடைய கடந்த பத்தாண்டுக்காலப் போராட்டம் மொத்தமுமே தமிழர் உரிமைக்கான போராட்டங்கள் தான். தமிழர் சாதிகளிலேயே பெரும்பான்மையானது வன்னியர் சமூகம் என்பதால், அந்தச் சமூகத்துக்கு எதிரான விஷயங்களை நான் தட்டிக்கேட்கிறேன்.”

“கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோரைத் தாண்டி உங்களால் செயல்பட முடியவில்லை என்கிறார்களே?”

“ஆமாம். அவர்களுடைய சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ ஆனதால், கூட்டணிக் கட்சித் தலைவர் என்கிற அங்கீகா ரத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள். பத்தோடு பதினொன்றாக அவர்கள் கட்சி எம்.எல்.ஏ போன்றுதான் பார்க்கிறார்கள். இதெல்லாம் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. முதல்வர் வரை இதைக் கொண்டு சென்றிருக்கிறேன்.”

“பா.ஜ.க-வில் நீங்கள் இணையவிருப்பதாகச் சொல்கிறார்களே?”

“முற்றிலும் தவறான தகவல். நான் பா.ம.க-விலிருந்து விலக்கப்பட்டபோதே பொன்னார், அமித் ஷா போன்ற பலர் என்னை பா.ஜ.க-வில் சேரச்சொல்லி அழைத்தனர். அத்தனையையும் நான் மறுதலித்துதான் தனிக்கட்சி கண்டேன். நான் எங்கும் செல்லமாட்டேன்”

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?”

“சட்டம்-ஒழுங்கில் தமிழ்நாடு காவல்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தத்தான் வேண்டும். உயரதிகாரிகள் பலர் கூட்டணியில் இருக்கும் நான் போன் செய்தால்கூட எடுப்பதில்லை. எடுத்தாலும் மெத்தனமான பதிலைத்தான் சொல்கிறார்கள். எனக்கே இப்படிப் பிரச்னை இருக்கிறது என்றால், சாதாரண மக்களின் கருத்தை எப்படிக் காதுகொடுத்துக் கேட்பார்கள்... அதன் விளைவுதான் இதெல்லாம். முதல்வர் இதைச் சரிசெய்ய வேண்டும்.”

“அதிகாரிகள் சரியில்லை, காவல்துறை சரியில்லை, தி.மு.க-வில் சிலர் சரியில்லை என்கிறீர்கள். அப்படியென் றால் முதல்வர் மட்டும் சரியாகச் செயல்படுகிறாரா?”

“நேர்மையான, ஊழலற்ற, மக்களுக்கான நல்ல அரசைக் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் ‘விரும்புகிறார்’ (அழுத்திச் சொல்கிறார்). ஆனால், அந்த விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் அவருக்கு வாய்க்கவில்லை என்பதுதான் என்னுடைய பார்வை.”