அலசல்
Published:Updated:

சட்டசபையில் எல்லோரையும்விட அதிகம் பேசுகிறார் சபாநாயகர்! - வேல்முருகன் விமர்சனம்

வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
வேல்முருகன்

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதெல்லாம் பாராட்டுக்குரியதுதான். ஆனால், தொண்டர்களைவைத்து சென்னா ரெட்டிக்கு எதிராகக் கடும் போராட்டங்கள் நடத்தினாரே ஜெயலலிதா...

மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கூட்டணிக் கட்சியினர் கைதுசெய்யப்பட்டது தொடங்கி ஆளுநருக்கு எதிரான போராட்டங்களில் அரசின் அணுகுமுறை வரை அதிருப்தியில் இருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தி.மு.க மீதான அவரது விமர்சனங்கள், சபாநாயகருடனான முரண் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“ `அ.தி.மு.க ஆட்சியில், மோடிக்கு எதிராகப் போராடும் சுதந்திரம் இருந்தது. ஆனால், இப்போது கைதுசெய்கிறார்கள்’ என தி.மு.க நடத்திய பொதுக்கூட்டத்திலேயே பேசியிருக்கிறீர்களே?”

“ஆமாம்... அம்பத்தூரில் ஒரு நிறுவனத்தில், ‘கோ பேக் மோடி’ என அச்சிட்ட 2,000 பலூன்கள் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருந்தோம். அதை எப்படியோ மோப்பம் பிடித்து போலீஸார் கைப்பற்றிவிட்டார்கள். போராட்டம் நடத்திய கூட்டணிக் கட்சியினரைக் கைதுசெய்தார்கள். எடப்பாடி ஆட்சியில்கூட இந்தக் கெடுபிடி இல்லை. அது ஏன் எனக் கேட்டபோது, ‘கடந்த முறை பலூன் விட்டபோது டிராஃபிக் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. எனவே, அதை மட்டும் தவிர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்’ என அரசிடம் காவல்துறை உயரதிகாரிகள் கோரிக்கை வைத்தார்கள். எனவேதான் இந்தக் கெடுபிடி என விளக்கம் கொடுக்கிறார்கள். மொத்தத்தில் பிரதமர் மோடியைப் பாதுகாத்து, பத்திரமாக அனுப்பி வைப்பதிலேயே தமிழ்நாடு காவல்துறையினர் குறியாக இருந்தார்கள்.”

“பஞ்சாப் மாநிலத்துக்கு பிரதமர் சென்றபோது, அந்த மாநில போலீஸ் பாதுகாப்பு கொடுக்காமல் அவரைத் திரும்பிப் போகச் செய்ததே... அப்படிச் செய்திருக்க வேண்டும் என்கிறீர்களா?”

“அப்படிச் சொல்லவில்லை. தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் அதிகாரத் திமிரில், அகம்பாவத்தில் எங்களிடம் இப்படி நடந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறேன். அதிகாரிகள் சிலருக்கு ஆர்.எஸ்.எஸ்., ஒன்றிய அரசு, ஆளுநர் மாளிகையின் சப்போர்ட் இருப்பதால்தான் இப்படி நடந்தது என்பதே உண்மை.”

“அப்படியானால் கூட்டணிக் கட்சியினர் கைதுசெய்யப்பட்டதும், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதும் முதல்வருக்குத் தெரியாமல் நடந்ததா என்ன?”

“நிச்சயம் தெரிந்திருக்காது. இப்படிச் செய்யப்போகிறோம் என்று காவல் ஆணையர், உளவுத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் அது நடந்திருக்காது. ‘கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இப்படியெல்லாம் போராடியிருக்கிறார்கள்... எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதற்காகக் கைதுசெய்யவேண்டிய அவசியமில்லை. கறுப்புக்கொடி காட்டுவது என்பது எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் ஜனநாயக உரிமை’ என மூத்த அமைச்சர்களாவது எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். சொல்ல வேண்டியவர்கள் சொல்ல மறுப்பதால் வரும் குழப்பங்கள்தானே தவிர, முதல்வரை இதில் குறை சொல்ல முடியாது.”

வேல்முருகன்
வேல்முருகன்

“ `ஆளுநர் விவகாரத்தில் ஜெயலலிதா பாணிதான் சரி’ என்று சொன்னால், அந்த வேகம் ஸ்டாலினிடம் இல்லை என்பதுதானே அர்த்தம்?”

“சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதெல்லாம் பாராட்டுக்குரியதுதான். ஆனால், தொண்டர்களைவைத்து சென்னா ரெட்டிக்கு எதிராகக் கடும் போராட்டங்கள் நடத்தினாரே ஜெயலலிதா... அப்படி தி.மு.க-வும் பொதுவெளியில் ஆளுநருக்கு எதிராகத் தொண்டர்களைப் போராட வைக்க வேண்டும். ஆளுநரின் அடாவடித்தனத்துக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால்தான் ஒன்றிய அரசு ஆட்டம் காணும். அப்போதுதான் சனாதனத்துக்கு எதிராக தி.மு.க நிற்கிறது என்பதை நம்பி உங்களின் கரங்களை மக்கள் பலப்படுத்துவார்கள்.”

“அப்படிச் செய்யவிடாமல் தி.மு.க-வைத் தடுப்பது எது என நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். கூட்டணிக் கட்சியாகச் சுட்டிக்காட்டத்தான் முடியும்.”

“சட்டமன்றத்தில் உரிய மரியாதை இல்லாதபோது, ‘உதயசூரியன் சின்னத்தில் நின்று தேர்தலை சந்தித்திருக்கக் கூடாது’ என்று எண்ணியதுண்டா?”

“என்னுடைய அரசியல் பாதை குறித்தும்... தி.மு.க-வுக்காக நான் செய்த தியாகங்கள் குறித்தும் அறியாத சில்லறைகள் சிலர், ‘எங்கள் சின்னத்தில் நின்றுவிட்டு ஓவராகக் கூவுகிறாய்’ எனப் பேசுகிறார்கள். அதேபோல மாற்றுக் கட்சியினர், ‘தி.மு.க-வின் சின்னத்தில் நின்றுவிட்டு என்ன வாய் பேசுகிறார்?’ எனக் கேட்கும்போதும் வருத்தமாக இருக்கும். ஆனால், தனிச்சின்னத்தில் நின்றிருக்க வேண்டும் என நினைத்ததில்லை. மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு.க-வையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்திக்கொண்டேன் என்பதால் அப்படி யோசித்ததும் இல்லை.”

“சட்டசபையில் சபாநாயகருக்கும் உங்களுக்கும் தொடர்ந்து வாக்குவாதம் நடந்துகொண்டேயிருக்கிறதே?”

“பேரவைத் தலைவர் ஆசிரியராக இருந்ததால் சில நேரங்களில் குரலை உயர்த்திப் பேசுகிறார். என்னையும், மற்ற உறுப்பினர்களையும் நோக்கி ஒரு விரலைக் காட்டிப் பேசுவது பண்பட்ட செயலாக எனக்குத் தெரியவில்லை. சட்டசபையில் எல்லோரையும்விட அதிகமாகப் பேசுபவராக சபாநாயகர் இருக்கிறார். இது குறித்து சட்டசபையிலும், தனிப்பட்ட முறையிலும் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.”

“பரந்தூர் விமான நிலையம், பட்டினப்பாக்கம் விவகாரங்களில் தி.மு.க அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பட்டினப்பாக்கம் மீனவர் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நான் முயன்றபோது, சபாநாயகர் நேரம் கொடுக்கவில்லை. பூர்வீகக் குடிமக்களை அவர்களின் சொந்த நிலத்தைவிட்டு அகற்ற இங்கே எவனுக்கும் உரிமை இல்லை. மக்களின் வேதனையைப் புரிந்துகொண்டு அரசு செயல்படாவிட்டால், அதன் பலனை அரசும், அது சார்ந்த கட்சியும் அனுபவிக்கும்.”