Published:Updated:

“சீட்டுக்காக... நோட்டுக்காக ராமதாஸ் பேரம்!” - பாயும் வேல்முருகன்

வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

படம்: சுரேஷ்

“சீட்டுக்காக... நோட்டுக்காக ராமதாஸ் பேரம்!” - பாயும் வேல்முருகன்

படம்: சுரேஷ்

Published:Updated:
வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கும் சூழலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘பா.ம.க., வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு கோரிக்கை என்று தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே?’’

‘‘அவர்கள் நடத்துவது போராட்டம் அல்ல... பேரம். தனி இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறிவிட்டால், பா.ம.க-வுக்குக் கொடி பிடிக்கிற, கோஷம் போடுகிற இளைஞர்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்துவிடும். அதன் பிறகு அவர்கள் தங்கள் குடும்பங்களை கவனிக்கப் போய்விடுவார்கள். அதை நன்கு உணர்ந்த ராமதாஸ், தனக்கும் தன் மகனுக்கும் கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்றே அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதேசமயம், எங்கள் தரப்பில் வன்னியர் சமுதாயத்தின் பிற தலைவர்களுடன் சென்று, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரைச் சந்தித்து தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தினோம். அதன் விளைவாக, `15 சதவிகித உள் ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்படும்’ என்று அரசுத் தரப்பிலிருந்து உறுதிமொழி வழங்கப்பட்டது. இந்தநிலையில்தான் அந்த உள் ஒதுக்கீட்டை, தான் கேட்டுப் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக ராமதாஸ் போராட்டம் நடத்துகிறார். இட ஒதுக்கீடு குறித்து அரசுடன் பேசுவதற்கு வன்னியர் சங்க நிர்வாகிகளை அனுப்பாமல், தன் உறவினரான தன்ராஜ் உள்ளிட்டோரை ராமதாஸ் அனுப்புவதிலிருந்தே, அவர்கள் சீட்டுக்காக... நோட்டுக்காகப் பேரம் பேசுகிறார்கள் என்பது தெளிவாகிறது.”

“சீட்டுக்காக... நோட்டுக்காக ராமதாஸ் பேரம்!” - பாயும் வேல்முருகன்

“ஆனால், எதைவைத்து பேரம் என்று இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

‘‘தனி இட ஒதுக்கீடு குறித்துப் பேச அனுப்பப்பட்ட குழுவில், வன்னியர் சங்கத் தலைவரோ, பொதுச்செயலாளரோ இடம்பெறவில்லை. முப்பதாண்டுக் காலம் பா.ம.க-வில் பயணித்தவன் என்பதால் சொல்கிறேன்... எந்தப் பேச்சுவார்த்தைக்கு யாரை அனுப்புவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஜி.கே.மணியை எதற்குப் பயன்படுத்துவார்கள், வேல்முருகனை எதற்குப் பயன்படுத்துவார்கள், ஏ.கே.மூர்த்தியை எதற்குப் பயன்படுத்துவார்கள், தன்ராஜை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்பதையெல்லாம் நன்கறிவேன். சமீபத்தில் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றார்கள். இட ஒதுக்கீடு குறித்துப் பேசுவதற்காக அவர்கள் சென்றனர் என்று சொல்லப்பட்டது. அப்படியென்றால், அமைச்சர்கள் சென்றபோது அங்கு வன்னியர் சங்கப் பிரதிநிதிகள் யாருமே ஏன் இல்லை... யாருக்காக அந்தப் பேச்சுவார்த்தையை நடத்தினீர்கள்... தங்கமணியும் வேலுமணியும் வந்த கார்களில் என்ன வந்து இறங்கியது... பெட்டியே வாங்காத அரசியல்வாதி என்றால், இதுவரை மாறி மாறி கூட்டணிவைத்ததற்கு நன்கொடை எதுவும் வாங்கவில்லை என்று ராமதாஸ் சத்தியம் செய்வாரா?”

‘‘நீங்கள்கூட தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தீர்கள். அதற்காக நீங்கள் பெட்டி வாங்கினீர்கள் என்று அவர்கள் குற்றம்சாட்ட மாட்டார்களா?”

‘‘குற்றம்சாட்டட்டும். அதை வன்னியர் சமூக மக்கள் நம்புகிறார்களா என்று பார்ப்போம். மருத்துவர் ராமதாஸிடம் கேட்கிறேன். உயிர்மூச்சு கொள்கை என்று நீங்கள் சொன்ன தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏன் கைவிட்டீர்கள்... தனி இட ஒதுக்கீட்டைப் பெறும் வரையில் தேர்தல் அரசியலில் பா.ம.க ஈடுபடாது என்று அறிவிக்க நீங்கள் தயாரா... வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி அரசிடம் பேசி உள் ஒதுக்கீட்டைப் பெற்று அமல்படுத்த உங்களால் முடியுமா?”

“சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி தி.மு.க கூட்டணியில் இடம்பெறுவதை உறுதிசெய்திருக்கிறீர்கள். எத்தனை தொகுதிகள் கேட்பதாக உத்தேசம்?”

‘‘கூட்டணிக் கட்சிகளை அழைக்கும்போது உங்களையும் கண்டிப்பாக அழைத்துப் பேசுவோம் என்று தி.மு.க தலைவர் கூறியிருக்கிறார். வட தமிழகத்தில் பா.ம.க எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் எங்கள் கட்சி வலுவாக இருக்கிறது. அதன் அடிப்படையில் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தி.மு.க வழங்கும் என்று நம்புகிறோம்.’’

‘‘பா.ம.க வலுவாக இருக்கும் இடங்களில் நீங்களும் வலுவாக இருக்கிறீர்கள் என்றால், பா.ம.க-வுக்கு நிகராக தொகுதிகளைக் கேட்பீர்களா?”

‘‘2016 சட்டமன்றத் தேர்தலில் நெய்வேலி தொகுதியில் தனித்து நின்று 31,000 வாக்குகளைப் பெற்றேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இது. ஆனாலும், பா.ம.க அளவுக்கோ அல்லது கூடுதலாகவோ தொகுதிகள் கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. எங்களைப் போன்ற வளர்ந்துவருகிற கட்சிகளுக்கு உடனடியான அங்கீகாரத்தைப் பெரிய கட்சிகள் வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், எங்கள் கட்சிக்கான அங்கீகாரத்தை இந்தத் தேர்தலில் எதிர்பார்க்கிறேன்.”