Published:Updated:

10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கும் ராமதாஸுக்கும் சம்பந்தம் இல்லை!

வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

- வெளுத்துவாங்கும் வேல்முருகன்...

10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கும் ராமதாஸுக்கும் சம்பந்தம் இல்லை!

- வெளுத்துவாங்கும் வேல்முருகன்...

Published:Updated:
வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

பத்தாண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினராகியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதற்காக, சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தவரிடம், உள் இட ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகள், அதற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உரையாடினோம்...

‘‘தேர்தலுக்கு முன்பாக, ‘ஒரு சீட்டுக்கு தி.மு.க-விடம் கட்சியை அடகுவைத்துவிட்டார் வேல்முருகன்’ என்று கடுமையான விமர்சனங்கள் உங்கள்மீது வைக்கப்பட்டனவே..?’’

‘‘சிலர் அப்படி விமர்சிக்கிறார்கள்தான்... அது, அவர்களின் விருப்பம். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், எந்த அரசியல் அதிகாரமும் இல்லாமல் ஒன்பது ஆண்டுக்காலம் ஒரு கட்சியை நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அதேசமயம், கூடுதலான இடங்களைக் கேட்டுப் பெற்றிருக்கலாம் என்று என் நண்பர்கள் சிலரும் சொன்னார்கள். கடந்த காலங்களில் அப்படி சில முயற்சிகளைச் செய்ததால்தான், வாய்ப்புகளைத் தவறவிட்டோம். இந்தமுறை அப்படி நடந்துவிடக் கூடாது என்பதால், ஓர் இடத்துக்கு ஒப்புக்கொண்டோம். எங்களுடைய கொள்கைகளும் கருத்துகளும் மக்களைச் சென்றடைய, இந்தப் பதவி தேவையாக இருக்கிறது.’’

10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கும் ராமதாஸுக்கும் சம்பந்தம் இல்லை!

‘‘வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருப்பது பற்றி..?’’

‘‘வன்னியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இது போதாது; தற்காலிக ஏற்பாடாக இதை நான் வரவேற்கிறேன். அதேசமயம் மத்திய, மாநில அரசுகள் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்கும் அவர்களுக்குரிய பிரதிநித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.’’

‘‘ `பா.ம.க நடத்திய போராட்டங்களால்தான் இந்த இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது’ என்று ராமதாஸ் கூறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘நானும் அந்தக் கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறேன். 1980-லிருந்து 2019 வரை வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் எங்கும் பேசவில்லை. மத்தியில் இரண்டு சதவிகிதம், தமிழகத்தில் 20 சதவிகிதம் எனத் தனி இட ஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசினார். அதனால், 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. சி.என்.ராமமூர்த்தி உள்ளிட்ட பிற வன்னிய சங்கத் தலைவர்கள்தான் உள் இட ஒதுக்கீட்டுக்காகத் தொடர்ந்து நீதிமன்றப் படியேறிப் போராடினார்கள். அதன் அடிப்படையில்தான் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்தது. உண்மையில் 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கிரெடிட் அவர்களுக்குத்தான் கிடைக்க வேண்டும். ஆனால், ராமதாஸ் முந்திக்கொண்டு நன்றி சொல்லி, தான் மட்டுமே போராடியதாகக் காட்டிக்கொள்கிறார். வன்னிய மக்கள் மத்தியில் இந்த உண்மை போய்ச் சேரவில்லை.’’

‘‘நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்... ஆனால், 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், ராமதாஸ்தான் இதற்குக் காரணம் என்று அவரைத்தானே கடுமையாக விமர்சிக்கிறார்கள்?’’

‘‘ராமதாஸ் கேட்ட இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இல்லாதவர்கள்தான் அவரை விமர்சிக்கிறார்கள். ‘இந்த இட ஒதுக்கீட்டைத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்தான். அதனால், இந்த விஷயத்தில் மருத்துவர் ராமதாஸையோ, வேல்முருகனையோ, சி.என்.ராமமூர்த்தியையோ விமர்சிப்பது தேவையற்ற ஒன்று.’’

‘‘ `வன்னியர் உள் இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது’ என சமூகநீதிக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் போராடிவருகின்றனவே..?’’

‘‘சமூகநீதிக் கூட்டமைப்பு போராட்டமெல்லாம் நடத்தவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்து குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார்கள்... அவ்வளவுதான்! அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை இதற்கு முன்பாக இட ஒதுக்கீட்டுக்கான எந்தப் போராட்டங்களிலும் நான் பார்த்ததே இல்லை. எம்.பி.சி பிரிவிலிருக்கும் டி.என்.சி., டி.என்.டி மக்கள் போராடுவதில்கூட ஒரு நியாயம் இருக்கிறது. அதற்காக சேதுராமன், கதிரவன் ஆகியோர் ஒருங்கிணைத்த கூட்டங்களில் நானே கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். ஆனால், எம்.பி.சி பிரிவில் இல்லாமல் பி.சி பிரிவில் இருப்பவர்களெல்லாம், எங்களுக்கு நஷ்டமாகிவிட்டது என்று குதிப்பது ஏனென்று தெரியவில்லை.’’

10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கும் ராமதாஸுக்கும் சம்பந்தம் இல்லை!

‘‘எழுவர் விடுதலை, நீட் உள்ளிட்ட விஷயங்களில் கடந்த அ.தி.மு.க அரசை மிகக் கடுமையாக விமர்சித்த வேல்முருகன், தற்போது அமைதி காப்பது ஏன்?’’

‘‘இந்த இரண்டு விஷயங்களில் எடப்பாடி அரசை நான் விமர்சித்ததில்லை. மத்திய அரசை எதிர்த்துத்தான் போராட்டம் நடத்தியிருக்கிறோம். ஆனால், தமிழக அரசால் செய்ய முடிந்த பல விஷயங்களைக் கடந்த ஆட்சியில் எடப்பாடி செய்யவில்லை. அதைத்தான் நான் கடுமையாக விமர்சித்தேன்.’’

‘‘உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருப்பதால், ஆளுங்கட்சியை விமர்சிப்பதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே..?”

‘‘சட்டமன்றத்தில் நான் தி.மு.க கொறடாவின் கட்டுப்பாட்டில் இல்லை. எனக்கு முன்வரிசைத் தலைவருக்கான இடத்தைத் தந்திருக்கிறார்கள். என் கட்சிக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். எனக்குரிய மரியாதை தற்போதுவரை கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதில் மாற்றம் ஏற்பட்டால், எனது நடவடிக்கைகளிலும் மாற்றம் வரும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism