Published:Updated:

இந்த ஆட்சியிலும், அதிகாரிகள் யதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறார்கள்!

வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

- வேதனைப்படும் வேல்முருகன்

இந்த ஆட்சியிலும், அதிகாரிகள் யதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறார்கள்!

- வேதனைப்படும் வேல்முருகன்

Published:Updated:
வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

சட்டமன்றக் கூட்டத்தொடரை முடித்த கையோடு, பீமா கோரேகான் அரசியல் விடுதலைக்குழு சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு, இலங்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு எனப் பரபரப்பாக இருக்கிறார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். அவரிடம், சட்டமன்றக் கூட்டத்தொடர், அன்புமணியின் புது அரசியல் பயணம், பட்டினப்பிரவேசம் உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்தோம்...

``சட்டமன்றத்தில் மிகவும் அதிருப்தியான முகத்தோடு காணப்பட்டீர்களே?”

``எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நாளில், மனிதவள மேலாண்மைத்துறை உள்ளிட்ட எட்டு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. ஒரு துறையைப் பற்றிப் பேச ஐந்து நிமிடங்கள் என எடுத்துக்கொண்டால்கூட நாற்பது நிமிடமாவது ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதிலும் முன்வரிசைத் தலைவர்களுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்படுவது மரபு. ஆனால், ஒட்டுமொத்தமாகவே ஐந்து நிமிடங்களுக்குள் பேசிவிட வேண்டும் எனப் பேரவைத் தலைவர் அறிவிக்கிறார். அது எங்களுக்குப் போதுமானதாக இல்லை. அதனால், என்னுடைய உரிமையைக் கோரினேன். தவிர, பேரவைத் தலைவருக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். கடந்தகாலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து 365 நாள்களெல்லாம் சட்டமன்றம் நடந்திருக்கிறது. அதைப் பின்பற்றி, சபை நடக்கும் நாள்களை அதிகப்படுத்தி ஜனநாயக மாண்பை விரிவுபடுத்த வேண்டும். ஒரு துறைக்கு ஒரு நாள் என்கிற அளவிலாவது விவாதங்கள் நடைபெற வேண்டும்.’’

``நீங்கள் தி.மு.க சின்னத்தில் வெற்றிபெற்று, ஆளுங்கட்சி உறுப்பினராகக் கருதப்படுவதால்தான் இப்படி நடக்கிறது என நினைக்கிறீர்களா?’’

``இல்லை. தி.மு.க., அ.தி.மு.க என்று அவர் பார்ப்பதில்லை; அனைவருக்குமே ஐந்து நிமிடங்கள்தான். இப்படி நடத்தும்போதே கூட்டம் முடிய நான்கு, நான்கரை மணி ஆகிவிடுகிறது. அதனால்தான், ஒரு நாளில், ஒரு துறையைப் பற்றி மட்டும் விவாதங்கள் வையுங்கள் எனத் தோழமைச் சுட்டுதலோடு, உரிமையோடு என் கோரிக்கையை முன்வைக்கிறேன்.’’

``தி.மு.க சின்னத்தில் வெற்றிபெற்றதால், கடந்த காலங்களைப்போலத் தனித்துவமாகச் செயல்பட முடியவில்லை என நீங்கள் வருத்தப்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே?’’

``இல்லை. இந்த ஓராண்டில் என்னுடைய தனித்தன்மை எதையும் நான் இழக்கவில்லை. பல முக்கியமான பிரச்னைகள் குறித்து சபையில் பேசியிருக்கிறேன். கண்ணையா மரணம், விக்னேஷ் மரணம் உள்ளிட்ட விஷயங்களுக்காக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்கான என் குரல் சபையில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால், ஆளுங்கட்சியின்மீது எந்தவொரு வருத்தமோ, வலியோ எனக்கு இல்லை.’’

``இந்த ஓராண்டுக்கால தி.மு.க ஆட்சியின் ப்ளஸ், மைனஸைச் சொல்லுங்கள்?’’

``கடுமையான பொருளாதார நெருக்கடியில் தான் முதல்வர் பொறுப் பேற்றார். இதற்கு மத்தியிலும் அனைத்துத் தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப் பட்டிருப்பதைப் பாராட்டலாம். ஆனால், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகள், கடந்த ஆட்சியில் நடந்துகொண்ட அதே யதேச்சதிகார மனோபாவத்துடனேயே நடந்துகொள்கிறார்கள். அவர்களால் இந்த அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முதல்வர், அவர்களை இனம்கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும், நாங்கள்தான் அதிகார வர்க்கம் என நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுக்களை உருவாக்க வேண்டும்.”

``பட்டினப்பிரவேச விவகாரத்தில் அரசின் பின்வாங்கலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``பெரும்பான்மை இந்து மக்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, தமிழ்நாட்டில் கடந்தகாலங்களில் இல்லாதவாறு அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களையும் தன்வசப்படுத்துவதற்கான முயற்சியாக இதைப் பார்க்கிறேன். பட்டினப்பிரவேச விவகாரத்தில், கொரோனா காலத்தில் போடப்பட்டிருந்த தடையை அப்படியே கோட்டாட்சியார் பின்பற்றியதால், எழுந்த சிக்கல் என்பதே எனக்கு வந்த தகவல். தடைக்கும் சரி, தடை விலகலுக்கும் சரி, அரசுக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. மிரட்டலுக்கு அஞ்சி, விலக்கிக்கொள்ளும் அரசு இதுவல்ல.’’

இந்த ஆட்சியிலும், அதிகாரிகள் யதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறார்கள்!

``நகர்ப்புற உள்ளாட்சியில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க-வினரே கைப்பற்றியதாக அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தீர்கள், அது மீண்டும் உங்களுக்கு வழங்கப்பட்டதா?’’

``இல்லை, இன்னும் கிடைக்கவில்லை. என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைமைக்குழு நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களிடம் பேசி வாங்கித் தரவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது.’’

`` `பா.ம.க 2.O’ எனும் அன்புமணியின் புதிய அரசியல் பிரவேசத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``அவர்கள் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் பெரிதாக ஒன்றுமில்லை என்றே பார்க்கிறேன். ஆட்சிக்கு வருவோம் என அவர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறார்கள். அதைப்பற்றி நோ கமென்ட்ஸ்.’’

``10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் பேசினீர்களா?’’

``ஆமாம். சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகளில் நான் ஈடுபடுவேன் என்கிற வாக்குறுதியை எனக்குத் தந்திருக்கிறார்.’’

``சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொள்வதால், அதில் பங்கேற்க மாட்டேன் என மறுத்துவிட்டீர்களாமே?’’

``ஆமாம். மதத்தைவைத்து மக்களைப் பிளவுபடுத்துபவர்களோடு பங்கேற்க முடியாது என மறுத்துவிட்டேன். அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இளைஞர்கள், பல்வேறு போராட்டங்களில் என்னோடு இணைந்து பணியாற்றியவர்கள்தான். அவர்கள் ஏன் அண்ணாமலையை அழைத்தார்கள் என்று தெரியவில்லை. இனிவரும் காலங்களில் அவரை அழைக்க வேண்டாம் என என்னுடைய கருத்தைப் பகிர்ந்திருக்கிறேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism