Published:Updated:

ஆர்.எஸ்.எஸ் பின்புல அதிகாரிகளின் சொல்படிதான் இங்கு ஆட்சி நடக்கிறது!

வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

- வேல்முருகன் ஓப்பன் டாக்!

ஆர்.எஸ்.எஸ் பின்புல அதிகாரிகளின் சொல்படிதான் இங்கு ஆட்சி நடக்கிறது!

- வேல்முருகன் ஓப்பன் டாக்!

Published:Updated:
வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
வேல்முருகன்

என்.எல்.சி-க்கு எதிரான போராட்டம், மத்திய அரசுக்கு எதிரான பொதுக்கூட்டம் என்று பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன். அவரை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

“தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்னைகளை ஆட்சியர்களிடம் அளிக்குமாறு முதல்வர் சொல்லியிருந்தார். நீங்கள் கொடுத்த பிரச்னைகளைப் பட்டியலிட முடியுமா?”

“கண்டிப்பாக. தொகுதியில் கலை மற்றும் வேளாண் கல்லூரி தேவை. பண்ருட்டி மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும். நெல்லிக்குப்பத்தில் வட்டார மருத்துவமனை, பண்ருட்டி நகருக்குப் பாதாளச் சாக்கடைத் திட்டம் ஆகியவற்றோடு வாலாஜா கால்வாயைத் தூர்வாரும் திட்டத்தைச் செயல்படுத்துமாறும் கேட்டிருக்கிறேன். தொகுதிக்குள் இருக்கும் அரசுப் பள்ளிகள் எதற்குமே சரியான கட்டடங்கள் இல்லை. அதையும் கேட்டிருக்கிறேன். கொய்யாப்பழ உற்பத்தி இங்கு அதிகம் என்பதால், அதை மதிப்புக்கூட்டப்பட்ட பண்டமாக விற்பனை செய்ய தொழிற்சாலையும், இன்னும் சில பிரச்னைகளையும் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறேன்.”

“முதல்வர் சொன்ன பிறகுதான் இவையெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரிந்தனவா?”

“அப்படியில்லை. இவை அனைத்தையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் சட்டமன்றம் கூடும்போதெல்லாம் அங்கு பேசியிருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் அரசோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளவே இல்லை.”

“எட்டுவழிச் சாலைத் திட்டம், கோவை சூயஸ் குடிநீர் திட்டம், டாஸ்மாக் கடைகள், ஆறு பேர் விடுதலை எனப் பல விவகாரங்களில் தி.மு.க பல்டி அடித்துவருகிறதே?”

“அவை மட்டுமல்ல, நீட் விலக்கு, இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை எனப் பல வாக்குறுதி களைக் கொடுத்தது தி.மு.க. முன்பு ஒன்று பேசிவிட்டு, தற்போது மாறுபட்ட கருத்தைச் சொல்வது ஏற்புடையதல்ல. ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு தி.மு.க அடிபணியக் கூடாது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை யென்றால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பிறகான சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை உண்டாக்கும்.”

“கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு தி.மு.க அரசில் சரியான ரெஸ்பான்ஸ் கிடைப்பதில்லை என்கிறார்களே?”

“கலைஞர் முதல்வராக இருந்தபோது, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு இருந்த சுதந்திரம், தொகுதி சார்ந்த பிரச்னைகளுக்கான அதிகாரிகளின் துரித நடவடிக்கைகள் என ஒப்பிடுகையில், இப்போது குறைவாகவே இருக்கிறது. இன்னமும் ஒருசில அதிகாரிகள் தங்களை மாற்றிக்கொள்ளாமல், அ.தி.மு.க ஆட்சியிலிருந்த அதே மனநிலையிலேயே செயல்பட்டுவருவதுதான் இதற்கெல்லாம் காரணம்.”

ஆர்.எஸ்.எஸ் பின்புல அதிகாரிகளின் சொல்படிதான் இங்கு ஆட்சி நடக்கிறது!

“அதிகாரிகள்தான் காரணம் என்கிறீர்களா?”

“ஆம். காவல்துறையையே எடுத்துக் கொள்ளுங் கள்... நான் ஆளுங்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறேன். ஆனால், எனக்கே கொடிக்கம்பம் நடுவதற்கும், போராட்டங்களுக்கும் அனுமதி கொடுப்பதில்லை. பாதுகாப்பும் கொடுப்பதில்லை. ஆனால், பா.ஜ.க-வில் இருக்கிற சமூக விரோதி களுக்கு அவர்கள் செய்கிற அநியாயங்களை மேலும் செவ்வனே செய்வதற்கு அரசே பாதுகாப்பு கொடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஒருசில அமைச்சர்கள் சொல்வதையே கேட்காமல், அதிகாரத் திமிரோடு பணியாற்றுகிற ஆர்.எஸ்.எஸ் பின்புலம்கொண்ட, ‘எனக்கு பாஸ் டெல்லிதான்’ என்ற எண்ணத்தில் செயல்படும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளின் சொல்படிதான் இங்கு ஆட்சி நடப்பதாகத் தோன்றுகிறது.”

“தமிழகத்தில் பா.ஜ.க-வின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“மனிதர்கள் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு அட்டூழியங்களை பா.ஜ.க நாளுக்கு நாள் அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது. குஜராத்தைப்போல தமிழகத்தையும் கலவர மாநிலமாக மாற்றி அரசியல் லாபம் அடைய நினைக்கிறது. தி.மு.க அரசு இதை ஒடுக்கவில்லை யென்றால் சமூக நல்லிணக்கம், நாளை சமூகப் பதற்றமாக மாற வாய்ப்பிருக்கிறது.”

“தி.மு.க அரசு பா.ஜ.க-வைக் கண்டு பயப்படுகிறது என்கிறீர்களா?”

“பா.ஜ.க-வினரைத் தமிழக அரசு நினைத்தால் ஒடுக்கலாம். ஆனால், ஏன் செய்யத் தயங்குகிறது என்பது புரியவில்லை. கூட்டணிக் கட்சியினர் பலர் இதைச் சுட்டிக்காட்டியபடிதான் இருக்கிறோம். தமிழகத்தில் நடப்பவற்றைக் கொண்டு நாங்கள் சொல்கிறோம். டெல்லியில் பிரதமரோடும், பா.ஜ.க-வோடும் தி.மு.க-வினர் நெருக்கமாக இருக்கிறார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது.”

“ `நீர்நிலைகள் பாதுகாப்பு’ என்கிற கோஷத்துடன் பா.ம.க தலைவர் அன்புமணி களமிறங்கியிருக்கிறாரே?”

“குறைந்தபட்சம் கட்சியில் எஞ்சியிருக்கும் நிர்வாகிகளையும், வாக்குவங்கியையும் தக்க வைத்துக்கொள்வதற்குத்தான் இந்த ஸ்டன்ட். சமீபகாலமாக இளைஞர்கள், குறிப்பாக வட தமிழக வன்னியர் மக்கள், பா.ம.க மீதுகொண்ட வெறுப்பு காரணமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், பா.ம.க-விலிருந்து வெளியேறிய வாழப்பாடி ராமமூர்த்தியில் தொடங்கி பலரும் கட்சி தொடங்கி, ஓராண்டுகூட நடத்த முடியாமல் கைவிட்டனர். சிலர் மீண்டும் பா.ம.க-விலேயே இணைந்தனர். ஆனால், வேல்முருகன் மட்டும்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிக்கட்சி நடத்திவருகிறேன். என்மீதுகொண்ட அச்சமும் அன்புமணியின் இந்த திடீர் பயணத்துக்குக் காரணமாக இருக்கலாம்.”

“அன்புமணியின் புதிய கோஷம், சாதிக்கட்சி என்கிற பிம்பத்தை உடைக்கும் முயற்சியா?”

“பா.ம.க சாதிக்கட்சி என்கிற பிம்பத்தை உடைக்க என்றைக்குமே, எந்தவித முயற்சியுமே எடுத்ததில்லை. பல கட்டங்களில் அதை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டேதான் செல்கிறார்கள். வன்னியர் கட்சி என்று சொல்லிக்கொண்டு, வன்னியர்களுக்கும்கூட உண்மையாக இல்லை. பாட்டாளிகள் உள்ளிட்ட தமிழர் நலனுக்கும் உண்மையாக இல்லை!”