Published:Updated:

தஞ்சை: 60 நாள்களில் ரூ.150 கோடி அரசு இடம் மீட்பு! - அதிரடிகாட்டும் மாநகராட்சி ஆணையர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ( ம.அரவிந்த் )

`தன்னிச்சையாகச் செய்ல்படும் கமிஷனரைத் திரும்ப பெற வேண்டும்’ என ஒருதரப்பும், `தஞ்சையின் வளர்ச்சியில் அக்கறையோடு செயல்படும் மக்கள் சேவகர்’ என்று மற்றொரு தரப்பும் போஸ்டர் ஒட்டி தங்களது கருத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராகப் பொறுப்பேற்ற 60 நாள்களில் நகரின் மையப்பகுதியில் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் ரூ.150 கோடி மதிப்புடைய முக்கிய இடங்களை பல்வேறு எதிர்ப்புகளை மீறி கையகப்படுத்தி அதிரடிகாட்டியிருக்கிறார் கமிஷனர் சரவணக்குமார். இதுபோல் தமிழகம் முழுவதும் தனியார் கட்டுப்பாட்டிலுள்ள நகராட்சி, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்டு அரசுக்கு வருமானத்தை பெருக்க சரவணக்குமார் வழிகாட்டியிருப்பதாக ஒரு தரப்பும், தன்னிச்சையாகச் செயல்பட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விகுறியாக்கிவிட்டார் என மற்றொரு தரப்பும் கூறிவருவது தஞ்சையில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மீட்கப்பட்ட தியேட்டர்
மீட்கப்பட்ட தியேட்டர்

இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் தரப்பில் பேசினோம். `தஞ்சாவூரின் மையப்பகுதி என சொல்லப்படும் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இராமநாதன் மன்றம் என அழைக்கப்படும் சுதர்சன நாடக சபா, யூனியன் கிளப், காவேரி லாட்ஜ், ஜூபிடர் தியேட்டர் போன்றவற்றைத் தனிநபர்கள் மாத வாடகை ரூ.499 வீதம் 99 வருட குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தனர். குத்தகை காலம் முடிந்த பிறகும் இடத்தை ஒப்படைக்கவில்லை.

1946-ல் அண்ணாவின் `ஓர் இரவு’ நாடகம் சுதர்சன நாடக சபாவில் நடைபெற்றது. அதன் 25-ம் நாள் விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் அன்ணாவுக்கு `அறிஞர்’ பட்டமும், அதேபோல் அறிஞர் அண்ணா, கருணாநிதிக்கு `கலைஞர்’ பட்டமும் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க இடத்தில், முன்னாள் திமுக கவுன்சிலரான ஆர்.கே.நாகராஜன் என்பவர் எலைட் டாஸ்மாக்கும், பாரும் நடத்திவந்தார். கலை, நாடகம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் கூடாரமாக அதை மாற்றினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விதியை மீறி வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

மாநகராட்சி  நிர்வாகத்துக்குச் சொந்தமான இடம்
மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடம்

உலகத் தமிழ் மாநாட்டின்போதும், அதன் பிறகு, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின்போதும், பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காகவும் சுதர்சன சபாவை மீட்க அதிகாரிகள் முயன்றனர். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாகராஜன் அதை நமுத்துப் போகச் செய்தார். 2006-ம் ஆண்டிலேயே அந்த இடத்தைக் கையகப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவு போட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கமிஷனர் சரவணக்குமார் சுதர்சன சபாவுக்குள் விதியை மீறி மது விற்பதை அறிந்து டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கச் சென்றார். அப்போது நாகராஜன், நேரடியாகவே மிரட்டினாராம். ஆனால், அதைக் காதில் வாங்காத கமிஷனர் சீல் வைக்க, நாகராஜன், `கதவ சாத்துங்கடா, சீல உடைங்கடானு’ கத்தினார். அதன் பிறகு நாகராஜன் மீது போலீஸ் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

மீட்கப்பட்ட யூனியன் கிளப்
மீட்கப்பட்ட யூனியன் கிளப்

இதேபோல் ஜூபிடர் தியேட்டர், யூனியன் கிளப், காவேரி லாட்ஜ் ஆகியவற்றில் மாநகராட்சி ஊழியர்களை உள்ளேயே விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். எல்லோருக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி சுதர்சன சபாவைத் தவிர மற்ற மூன்று இடங்களை மீட்டுள்ளார். விரைவில் சுதர்சன சபா மீட்கப்படவிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சுமார் 93 கடைகள், புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கட்டப்பட்ட 51 கடைகள் ஆகியவற்றை ஓப்பன் டெண்டரில் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

தஞ்சாவூர் ஆளும்கட்சியினரே இதை எதிர்த்ததுடன், வணிகர்களைத் தூண்டிவிட்டு பல வகையில் குடைச்சல் கொடுத்தனராம். அதன் பஞ்சாயத்து அமைச்சர் கே.என்.நேரு வரை சென்ற பிறகே அமைதியாகினர். தற்போது ஓப்பன் டெண்டரில் கடைகளை வாடகைக்கு விட்டதன் மூலம் மாநகராட்சியின் வருமானம் பல மடங்கு பெருகியிருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆணையருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்
ஆணையருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்

சமூக ஆர்வலரான வழக்கறிஞர் நல்லதுரை என்பவர், ``கலைகளுக்குப்பேர் போன தஞ்சாவூர் நகரின் மையப் புள்ளியில் மாநகராட்சி இடங்களில் டாஸ்மாக், சீட்டாட்ட கிளப், லாட்ஜ் ஆகியவற்றில் நடைபெற்ற சமூக விரோதச் செயல்கள் ஊரின் மதிப்பைக் கெடுத்ததுடன், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுவந்தது. கமிஷனர் சரவணக்குமார் விதிகளின்படி அவர்களிடமிருந்து ரூ.150 கோடி மதிப்புடைய இடங்களை மீட்டிருக்கிறார். அவருடைய இந்தச் செயல் பெரும் பாராட்டுக்குரியது.

தஞ்சாவூர்: 50 டன் கொண்ட ஒரே கல்லில் யானை, குதிரைச் சிலைகள்... கவனம் ஈர்த்த ஐயனார் கோயில் விழா!

ஓப்பன் டெண்டர் முறையில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். அதில் பழைய பேருந்து நிலையத்தில் ஒரு கடை சுமார் ரூ 60,000 வரை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி வருமானம் உயர்ந்திருக்கிறது. ஊழியர்களுக்குச் சம்பளம் போட முடியாத நிலையில் நஷ்டத்தில் சென்றுகொண்டிருந்த நிர்வாகத்தை லாபப் பாதைக்கு திருப்பியிருப்பதுடன் ஊழியர்களுக்கு மூன்று மாதச் சம்பளத்தையும் போட்டு அசத்தியிருக்கிறார்.

சமூக ஆர்வலர் நல்லதுரை
சமூக ஆர்வலர் நல்லதுரை

சட்டத்தையும், நியாய, தர்மத்தையும் மீறி தன்னிச்சையாக செயல்படும் கமிஷனரைத் திரும்ப பெற வேண்டும் என ஒரு தரப்பும், ரூ.200 கோடி சொத்துகளை மீட்டு நிதி நிலையைப் பெருக்கி, தஞ்சையின் வளர்ச்சியில் அக்கறையோடு செயல்படும் மக்கள் சேவகர் என்று மற்றொரு தரப்பும் இரு வேறுவிதமாக போஸ்டர் ஒட்டி தங்களது கருத்தை வெளிப்படுத்திவருகின்றனர். பெரும்பாலானவர்கள் கமிஷனரின் துணிச்சலான செயலை வெளிப்படையாகவே பாராட்டிவருவதுடன் அவர் இன்னும் பல அதிரடிகளைச் செயல்படுத்த இருப்பதாகவும் கூறிவருகின்றனர்” என்று தெரிவித்தார்.

வீடு கேட்டு வாட்ஸ்அப்பில் மனு அனுப்பிய மாணவர்; குடும்பத்தையே நெகிழவைத்த தஞ்சை ஆட்சியர்!

கமிஷனர் சரவணக்குமாரிடம் பேசினோம். ``தனியாரிடம் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களை தனி கவனம் செலுத்தி மீட்டுவருகிறோம். அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படுவதுடன், தொழில்முனைவோர் பயன்பெறக் கூடிய வகையிலும், அரசுக்கு வருமானத்தைப் பெருக்ககூடிய வகையிலும் அவை மாற்றியமைக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு