Published:Updated:

``என்னை ஏன் அழைக்கவில்லை!" - உணவு அருங்காட்சியக விழாவில் தஞ்சாவூர் திமுக எம்.பி வாக்குவாதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோபத்துடன் வெளியேறிய திமுக எம்.பி பழநிமாணிக்கம்
கோபத்துடன் வெளியேறிய திமுக எம்.பி பழநிமாணிக்கம் ( ம.அரவிந்த் )

``தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு எம்.பி-க்கள் இருக்கிறோம் எங்களை ஏன் அழைக்கவில்லை. அரசு நிகழ்ச்சியில் விதிப்படி எம்.பி-க்களை அழைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா" எனக் கேட்டார்.

தஞ்சாவூர் நிர்மலா நகரில், இந்திய உணவு கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் ரூ.1.1 கோடி மதிப்பில் இந்தியாவிலேயே முதன் முறையாக உணவு அருங்காட்சியகம் நேற்று திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில், உணவுப் பொருள்களும், விவசாய நடைமுறைகளும், மெழுகிலும், மரத்திலும் வடிவமைத்துக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த அருங்காட்சியகத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், உணவு கழக தென்மண்டல செயல் இயக்குநர் டல்ஜித்சிங், முதன்மை பொது மேலாளர் சஞ்சீவ்குமார் கவுதம், தமிழக பொது மேலாளர் பி.என்.சிங், தஞ்சாவூர் மண்டல மேலாளர் தேவேந்திர சிங் மார்டோலியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உணவு அருங்காட்சியகம் திறப்பு விழா மேடையில்  திமுக எம்.பி
உணவு அருங்காட்சியகம் திறப்பு விழா மேடையில் திமுக எம்.பி

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, தஞ்சாவூர் திமுக எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் திடீரென வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்குச் சென்று தனியாக சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக அமர்ந்திருந்தார். பின்னர் உணவு கழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை அழைத்து, ``எனக்கு ஏன் அழைப்பு கொடுக்கவில்லை. நான் பத்து வருடங்கள் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறேன். தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு எம்.பி-க்கள் இருக்கிறோம் எங்களை ஏன் அழைக்கவில்லை. அரசு நிகழ்ச்சியில் விதிப்படி எம்.பி-க்களை அழைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா" எனக் கேட்டார்.

மேலும், ஹரியானா, பாட்னா போன்ற மாநிலங்களில் எம்.பி-யை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்திடுவீங்களா எனக் கோபமாகக் கேட்டார். அதற்கு அந்த அதிகாரி, ``சார், கொரோனா பரவல் காரணமாக யாரையும் அழைக்கவில்லை. எங்க துறை அதிகாரிகள் மட்டும்தான் வந்திருக்கிறோம். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை சார்" என்றார்.

உணவு அருங்காட்சியகம்
உணவு அருங்காட்சியகம்

ஆனால், அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத எம்.பி, மேடையிலிருந்து கீழே இறங்கி வெளியே சென்றார். இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் கூறுகையில், ``எங்கள் துறை சார்பாக மட்டுமே நடைபெற்ற அருங்காட்சியகம் திறப்பு விழா என்பதால், யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை. மாவட்ட கலெக்டரையும் அழைக்கவில்லை. இதே போன்ற துறை ரீதியான நிகழ்ச்சி ஒன்று கர்நாடக மாநிலத்தில் நடந்தது அங்கும் அந்த துறையைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை" என்றார்.

இது குறித்து எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, எதுவும் பேசாமல் சென்று விட்டார்.

தஞ்சாவூர் : உதயநிதி ஸ்டாலின் வருகையால் உற்சாமடைந்த எம்.எல்.ஏ; ஏமாற்றமடைந்த தொண்டர்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு