Published:Updated:

49,000 ஓலைச்சுவடிகள்; 70,000 அரிய வகை நூல்கள்!- என்னவாகும் 100 ஆண்டுகளைக் கடந்த சரசுவதி மஹால்?

சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.

சரசுவதி மஹால் நூலகம்
சரசுவதி மஹால் நூலகம்

தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகம், 49,000 ஓலைச்சுவடிகள், 70,000-த்துக்கும் அதிகமான அரியவகை நூல்களைக்கொண்டு உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ' இந்த நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அரசு இதன்மீது போதிய அக்கறையைக் காட்டவில்லை' என வரலாற்று ஆய்வாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

சரசுவதி மஹால் நூலகம்
சரசுவதி மஹால் நூலகம்

தஞ்சை சரசுவதி மஹால் நூலகம் அரசு உடைமையாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இதன் நூற்றாண்டு விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெரியகோயிலைப் போலவே சரஸ்வதி மஹால் நூலகமும் தஞ்சாவூரின் தனி அடையாளமாகத் திகழ்ந்துவருகிறது. சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

இந்த நூலகத்துக்கு வந்து ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டினர், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள், இங்குள்ள ஓலைச்சுவடி மற்றும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர். ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும்முறை கடந்த சில வருடங்களாகவே நடைபெற்றுவருகிறது. இதேபோல், காகிதச் சுவடிகளும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கப்பட்டுவருகின்றன.

சரசுவதி மஹால் நூலகம்
சரசுவதி மஹால் நூலகம்

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் சிலரிடம் பேசினோம். ``தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது, சரசுவதி மஹால் நூலகம். ஆசியாவின் மிகப் பழைமையான நூலகங்களில் ஒன்றாகவும் உலகில் முதன்மையானதாகவும் விளங்கிவருகிறது. ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்நூலகம், சோழர்களால் சரசுவதி பண்டாரம், புத்தகப்பண்டாரம் என அழைக்கப்பட்டுவந்துள்ளது. இந்த நூலகத்தில் பணிபுரிந்தவர்கள், சரசுவதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டு வந்துள்ளனர். கி.பி 1122-ம் ஆண்டு முதலே இந்த நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

Vikatan

அதன்பிறகு ஆங்கிலேயேர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து, காலங்களைக் கடந்து பெரும் அறிவுப் பொக்கிஷமாக விளங்கிவருகிறது. குறிப்பாக, மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி மன்னர், நூல்கள்மீது மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார். இதனால், நூலகத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்ததுடன், நூல்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார். இங்கு தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி என 49,000 ஓலைச்சுவடிகள் உள்ளன.

அரண்மனை வளாகம்
அரண்மனை வளாகம்

23,169 காகிதச் சுவடிகள்,1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுத்தப்பட்ட 3 லட்சம் மராத்தி எழுத்தான மோடி எழுத்துக்களால் எழுதப்பட்ட ஆவணங்களும் உள்ளன. இதில் அரிய வகை மூலிகைகள், மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய ஆச்சர்யமான குறிப்புகளும் உள்ளன. மருத்துவம் தொடர்பாகவும் சிகிச்சை தொடர்பாகவும் வியக்கவைக்கும் குறிப்புகள் உள்ளன. அத்துடன் மிகச்சிறந்த ஓவியங்களும் உள்ளன. உலகின் பல இடங்களிலிருந்தும் வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இங்கு வந்து அனுமதிபெற்று, நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றைப் பார்த்து, தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துச்செல்கின்றனர். அவர்கள், இந்த நூலகம் உலகத்தின் பொக்கிஷம் எனப் பாராட்டுவதுடன், இதை அழியவிடாமல் பராமரிக்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்ற சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன.

மராட்டிய மன்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நூலகத்தை ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில்,1918-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசுடைமையாக்கி, பொது நூலகமாக அறிவித்தனர். அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதற்கான விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சியான ஒன்று.

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றைக்கும் மக்களுக்குத் தேவையான குறிப்புகளைக் காலம் கடந்தும் வழங்கி வருகிறது. மேலும், இங்குள்ளதுபோல் வேறு எங்கும் பனை ஓலைச்சுவடிகள் அதிக அளவில் இல்லை. இதில் உள்ள ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மற்றும் அரியவகை நூல்கள் என ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும் முறை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் உள்ள பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்கு, போதுமான வேலையாட்கள் இல்லை. இதனால் பல பணிகள் மந்த நிலையிலேயே நடந்துவருகின்றன. அரசு இதற்குப் போதிய நிதி ஒதுக்காததும் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தாததுமே இதற்குக் காரணம். வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க, வருவாயைக் கணக்கில் கொண்டு செயல்பட முடியாது.

அரண்மனை வளாகம்
அரண்மனை வளாகம்

நம் முன்னோர்கள் நமக்காக கொடுத்துவிட்டுச் சென்ற பொக்கிஷத்தைக் காக்கவேண்டியது அரசின் கடமை. இதில் இருந்த நூல்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இது தொடர்பான வழக்குகளும் உள்ளன. காணாமல் போன நூல்களைக் கண்டுபிடித்து, மீண்டும் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். நூற்றாண்டு விழாவுக்குப் பிறகாவது, சரசுவதி மஹால் நூலகத்துக்குக் கூடுதல் கவனம் செலுத்தி, போதிய நிதியை ஒதுக்கி அரசு பாதுகாக்க வேண்டும்'' என்கின்றனர் வேதனையோடு.