Election bannerElection banner
Published:Updated:

`டார்கெட் 20’ ; கோவில்பட்டி, உசிலம்பட்டி, காரைக்குடி - அமமுக எதிர்பார்ப்பும் கள நிலவரமும்!

தினகரன்
தினகரன்

``தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு நாங்கள் டஃப் கொடுப்போம். 15-20 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்'' என அடித்துச் சொல்கிறது அ.ம.மு.க வட்டாரம்.

தமிழகத் தேர்தல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்ததாக வலுவான அணியாக உருவெடுத்திருக்கிறது அ.ம.மு.க தலைமையிலான கூட்டணி. இந்த அணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அரசு கட்சி, மருதுசேனை சங்கம், கோகுல மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் தே.மு.தி.க-வுக்கு 60 இடங்களும் எஸ்.டி.பி.ஐ-க்கு 6 இடங்களும் ஏ.ஐ.எம்.ஐ.எம்முக்கு 3 இடங்களும் மீதமுள்ள நான்கு அமைப்புகளுக்கும் தலா ஓர் இடமும் போக, மீதமுள்ள 161 தொகுதிகளில் அ.ம.மு.க போட்டியிடுகிறது. இந்த அணியில் தே.மு.தி.க இணைவதற்கு முன்பாக அ.ம.மு.க மட்டுமே கணிசமான வாக்குவங்கியைக்கொண்ட கட்சியாக இருந்தது. ஆனால்,தே.மு.தி.க சேர்ந்தது இந்த அணிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கிறது.

விஜயகாந்த் - தினகரன்
விஜயகாந்த் - தினகரன்

அ.ம.மு.க-வின் ஐந்தரை சதவிகித வாக்குகள், தே.மு.தி.க-வின் இரண்டரை சதவிகித வாக்குகள், எஸ்.டி.பி.ஐ போன்ற சிறிய கட்சிகளின் வாக்குகள் என அனைத்தையும் சேர்த்தால் கிட்டத்தட்ட எட்டு சதவிகித வாக்குகள் வரும். இதுவே இந்தக் கூட்டணிக்கு, பலமான அணி என்கிற தோற்றத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தவிர, தே.மு.தி.க இணைந்திருப்பது தென்மாவட்டங்களில் அ.ம.மு.க-வின் வெற்றிக்கு நிச்சயமாக வலுசேர்க்கும் என அ.ம.மு.க வேட்பாளர்களும் உற்சாகமாகவே இருக்கிறார்கள். தவிர, ``தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு நாங்கள் டஃப் கொடுப்போம். 15-20 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்'' என அடித்துச் சொல்கிறது அ.ம.மு.க வட்டாரம்.

இது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர்,

``கோவில்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, மேலூர், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், கடையநல்லூர், சாத்தூர், சிவகாசி, திருவாடானை, முதுகுளத்தூர், காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, திண்டுக்கல், கந்தர்வக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, ஶ்ரீரங்கம் ஆகிய இருபது தொகுதிகளில் கண்டிப்பாக எங்கள் கட்சி வெற்றிபெறும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில், கயத்தார் மற்றும் கண்ணங்குடி ஆகிய இரண்டு ஒன்றியங்களை எங்கள் கட்சி வென்றது. ஒன்று கோவில்பட்டி தொகுதியிலும், மற்றொன்று காரைக்குடி தொகுதியிலும் வருகிறது. ஆர்.கே.நகரில் நிகழ்த்திய அதிசயத்தை கோவில்பட்டியில் எங்கள் தலைவர் நிச்சயம் நிகழ்த்தி வெற்றிபெறுவார். சிட்டிங் எம்.எல்.ஏ-வின் செல்வாக்கையும் மீறி கண்ணங்குடி ஒன்றியத்தைக் கைப்பற்றிய எங்கள் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி காரைக்குடித் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர் வாங்கியிருக்கிறார். எங்கள் கட்சிக் கட்டமைப்பும் அங்கு பலமாக இருக்கிறது. உசிலம்பட்டித் தொகுதியில் போட்டியிடும் மகேந்திரனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். அதனால், கோவில்பட்டி , காரைக்குடி, உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் இப்போதே எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்று.

அ.ம.மு.க நேர்காணல்
அ.ம.மு.க நேர்காணல்

அதேபோல, தி.மு.க-விலிருந்து எங்கள் கட்சியில் இணைந்து கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் ஐயாத்துரை பாண்டியனுக்கும் தொகுதிக்குள் நல்ல வரவேற்பு இருக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து எங்கள் கட்சியில் இணைந்த ராஜவர்மனும் நிச்சயமாக வெற்றிபெறுவார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் போட்டியிடும் வ.து.ந.ஆனந்த் நாடாளுமன்றத் தேர்தலிலே 1,40,000-க்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கினார். கண்டிப்பாக இந்தமுறை அவர் திருவாடானை தொகுதியில் வெற்றிபெறுவார். கந்தர்வக் கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மட்டும் கடந்தமுறை 32,000 வாக்குகள் வரை வாங்கியிருக்கிறோம். அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் மக்கள் செல்வாக்கு நிறைந்தவர். ஶ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமானுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்படி இருபது தொகுதிகளில் நாங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்.

தவிர, போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வாக்குகளையும் கம்பம், போடி ஆகிய தொகுதிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையும் வாங்குவோம். தவிர, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் எங்களுக்கு அதிகமான வாக்குகள் விழும். பூத்வாரியாக ஆள்களைப் போட்டு மிகக் கடுமையாக வேலை செய்துவருகிறோம். எங்கள் தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் வெற்றியைப் பதிவு செய்வார்கள்'' என்கிறார்கள் உற்சாகமாக.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

இந்தத் தேர்தலில் அ.ம.மு.க-வின் வெற்றிவாய்ப்பு எப்படியிருக்கும் என மூத்த பத்திரிகையாளர், தராசு ஷ்யாமிடம் பேசினோம்.

``அ.ம.மு.க-வுக்கு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். காரணம், தே.மு.தி.க-வுடனான கூட்டணி அ.ம.மு.க-வுக்கு பலம். தே.மு.தி.க-வுக்கு இரண்டரை சதவிகித வாக்குகள் மட்டுமே இருந்தாலும், இருபது முதல் முப்பது தொகுதிகளில் பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வாக்குகளை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். அதேபோல, பாரம்பர்ய இஸ்லாமியக் கட்சிகளின் மீது இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு வெறுப்புணர்வு இருக்கிறது. அவர்களுக்கு ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளின் மீது ஓர் ஆர்வம் உருவாகியிருக்கிறது. அது அ.ம.மு.க-வுக்கு நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும். மாற்று அணிகளில் கமல், சீமானைவிட அ.ம.மு.க கூட்டணிதான் பலமாக இருக்கிறது.

கட்சியைக் கலைக்கும் முடிவை எடுத்தாரா தினகரன்?  அ.ம.மு.க-வின் எதிர்காலம் இனி என்னவாகும்?

கோவில்பட்டியில் நிச்சயமாக தினகரன் வெற்றிபெறுவார். மேலும், சில தொகுதிகள் என தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தைப் பெறும் அளவுக்கான வெற்றி நிச்சயமாக அ.ம.மு.க-வுக்குக் கிடைக்கும் என்றே நான் நினைக்கிறேன்'' என்கிறார் அவர்.

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)
கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

மூத்த பத்திரிகையாளர் கணபதியிடம் பேசினோம்.

``கோவில்பட்டியில் டி.டி.வி.தினகரன் ஜெயிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. காரணம், அந்தத் தொகுதியில் கடம்பூர் ராஜூவுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான அதிருப்தி இருக்கிறது. கயத்தார் ஒன்றிய சேர்மன் மாணிக்கராஜா, அந்த ஒன்றியத்தில் கட்சிக் கட்டமைப்பை வலுவாக வைத்திருக்கிறார். தவிர, நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான வாக்குகளை அந்தக் கட்சி வாங்கியிருக்கிறது. தி.மு.க கூட்டணியிலும் சி.பி.எம் வேட்பாளர்தான் போட்டியிடுகிறார். அதனால் தினகரன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதேவேளையில், எவ்வளவு தொகுதிகளில் ஜெயிப்பார்கள் என தற்போது குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், ஐந்து முதல் பத்து தொகுதிகளில் அவர்கள் ஜெயித்தாலே அது பெரிய விஷயம்தான். அ.ம.மு.க., தே.மு.தி.க இரண்டு கட்சிகளும் பலமாக உள்ள தொகுதிகளில் அ.ம.மு.க வெல்லும் வாய்ப்பிருக்கிறது. தவிர, தி.மு.க., அ.தி.மு.க போட்டியிடாமல், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களில் தனிப்பட்ட செல்வாக்குடைய அ.ம.மு.க வேட்பாளர்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது'' என்கிறார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு