Published:Updated:

டார்கெட் எடப்பாடி!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி அணியிலிருக்கும் ராமநாதபுரம் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்மீது சமூகரீதியான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

டார்கெட் எடப்பாடி!

எடப்பாடி அணியிலிருக்கும் ராமநாதபுரம் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்மீது சமூகரீதியான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

கிராமப்புறங்களில் உறியடி விளையாட்டு மிகப் பிரபலம். விளையாட்டில், பானையை உடைத்து பரிசைத் தட்டிச்செல்ல ஒவ்வொருவரும் போட்டிபோடுவார்கள். அதுபோல, அ.தி.மு.க-வில் நடக்கும் உட்கட்சி அரசியலால், ஓ.பி.எஸ் - சசிகலா - பா.ஜ.க-விடம் அரசியல் பானையாக மாட்டிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. அவர்கள் கண்டபடி கம்புவீசுவது போதாது என, எடப்பாடி அணிக்குள் இருப்பவர்களே பானையைப் பதம் பார்க்கப் புறப்பட்டிருப்பது, அ.தி.மு.க அரசியல் விளையாட்டைப் பரபரப்பாக்கியிருக்கிறது!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் பன்னீருக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதிலிருந்தே கனஜோராக ஆள்பிடிப்பு அரசியலைக் கையிலெடுத்துவிட்டது பன்னீர் தரப்பு. எடப்பாடி அணியிலிருக்கும் மாவட்டச் செயலாளர்களை வளைக்கும் வேலையை வைத்திலிங்கம் பார்க்கிறார். பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்களை வசப்படுத்தும் பொறுப்பு, பன்னீரால் மாவட்டச் செயலாளர் பதவியில் அமர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பையூர் சந்தானம், குத்தாலம் கஜேந்திரன், சிவகங்கை அசோகன், வேலூர் முரளி, திருவள்ளூர் கிருஷ்ணமூர்த்தி, மேலூர் பாஸ்கரன் என ஆளாளுக்குப் பொதுக்குழு உறுப்பினர்களைக் கையிலெடுக்கும் பணியில் வேகம் காட்டுகிறார்கள். சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி என்பவரை பன்னீர் அணிக்குக் கொண்டுவந்திருக்கிறார் பன்னீரின் ஆதரவாளரான தர்மலிங்கம்.

“பதவிக்கு நான் கேரன்டி...” - 1,000 பேர் ‘டார்கெட்’

நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவு ஒன்றியச் செயலாளர்கள், “எடப்பாடி அணியிலிருக்கும் ராமநாதபுரம் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்மீது சமூகரீதியான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தேவர் ஜெயந்தி நெருங்கும் வேளையில், இந்த விமர்சனங்கள் அவர்களைச் சுற்றியிருக்கும் ஒன்றிய, நகரச் செயலாளர்களுக்கும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. லோக்கலில் அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, எடப்பாடி அணியிலிருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் பேசிவருகிறோம். இதுவரை, 300-க்கும் மேற்பட்ட ஒன்றியச் செயலாளர்களிடம் பேசிவிட்டோம். உயர் நீதிமன்ற உத்தரவால், ஜூலை 23-ம் தேதிக்கு முன்பு கட்சியில் இருந்த பதவிகளே தொடர்கின்றன. அண்ணன் ஓ.பி.எஸ்-ஸால் நியமிக்கப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவியிழந் திருக்கிறார்கள்.

சமீபத்தில் அவர்களை அழைத்த ஓ.பி.எஸ்., ‘இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றத்துல ஒரு முடிவு வரத்தான் போகுது. பிரிஞ்சு இருக்குறவங்க ஒன்றிணையணும் அல்லது பிரிந்தே செயல்படணும். எடப்பாடி பக்கமிருக்கும் ஒன்றியச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்களை யார் அதிகமாக நம்ம பக்கம் அழைச்சுட்டு வர்றீங்களோ, அவங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி உண்டு. குறைஞ்சது 1,000 பொதுக்குழு உறுப்பினர்கள் நம்ம பக்கம் வர்றதுக்கு ‘டார்கெட்’ வெச்சுக்கோங்க. உங்க பதவிக்கு நான் கேரன்டி’ என்று உத்தரவாதம் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆட்களை எங்கள் பக்கம் இழுக்கும் வேலையைத் துரிதப்படுத்தியிருக்கிறோம்.

டார்கெட் எடப்பாடி!

மூன்று தவணையாக ஸ்வீட் பார்சல்... இனிப்பு மழையில் பன்னீர்!

ஓ.பி.எஸ் இப்போது வேகமடுத்திருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் நீதிமன்றத் தீர்ப்பு மட்டுமல்ல... சென்னை ஹபிபுல்லா சாலையிலிருந்து வந்த ஸ்வீட் பார்சல்களும்தான். ஓ.பி.எஸ்-ஸின் கோவைப் பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற, ஏற்கெனவே தித்திப்புப் பலகாரங்கள் சசிகலாவிடமிருந்து வந்த நிலையில், இப்போது மூன்று தவணைகளாக 13 ஸ்வீட் பாக்ஸ்கள் வந்துசேர்ந்திருக்கின்றன. இனிப்பு மழையில் நனையும் ஓ.பி.எஸ் ஸ்வீட் பாக்ஸ்களை ஒன்றிய நிர்வாகிகளிடம் பிரித்துக் கொடுத்துவருகிறார். அவரின் மருமகன் காசிராஜன்தான் இதற்கெல்லாம் ‘இன்சார்ஜ்.’

உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு மேல்முறையீடு விசாரணை முடிந்திருக்கிறது. இதில், எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும்பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எடப்பாடி தரப்பு தயாராகிறார்கள். இடைப்பட்ட காலகட்டத்துக்குள் எடப்பாடி தரப்பிலிருந்து பல நிர்வாகிகள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள். எடப்பாடியுடன் களப் போட்டியில்தான் பின்தங்கியிருந்தோம். அதை வலுப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துவிட்டன” என்றனர் விரிவாக.

டெல்லி கிரீன் சிக்னல்... ‘ஸ்டார்ட்’ சசி!

சிறையிலிருந்து சசிகலா விடுதலையான பிறகு, அவரின் ஹபிபுல்லா சாலை இல்லத்தில் பெரிய கூட்டமெல்லாம் கூடியதில்லை. வழக்கத்துக்கு மாறாக, ஆகஸ்ட் 24-ம் தேதி மட்டுமே திருவாரூர், தஞ்சை, தென்காசி, தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சசிகலாவைப் பார்க்க அவர் இல்லத்தில் குவிந்தனர். அனைவரிடமும் உற்சாகம் கொப்பளிக்கப் பேசியிருக்கிறார் சசி.

சசிகலாவின் ஆதரவாளர்கள் நம்மிடம் பேசுகையில், “அ.தி.மு.க பிளவுக்குப் பிறகு நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் உண்டாகியிருக்கிறது. நாங்களும் பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசிவருகிறோம். உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க வேட்பாளர்களுக்குச் சின்னம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ‘தேர்தலுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பிவையுங்கள். கையெழுத்திட்டு அனுப்புகிறேன்’ என பன்னீர் கடிதம் எழுதியபோது, ‘எல்லாம் முடிந்த பிறகு ஏன் கடிதம் எழுதுகிறீர்கள்?’ என்று விளாசினார் எடப்பாடி. இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டியில், சிக்கிச் சீரழிவது கட்சித் தொண்டர்கள்தான். இதையெல்லாம் சசிகலாவிடம் சொல்லி, கட்சி நிர்வாகிகள் வருத்தப்பட்டனர். தனிமனித ‘ஈகோ’க்களில் ஒரு கட்சி சின்னா பின்னமாவதை யாருமே விரும்பவில்லை.

தவிர, வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தென்மாநிலங்களிலிருந்து கணிசமான எம்.பி-க்களைத் தங்கள் கட்சிக்கு எதிர்பார்க்கிறது பா.ஜ.க. ஒன்றிணைந்த அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தால்தான், தமிழகத்தில் கரைசேர முடியும் என அவர்கள் கருதுகிறார்கள். அதனால்தான், சசிகலா மீதிருந்த தடைகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பித்திருக்கின்றன. பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம், நவம்பர் 1, 2016-ல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால், சசிகலா மீதான பினாமி வழக்குகள் நீர்த்துப்போயிருக்கின்றன. கொடநாடு, சிறுதாவூர் சொத்துகள் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள் அனைத்துமே நீர்த்துப்போக வழி பிறந்திருக்கிறது. இதன் மூலமாக, ஆக்டிவ் அரசியலில் சசிகலா ஈடுபட ‘கிரீன் சிக்னல்’ காட்டியிருக்கிறது டெல்லி.

சமீபத்தில், சசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க தூதுவர்கள், பன்னீருக்குத் தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் செய்யுமாறு கூறியுள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை விட்டால் வேறு வழியில்லை என்பதை சசிகலாவும் நன்றாக உணர்ந்திருக்கிறார். அடுத்தகட்டமாக கும்மிடிப்பூண்டி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி என அடுத்தடுத்து பல ஊர்களில் நிர்வாகிகளைச் சந்திக்கவிருக்கிறார் சசிகலா. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சசிகலாவை ஒதுங்கியிருக்குமாறு டெல்லிதான் பணித்தது. இப்போது, அதே டெல்லி சசிகலாவுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டது. அவர் செயல்பட இருந்த தடைகள் விலக ஆரம்பித்திருக்கின்றன” என்றனர் உற்சாகமாக.

“காம்ப்ரமைஸா போயிடுவோம்ணே..!”

நம்பிக்கையும் உற்சாகமுமாகச் சில வாரங்களுக்கு முன்புவரை இருந்த எடப்பாடி முகாமில், இப்போது குழப்ப இருள் நுழைய ஆரம்பித்திருக்கிறது. சசிகலா, தினகரன், பன்னீர் என ஒவ்வொருவரையும் எடப்பாடி எப்படிக் கட்சியில் ஓரங்கட்டினாரோ, அதே பாணியில் எடப்பாடியைக் கட்சியில் தனிமைப் படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இரண்டு முறை பொதுக்குழு, அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளின் முடிவுகளால், முன்னாள் அமைச்சர்கள் முதல் வட்டச்செயலாளர் வரை பலரும் சோர்ந்துபோயிருக்கிறார்கள்.

டார்கெட் எடப்பாடி!

நம்மிடம் பேசிய எடப்பாடி முகாம் மாவட்டச் செயலாளர்கள், “கட்சியின் ஒற்றைத் தலைமையாக தான் வந்தே தீர்வது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். அவருடன் இருக்கும் ஒருசில மூத்த நிர்வாகிகளும் அதே உறுதியுடன் இருக்கிறார்கள். அந்த உறுதி இதர நிர்வாகிகளிடம் குறைந்துவிட்டது. ‘காம்ப்ரமைஸாகப் போய்விட்டால் என்ன?’ என்கிற பேச்சுகளும் எழ ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் எடப்பாடியைச் சந்தித்த சில முன்னாள் அமைச்சர்கள், ‘தர்மயுத்த காலகட்டத்தில் நாம்தான் அவருடன் இணைப்புக்குப் பேசினோம். அதனால், ஓ.பி.எஸ் நிபந்தனைகளை முன்வைத்தார். இப்போது அவர்தானே நம்மிடம் வருகிறார்... சசிகலா, தினகரனைச் சேர்க்கக் கூடாது என்று நாம் நிபந்தனை விதிப்போம். ஒற்றைத் தலைமைக்குக் காம்ப்ரமைஸ் பேசுவோம். நாம் விட்டுக் கொடுக்கவில்லையென்றால் பிரச்னைகள் எழும். டெல்லி கோபமடையும். மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதியும் வழக்குகளைக் கையிலெடுத்து அமலாக்கத்துறை விசாரித்தால் நமக்குச் சிக்கலாகிவிடும். நிதானித்துச் செயல்படுவோம்’ என்றனர். அதற்கு எடப்பாடி, ‘இவ்வளவு நடந்த பிறகு அவர்கிட்ட சமாதானம் பேசச் சொல்றீங்களா?’ என்று கோபப்பட்டார்.

ஆகஸ்ட் 25-ம் தேதி தன்னைச் சந்திக்க வந்த தம்பிதுரையிடம், இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘ஆழம் தெரிந்துதானே எல்லாமே செய்தோம்... இப்போது ஏன் காம்ப்ரமைஸ் பத்திப் பேசணும்.... கட்சி மொத்தமும் நம் கையில்தான் இருக்கிறது. டெல்லியால் நம்மை எதுவும் செய்ய முடியாது. இந்தச் சமயத்தில் நாம் ஏன் இறங்கிப்போகணும்... இதைப் புரிஞ்சுக்காம சிலர் பேசுறதுதான் கஷ்டமா இருக்கு’ என்று கனத்த குரலில் பேசியிருக்கிறார்.

டார்கெட் எடப்பாடி!

தொடக்கத்தில் எடப்பாடிக்கு ஆதரவாகத் திரண்டவர்களெல்லாம், இப்போது மெளனம் காக்க ஆரம்பித்துவிட்டனர். ‘நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புகள் வரட்டும், பிறகு கொண்டாடிக்கொள்ளலாம்’ என்கிற மன விரக்தி நிலைக்கு வந்துவிட்டனர். இந்த விரக்தி நிலை, எடப்பாடியைத் தனிமைப்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வின் முதன்மையான திட்டமே எடப்பாடியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதுதான். கட்சியில் ஒற்றை ஆளாக அவர் வலிமை பெறுவதை பா.ஜ.க விரும்பவில்லை. எனவே, எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்துவருகிறது. அது புரியாத ஒருசில நிர்வாகிகளும் எடப்பாடியாரை நெருக்கி வருகிறார்கள். சிலர் தி.மு.க-வுக்குத் தூதும் விடுத்திருக்கிறார்கள்.

பன்னீர், சசிகலா, பா.ஜ.க தரும் நெருக்கடிகள் போதாதென, தி.மு.க-வும் ஒருபுறம் எடப்பாடியை ‘டார்கெட்’ செய்து சூழ்ச்சிவலை பின்னியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்துக்கு மூன்று நாள்கள் பயணமாகச் சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில், வால்பாறை அ.தி.மு.க எம்.எல்.ஏ அமுல் கந்தசாமியை முதல்வரிடம் அழைத்துச் செல்வதற்கு முயற்சிகள் நடந்தன. கடைசி நேரத்தில் வேலுமணி, போராடித்தான் அந்தத் திட்டத்தை உடைத்தார். கிணத்துக்கடவு பிரமுகர், உடுமலை பிரமுகர், இரண்டு பட்டியலின எம்.எல்.ஏ-க்கள், ஒரு வன்னியர் எம்.எல்.ஏ என அ.தி.மு.க பிரமுகர்களிடமெல்லாம் தீவிரமாகப் பேசிவருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஏற்கெனவே முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தி.மு.க-வில் ஐக்கியமாகி இருப்பதால், அ.தி.மு.க-வில் இருப்பவர்களைத் தக்கவைத்துக் கொள்வதென்பது எடப்பாடிக்குப் பெரும் போராட்டமாகியிருக்கிறது” என்றனர்.

டார்கெட் எடப்பாடி!

நாலா பக்கமும் தான் ‘டார்கெட்’ செய்யப்படுவது தெரிந்திருந்தாலும், தான் எடுத்த முடிவுகளில் மிக உறுதியாக நிற்கிறாராம் எடப்பாடி. ஆகஸ்ட் 23-ம் தேதி கோவையிலிருந்து கிளம்பியபோது, “உயர் நீதிமன்றத்துல இல்லைன்னா, உச்ச நீதிமன்றம். அங்கேயும் நமக்குச் சாதகமா வரலைன்னா, மக்கள் மன்றம் போவோம். எந்தக் காரணத்துக்காகவும் நாம் இறங்கிப் போகக் கூடாது” என்று நிர்வாகிகளிடம் உறுதியாகச் சொல்லிவிட்டே புறப்பட்டிருக்கிறார். பன்னீர் - சசிகலாவின் பாய்ச்சல், தி.மு.க-வின் வலைவீச்சு, டெல்லியின் நெருக்கடி என எடப்பாடி மொத்தமாக ‘டார்கெட்’ செய்யப்பட்டிருக்கிறார். இதிலிருந்து மீண்டு, கட்சியை முழுமையாகத் தனது கன்ட்ரோலில் அவர் எடுத்துவிட்டால் இமாலய சாதனைதான்!

*********

தனது தரப்பு வக்கீல் விஜயநாராயணனை மாற்ற எடப்பாடி முடிவுசெய்த நிலையில், அதற்கு வேலுமணி, சி.வி.சண்முகம் உட்பட யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், வக்கீலை மாற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எடப்பாடி, இது குறித்து முன்னாள் ஆளுநர் ஒருவரிடம் ஆலோசனை செய்திருக்கிறார். அவர் ஆலோசனைப்படிதான், சுப்ரீம் கோர்ட் வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம் ஆகியோர் எடப்பாடிக்கு ஆதரவாக ஆஜராகியிருக்கிறார்கள். வழக்கில் ஒரு முறை ஆஜராவதற்கே பெருந்தொகை பேசப்பட்டிருக்கிறதாம்!