Published:Updated:

`டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடிவிட முடியாது!' - கோவை செல்வராஜ் 'ஓப்பன்' டாக்

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

`கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மதுப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டனர். வருகிற 2026-க்குள் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவோம்' என்கிறார் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ்.

சசிகலா வரவு, உட்கட்சி பூசல்கள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என அ.தி.மு.க அரசை சுற்றிலும் பிரச்னைகள் ரவுண்ட் கட்டுகின்றன. அதிர்ச்சியை வெளியில் காட்டிக்கொள்ளாமல், 'வெற்றி நடை' போட்டுவருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

இந்த நிலையில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் நிகழ்கால அரசியல் குறித்துப் பேசினேன்....

''விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவோம், அனைவருக்கும் இலவச செல்போன், கல்விக் கடன் ரத்து என அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாது மக்களுக்கு காது குத்துகிறது என்கிறாரே ஸ்டாலின்?''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''500 மதுக்கடைகள் மூடல், 5,800 கோடி விவசாயக் கடன் ரத்து, மானியவிலை ஸ்கூட்டர், 100 யூனிட் இலவச மின்சாரம் என மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு நெசவாளர் குடும்பங்களுக்கும் இலவச மின்சாரம், கூட்டுறவு சங்கத்தின் மூலமாக 12,100 கோடி ரூபாய் விவசாயி கடன் தள்ளுபடி என கூடுதலாக செய்துவருகிறது. இந்தியாவிலேயே 2 முறை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்த ஒரே அரசு அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசுதான்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1,82,000 கோடி ரூபாயை கல்வித் திட்டத்துக்காக செலவு செய்திருக்கிறோம். ஊரக உள்ளாட்சித் துறைகளில் 2,10,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் துறையில் 9,800 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சாதனை வேறு எந்த மாநிலத்திலாவது நடந்திருக்கிறதா? அ.தி.மு.க அரசு செய்திருக்கும் இந்த சாதனையை எல்லாம் மறைக்கப்பார்க்கும் தி.மு.க-தான் தமிழக மக்களுக்கெல்லாம் காது குத்தப் பார்க்கிறது!''

''விவசாயிகள் வருமானம், செல்போன், கல்விக் கடன் ரத்து என தி.மு.க கேட்டுள்ள இந்த 3 விஷயங்களில் எதை செய்துமுடித்திருக்கிறீர்கள்?''

''கல்விக் கடன் ரத்து விஷயத்தைப் பொறுத்தவரையில், மாநில அரசு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களில் வாங்கியிருக்கும் கடன்களைத்தான் தள்ளுபடி செய்யமுடியும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள கடன்கள் என்பது மத்திய ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்டது என்பதால், தமிழக அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரைதான் செய்யமுடியுமே தவிர, நேரடியாக ரத்து செய்யமுடியாது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

மக்களுக்கு இலவசமாக செல்போனைக் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு தயங்கவில்லை. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்போன் போன்ற பொருள்களை கொடுப்பதைவிடவும், நேரடியாக பண உதவி செய்வதுதான் சரியாக இருக்கும். அதனால்தான் கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய், பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் என தமிழகம் முழுக்க வழங்கினோம். வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து தங்கி வேலை பார்த்துவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுத்துள்ளோம்.

எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிற தி.மு.க., கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது 'கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து, கூட்டுறவுக்கடன் ரத்து, ஒரு கோடி வேலைவாய்ப்பு' என்று தாங்கள் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்ததே... இந்த 2 ஆண்டுகளில் எதை நிறைவேற்றினார்கள்? நாடாளுமன்றத்தையே முடக்கிவிடக்கூடிய எண்ணிக்கையில் எம்.பி-க்களை வைத்திருந்தும்கூட எழுவர் விடுதலைக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்களே ஏன்? அப்படி குரல் கொடுத்தால், ஜெகத் ரட்சகன், கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா போன்றோர் மீதான ஊழல் வழக்குகளை கையிலெடுத்து மத்திய அரசு தண்டனை வழங்கிவிடும் என்ற பயத்தால்தானே மௌனமாக இருக்கிறார்கள்?''

''மாநில நலன் சார்ந்த உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சியினரை மத்திய அரசு பழிவாங்கும் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்களா?''

''மத்திய அரசு, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று சொல்லவில்லை.... தி.மு.க-வினர் தங்கள் மீதான ஊழல் வழக்குகளுக்குப் பயந்துதானே பேசாமலேயே இருக்கின்றனர் என்று சொல்லவருகிறேன்.''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

''தமிழ்நாடே மதுவில் மூழ்கியுள்ளது, அரசுக்கு கவலையே இல்லை' என்று உயர்நீதிமன்றம் வேதனைப்படுகிறது. ஆனால், 'பெருமளவு வருவாய் வருவதால் டாஸ்மாக் கடைகளை மூட சாத்தியம் இல்லை' என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையனே சொல்கிறாரே?''

''500 மதுக்கடைகளை ஜெயலலிதா மூடினார். எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் பொறுப்பேற்றவுடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். தமிழ்நாடு முழுக்க 7,600 டாஸ்மாக் கடைகள் இருந்துவந்த நிலையில், நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இன்றைக்கு 3 ஆயிரம் கடைகளுக்கும் கீழான எண்ணிக்கையாக குறைந்துவிட்டது. ஆக, 55% கடைகள் மூடப்பட்டுவிட்டன.

மதுக்கடைகளை படிப்படியாக மூடவேண்டும் என்பதுதான் அ.தி.மு.க அரசின் திட்டம். ஆனாலும் உடனடியாக அனைத்துக் கடைகளையும் மூடிவிட முடியாது. காரணம்... 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் திடீரென மது குடிப்பதை நிறுத்திவிட்டால், அவர்களது உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இந்தச் சூழலில், மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துச்சொல்லி, அவர்களாகவே குடிப்பழக்கத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. வருகிற 2026-க்குள் தமிழ்நாட்டில், முழு மதுவிலக்கு அமலுக்கு வந்துவிடும்!''

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

''கொரோனா ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் பல மாதங்கள் மூடிக்கிடந்தனவே... 'மதுப்பிரியர்களுக்கு உடல்நிலை பாதிக்கும்' என்பதெல்லாம் நியாயமான காரனமாக தெரியவில்லையே?''

''இந்தியா முழுக்க மது அருந்துகிற மக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்களது உடல்நிலை ஆரோக்கியம் என்ன, மதுவிலக்கு சாத்தியம்தானா என்பதையெல்லாம் மருத்துவர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் ஆதாரபூர்வமாக எடுத்து வைத்திருக்கின்றனர். மக்களை மது அருந்தவைக்கிற கொள்கையைக் கொண்ட கட்சி அல்ல அ.தி.மு.க. எனவே, மதுவின் பிடியிலிருந்து படிப்படியாக மக்களை மீட்டெடுப்பதுதான் அ.தி.மு.க அரசின் திட்டம்!''

அடுத்த கட்டுரைக்கு