Published:Updated:

`1932-ல் டாடா ஏர்லைன்ஸ்.. இப்போது ஏர் இந்தியா' - மீண்டும் பழைய நிறுவனத்தைத் தன் வசப்படுத்துமா டாடா?!

டாடா சன்ஸ் Vs ஸ்பைஸ் ஜெட் அஜய் சிங்: `ஏர் இந்தியா' நிறுவனத்தை வாங்கப்போவது யார்... மீண்டும் தனது பழைய நிறுவனத்தை வசப்படுத்துமா டாடா குழுமம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1932-ம் ஆண்டு, டாடா குழுமத்தின் ஜே.ஆர்.டி.டாடா-வால் ஆரம்பிக்கப்பட்டதுதான் டாடா ஏர்லைன்ஸ். இந்த நிறுவனம் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், `ஏர் இந்தியா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 1953-ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை இந்திய அரசிடம் விற்றது டாடா குழுமம். அதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனமானது. அன்றிலிருந்து 68 ஆண்டுகள் கழித்து, மீண்டும் அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம்காட்டிவருகிறது டாடா நிறுவனம்! ​

ஏர் இந்தியா
ஏர் இந்தியா
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்

ஏர் இந்தியாவும் சில புள்ளிவிவரங்களும்!

ஏர் இந்தியா நிறுவனத்திடம் சொந்தமாக 87 விமானங்களும், லீஸ் அடிப்படையில் 85 விமானங்களும் இருக்கின்றன. இந்தியாவிலிருந்து 31 நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் பயணம் செய்யலாம். இந்தியாவுக்குள்ளாக 58 நகரங்களுக்குப் பயணம் செய்யலாம். உலகம் முழுவதும் சுமார் 10,000 ஊழியர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். சுமார் 4,000 ஒப்பந்த ஊழியர்களும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவருகின்றனர்.

விற்பனைக்கு என்ன காரணம்?

ஏர் இந்தியா விற்பனை செய்யப்படுவதற்கு, அந்த நிறுவனத்தின் அதீத கடன்சுமையே காரணம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட விமானங்களே ஏர் இந்தியாவின் கடன்சுமைக்கு மூல காரணமாகச் சொல்லப்படுகின்றன. ``காங்கிரஸ் ஆட்சியிலும், பா.ஜ.க ஆட்சியிலும் தனியார் விமான சேவைகளுக்கு அதிக சலுகைகளும் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. அதன் காரணமாகவே, பொதுத்துறை விமான சேவை பெரும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது'' என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக உலகம் முழுவதுமே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுவருகிறது விமான சேவை போக்குவரத்து. இதனால், ஏர் இந்தியாவின் கடன் சுமை கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்திருக்கிறது.

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் கடும் கடனில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 43,000 கோடி ரூபாய் அளவுக்கான கடனில் சிக்கித் தவிக்கும் இந்த நிறுவனத்தை, கடந்த 2018-ம் ஆண்டு முதலே விற்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது இந்திய அரசு. கடந்த முறை ஏர் இந்தியா விற்பனை குறித்து அறிவிப்பு வெளியிட்ட அரசு, அந்த நிறுவனத்தின் 76 சதவிகிதப் பங்குகளை மட்டுமே விற்கப்போவதாக அறிவித்திருந்தது. மேலும், நிர்வாகக்குழுவில் அரசு சார்பில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதனால், ஏர் இந்தியாவை வாங்க, தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டின.

இதையடுத்து, ஏர் இந்தியாவின் 100 சதவிகிதப் பங்குகளை விற்க முடிவு செய்த இந்திய அரசு, நிர்வாகக்குழுவில் அரசின் தலையீடு இருக்காது என்கிற அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க சில நிறுவனங்கள் முன்வந்தன.

அஜய் சிங்
அஜய் சிங்
Twiiter/@flyspicejet
Vikatan

செப்டம்பர் 15-ம் தேதிதான் ஏலத் தொகையை சமர்ப்பிப்பதற்குக் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டாடா குழுமமும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங்கும் ஏலத் தொகையை சமர்ப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அஜய் சிங், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் வாயிலாக ஏலத் தொகையை சமர்ப்பிக்காமல், தனிப்பட்ட முறையில் சமர்ப்பித்திருப்பதாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர இன்னும் சில நிறுவனங்கள் ஏலத் தொகையைச் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அஜய் சிங் Vs டாடா சன்ஸ்!

வேறு சில நிறுவனங்கள் ஏலத் தொகையைச் சமர்ப்பித்திருந்தாலும், ஏர் இந்தியாவை வாங்குவதற்கு டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அஜய் சிங்குக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதிலும் அஜய் சிங்கைவிட, டாடா சன்ஸ் நிறுவனமே அதிக தொகைக்கு ஏலம் கோரியிருப்பதாகவும், அதனால் அவர்களுக்கே ஏர் இந்தியா நிறுவனம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் சில செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

டாடா சன்ஸ்
டாடா சன்ஸ்
`டாடா நிறுவனம் தொடங்கிய `ஏர் இந்தியா' விரைவில் தங்கள் கைக்கே வரும்' என்று டாடா குழுமத்தினர் அதீத நம்பிக்கையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், யார் கைக்கு ஏர் இந்தியா நிறுவனம் செல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு