Published:Updated:

`நாலு வார்த்தை பேச தெரியல, ட்வீட் செய்ய வந்துவிட்டனர்!' - சந்திரபாபு நாயுடு கட்சிக்குள் வெடித்த குழப்பம்

சத்யா கோபாலன்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பல பிரச்னைகளைச் சந்தித்து வருவதற்கு நடுவில் தற்போது அவரது கட்சிக்குள்ளேயே சர்ச்சை உருவாகியுள்ளது.

புத்தா வெங்கன்னா - கேசிநேனி ஸ்ரீனிவாஸ்
புத்தா வெங்கன்னா - கேசிநேனி ஸ்ரீனிவாஸ்

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நடைபெற்று முடிந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு தினம் தினம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். ஒரு புறம் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் ஆட்சியில் நடந்த ஊழல்கள், திட்டங்களில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தோலுரித்து வருகிறார். மறுபுறம் மத்திய அரசு சந்திரபாபு நாயுடுவுக்குக் குறி வைத்துள்ளது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரு நிர்வாகிகள் சந்திரபாபு நாயுடுவின் பெயரை வைத்து ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இவர்களின் வார்த்தை போருக்கு முக்கிய காரணம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பியை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பிக்கள் சந்தித்ததுதான். இது தற்போது பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது.

விஜயவாடாவின் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் புத்தா வெங்கன்னா சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பு தெலுங்கு தேசம் கட்சியில் புயலைக் கிளப்பியுள்ளது.

கேசிநேனி ஸ்ரீனிவாஸ் ட்வீட்
கேசிநேனி ஸ்ரீனிவாஸ் ட்வீட்
Twitter/@kesineni_nani

இவர்களின் சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில் முதலில் கருத்து பதிவிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி கேசிநேனி ஸ்ரீனிவாஸ், “நேற்று வரை சந்திரபாபு நாயுடுவுடைய பாதங்களாக இருந்தது நாளை முதல் விஜயசாய் ரெட்டியின் பாதங்களாக மாறவுள்ளது ” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள புத்தா வெங்கன்னா, “ கடைசி மூச்சு வரை சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக போராடும் வீரர்கள்தான் தேவை. சந்தர்ப்ப வாதிகள் தேவையில்லை” எனக் கூறியிருந்தார்.

புத்தா வெங்கன்னா
புத்தா வெங்கன்னா
Twitter/@BuddaVenkanna

``சொந்தமாக 4 ஓட்டுகளைக்கூடப் பெற முடியாத ஒருவருக்கு 4 பதவிகள் கிடைத்துள்ளது மிகவும் துரதிஷ்டவசமானது. நான்கு வார்த்தைகள் சரியாக உச்சரிக்க முடியாத, எழுத முடியாதவர்கள் இப்போது ட்வீட் செய்ய வந்துவிட்டனர்” என வெங்கன்னாவை கடுமையாக விமர்சித்திருந்தார் கேசிநேனி.

இதையடுத்து பதிலளித்துள்ள வெங்கன்னா, ``நீங்கள் சொல்வது அனைத்தும் பொய். நான் சொல்வது அனைத்தும் உண்மை. போலி ரசீதுகளை உருவாக்கி பேருந்துகளில் நிதி திரட்டி பலரை ஏமாற்றியது நீங்கள்தானே? பலகோடி ரூபாய் நிதியாளர்களை ஏமாற்றிவிட்டு ட்வீட் செய்தது நீங்கள் தானே? எனத் தன் பங்குக்கு கேசிநேனியை விமர்சித்துள்ளார். இவர்களின் ட்விட்டர் சண்டை ஆந்திர மாநிலத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.