Published:Updated:

`கண்ணாடியால் மூடப்படும்!' - மோடி டீ விற்ற கடை சுற்றுலாத்தலமாக மாறுகிறது

கலிலுல்லா.ச

`டீ விற்றவர் இன்று பிரதமராக முன்னேறியிருக்கிறார்’ என்று 2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியின்போது, பலரும் மோடி குறித்து பேசியிருந்தனர்.

central minister visiting tea shop
central minister visiting tea shop

இந்தியா போன்றதொரு மிகப்பெரிய நாட்டின் பிரதமராவது என்பது அத்தனை சுலபமல்ல. அதுவும் இரண்டுமுறை தொடர்ந்து பிரதமராக நீடிப்பதென்பது சவால் நிறைந்ததுதான். பிரதமர் மோடியின் இந்தப் பெரும்பயணம், தொடங்கியது அந்த சிறிய டீக்கடையிலிருந்துதான். குஜராத் மாநிலம் வத்நகர் ரயில் நிலையத்தில் தன் தந்தையின் டீக்கடையில் நரேந்திர மோடி சிறுவயதில் டீ விற்றுள்ளார்.

tea shop
tea shop

2014 -ம் ஆண்டுத் தேர்தல் பிரசாரத்தின்போது முதன்முதலாக இதை அவர் தெரிவித்திருந்தார். `நானும் உங்களைப்போல ஒரு சாமானியன்தான்’ என்று கூறி வாக்கு சேகரித்தார். ஒருமுறை ஹியூமன் ஆஃப் பாம்பேவுக்குப் பேட்டியளித்த மோடி, ``நாடு முழுவதிலிருந்தும் வந்து ஒன்றாக அமர்ந்து பேசும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்.

நான் அவர்களுக்கு டீ கொடுத்துவிட்டு, அவர்களின் கதைகளைக் கேட்பேன். அப்படித்தான் நான் இந்திக் கற்றுக்கொண்டேன்” என்று கூறியிருந்தார். `டீ விற்றவர் இன்று பிரதமராக முன்னேறியிருக்கிறார்’ என்று 2014-ம் ஆண்டுத் தேர்தல் வெற்றியின்போது, பலரும் மோடி குறித்து பேசியிருந்தனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் வத்நகர் பகுதியில் மோடி டீ விற்றக் கடையை சுற்றுலாத்தலமாக மாற்ற, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

tea shop
tea shop

அண்மையில் மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாசார அமைச்சர் பிரஹலாத் சிங், வத்நகரில் உள்ள டீக்கடையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது, இந்தக் கடையை சுற்றுலாத்தலமாக மாற்றி பராமரிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். மேலும், `டீக்கடையைச் சுற்றிலும் கண்ணாடி அமைக்கப்பட்டு, பாதுகாப்பாக மூடப்படும். இதைத் தவிர்த்து, வேறு எந்த விதத்திலும் கடையை மாற்றம் செய்யப்போவதில்லை. இது இப்படியே மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.