தெலங்கானா மாநில பா.ஜ.க, மாநில தெலங்கானா அரசின் தோல்வி, ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்துவதற்காக, பிரஜா சங்க்ராம யாத்திரையின் மூன்றாம் கட்டத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த யாத்திரையில் கலந்துகொண்டு உரையாற்றிய தெலங்கானா பா.ஜ.க தலைவர் நச்சராஜு வெங்கட சுபாஷ், "அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா மக்கள் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பளிப்பார்கள்.
கே.சி.ஆர் அளித்த பொய்யான வாக்குறுதிகளால், பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல், டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-க்கள் அந்தந்தத் தொகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். அதனால், ஆளும் டி.ஆர்.எஸ் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த ஏராளமான எம்.எல்.-ஏ-க்கள் பா.ஜ.க-வில் சேருவார்கள்.

மக்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த யாத்திரையில், ஏராளமான மக்கள் கலந்துகொண்டது. மேலும், பா.ஜ.க மட்டுமே, தெலங்கானா மக்களின் தேவைகளை நிறைவேற்றும் என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. அதேபோல, எதிர்க்கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வில் சேர ஒப்புதல் அளித்துள்ளனர்.
சரியான நேரத்தில் பா.ஜ.க-வுடன் இணைவார்கள். ஆனால், மத்திய அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றச் சரியான நிதி ஒதுக்கவில்லை என ஆளும் அரசு, அவர்களின் தோல்விகளை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசின் மீது சேற்றை வீசுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
