Published:Updated:

`இனி யாரும் ஆர்.டி.ஐ-யை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்!’ - சமூக ஆர்வலரை அதிரவைத்த தெலங்கானா அரசு

சத்யா கோபாலன்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் அறிய, ஜிஎஸ்டி மட்டும் மூன்று லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டதால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.

RTI
RTI

தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 27 வயதான ராஜேஷ். இவர், அதே பகுதியில் ஆர்.டி.ஐ செயற்பாட்டாளராகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். நிஸாமாபாத்தில் பெய்த மழை அளவைக்கொண்டு விவசாயத்துக்காக ஒரு ஆய்வுக் கட்டுரையை இவர் எழுதி வருகிறார்.

Rain
Rain

இதற்காக, கடந்த வருடம் ஜூன் முதல் இந்த வருடம் மே மாதம் (ஜூன் 2018- மே 2019) வரை தன் பகுதியில் பொழிந்த மழை அளவை அறிந்துகொள்வதற்காக, நகரின் தலைமை திட்ட அதிகாரியிடம் தகவல் கேட்டுள்ளார். ஆனால், ராஜேஷின் கேள்விக்கு அந்த அதிகாரி எந்த பதிலும் தரவில்லை எனத் தெரிகிறது. அடுத்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மழை அளவை கேட்ட ராஜேஷுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஆர்.டி.ஐ-யில் தகவல் அறிந்துகொள்ள, அவரிடம் 20 லட்ச ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்துக்கு ஆர்.டி.ஐ அளித்த விளக்கம் இன்னும் அதிர்ச்சியானது. நிஸாமாபாத்தில் மட்டும் 41 தானியங்கி வானிலை மையங்கள் உள்ளன. அதில் ஒரு மையத்துக்கு ரூ.3,500 என்ற கணக்கில் மொத்தம் 17,22,000 ரூபாயும், ஜிஎஸ்டி மட்டும் 3,09,960 ரூபாயும் என மொத்தமாக 20,31,960 ரூபாய் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Chandrashekar Rao
Chandrashekar Rao

``இந்த தகவலை அறிந்த பிறகு, நான் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டேன். இதைவிட பெரிய அதிர்ச்சி, ஜிஎஸ்டி-யாக மூன்று லட்சம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இதை எப்படி எடுத்துக்கொள்வது என எனக்குத் தெரியவில்லை. இதற்கு முன்னதாக, பல முறை நான் ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்டுள்ளேன். ஆனால், அப்போதெல்லாம் ஒரு ரூபாய்கூட ஜிஎஸ்டி-க்கு வாங்கவில்லை. இப்போது இவ்வளவு பெரிய தொகை கேட்கிறார்கள். இப்படி இருந்தால், இனி யாரும் ஆர்.டி.ஐ-யில் தகவல் அறிய நினைக்கக்கூட மாட்டார்கள்” என வேதனை தெரிவித்துள்ளார் ராஜேஷ் .