Published:Updated:

பழங்குடியினப் பெண்களுடன் நடனமாடிய தமிழிசை! - வைரலாகும் ஆளுநர் மாளிகை வீடியோ

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடி மக்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பா.ஜ.க-வில் தவிர்க்கமுடியாத தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். அக்கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்கு அளப்பரியது. தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தவர், அண்மையில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தமிழிசை
தமிழிசை

தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றார் தமிழிசை. `தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன்’ என்ற உறுதிமொழியேற்றவர், அம்மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்திவருகிறார். இதனிடையே கடந்த 10 நாள்களுக்கு முன் தெலுங்கு மொழியில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பார்த்து தமிழிசை ட்வீட் செய்திருந்தார்.

மேலும், சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழிசையின் இந்த ட்விட்டர் பதிவு, இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் தமிழிசை. பழங்குடியின மக்களுக்குச் செய்யப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள், இடஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழிசை
தமிழிசை

பின்னர், பத்ராச்சலம் மற்றும் நாகர் கர்ணூல் மாவட்டங்களிலிருந்து வந்த கோயா மற்றும் லம்பாடா மக்களுடன் நீண்ட நேரம் கலகலப்பாக உரையாடியுள்ளார். தொடர்ந்து அம்மக்களுடன் இணைந்து, அவர்களின் பாரம்பர்ய இசைக்கு ஏற்றபடி நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை பழங்குடியின மக்களுடன் இயல்பாகப் பழகி, நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.