Published:Updated:

`டெல்லி, புதுச்சேரியை அடுத்து தெலங்கானாவா?!’ - ஆளுநர் தமிழிசையின் ட்வீட்டால் பதறும் டி.ஆர்.எஸ் கட்சி

தெலங்கானா ஆளுநர் தமிழிசை மக்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள கருத்து, அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 Tamilisai -
Tamilisai - ( Twitter/@DrTamilisaiGuv )

தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 7-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதற்குத் தமிழகம் மற்றும் தெலங்கானாவில் அதிக வரவேற்பு கிடைத்தது. அவர் பதவியேற்று ஒரு வாரம் மட்டுமே கடந்த நிலையில், தற்போது தன் ட்விட்டர் பதிவால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

Governor Tamilisai
Governor Tamilisai
Twitter/@DrTamilisaiGuv

தெலங்கானாவில் உள்ள மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (Majlis Bachao Tehreek) என்ற அமைப்பின் தலைவர் அம்ஜத் உல்லா கான், தமிழிசைக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதில், ``தெலங்கானா ஆளுநர் தமிழிசை `பிரஜா தர்பார்’ என்ற மக்கள் குறை கேட்கும் கூட்டத்தை நடத்த வேண்டும். குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது மக்களைச் சந்திக்க வேண்டும். இதனால் தினம் தினம் பிரச்னைகளை சந்திக்கும் மக்களின் நிலையைப் பற்றி அறிந்துகொள்ளமுடியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அன்று அக்கா... இன்று மேதகு ஆளுநர்! - தமிழிசை செளந்தரராஜன்

இதனைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் அம்ஜத் உல்லா கான், அவரது கருத்துக்குப் பதில் அளித்துள்ள ஆளுநர் தமிழிசை, ``உங்களின் பரிந்துரைக்கு நன்றி. அந்த ஆலோசனை பரிசீலனையில் உள்ளது” எனப் பதிலளித்துள்ளார். தமிழிசையின் இந்தப் பதில் தெலங்கானா அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`தமிழிசை பதிவிட்டுள்ள ட்விட்டர் கணக்கு அவருடையதுதான்' என ராஜ்பவன் உறுதி செய்துள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. `தமிழிசை பா.ஜ.க தலைவராக இருந்தபோது பயன்படுத்திய அதே ட்விட்டர் கணக்குதான்' என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழிசை மக்களைச் சந்திக்கவிருப்பதாகக் கூறியுள்ள கருத்து ட்விட்டர்வாசிகள் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ``ஆளுநர் ஓர் இணையான அரசை நடத்தவுள்ளார். இது தெலங்கானாவில் பா.ஜ.க உயர்வுக்குப் பயன் அளிக்கும்’ எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ``நீங்கள் எப்படி அதைச் செய்ய முடியும்.. நீங்கள் அரசியலமைப்பின் பிரதிநிதி மட்டுமே. மக்கள் பிரதிநிதி இல்லை. அதனால் அரசியலமைப்பு பணிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

`என் வாழ்க்கையில் அது ஒரு ரணமான விஷயம்!’ - கண்கலங்கிய தமிழிசை

தமிழிசையின் இந்தக் கருத்துக்கு இதுவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ``டெல்லி மற்றும் புதுச்சேரியைப் போன்று தெலங்கானாவிலும் ஆளுநர் ஆதிக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால், எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கும் நடுநிலையான உறவுக்குப் பாதிப்பு ஏற்படும். ஆளுநருக்கு எதிராக அதிருப்தி தெரிவிக்கும் அறிக்கையில் நாங்கள் கவனமாக உள்ளோம்” என ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார்.

Governor Tamilisai
Governor Tamilisai
Twitter/@DrTamilisaiGuv

இது பற்றிப் பேசியுள்ள டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர் பல்லா ராஜேஸ்வர் ரெட்டி, ``இந்தியாவில் எந்த ஆளுநராவது இது போன்று மக்களைச் சந்தித்துள்ளனரா.. அதற்கான விதிகள் இருந்தால், தெலங்கானா ஆளுநர் நிச்சயம் மக்களை சந்திக்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

மத்தியில் உள்ள பா.ஜ.க-வுக்கும் டி.ஆர்.எஸ் கட்சிக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவிவருகிறது. பா.ஜ.க அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி, முத்தலாக், ஆர்.டி.ஐ போன்ற மசோதாக்களுக்கு டி.ஆர்.எஸ் கட்சி ஆதரவு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.