Published:Updated:

ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் நான் கிடையாது!

தமிழிசை சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழிசை சௌந்தரராஜன்

- தகிக்கிறார் தமிழிசை சௌந்தர ராஜன்...

ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் நான் கிடையாது!

- தகிக்கிறார் தமிழிசை சௌந்தர ராஜன்...

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநர் - முதல்வர் இடையிலான அரசியல் மோதலில், அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது தெலங்கானா சட்டமன்றம். அந்த மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரை இல்லாமலேயே தொடங்கி, நடைபெற்றுவருகிறது. ‘மாநில சுயாட்சி’யை உரக்கப் பேசிவரும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம்...

“தெலங்கானா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையின்றி நடந்துவருகிறதே... என்ன காரணம்?’’

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடுதான் தொடங்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலுமே இதுதான் நடைமுறை. ஆனால், தெலங்கானாவில் ஆளுநரை, ஆளுநராகப் பார்க்காமல், எதிர்க்கட்சித் தலைவரைப்போல் பார்த்ததால்தான், இப்படி யொரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.’’

ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் நான் கிடையாது!

“ஆனால், ‘ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது இல்லை என்பதால், ஆளுநர் உரை இல்லாமல் நேரடியாகவே சட்டசபைக் கூட்டத்தொடரை நடத்தலாம்’ என்கிறதே தெலங்கானா அரசு?’’

“இது முதல் கூட்டம் இல்லைதான்... ஏற்கெனவே கடந்த ஆண்டு தொடங்கிய கூட்டத்தொடரின் தொடர்ச்சிதான். ஆனால், ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் சபை கூடுகிறது. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சபை கூடும்போது, ஆளுநர் உரையைத் தவிர்ப்பது எந்த வகையில் நியாயம்? ஆளுநர் உரை இல்லாமலேயே சபையை நடத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு எதிராகத் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆளுநர் உரை இல்லாமல், பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தலாம். ஆனால், ஆளுநர் கையெழுத்து இல்லாமல், பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. எனவே, நானும் ஓர் ஆளுநராக, பட்ஜெட்டில் கையெழுத்துப் போடாமல் முட்டுக்கட்டை போட்டிருக்க முடியும். அதைத்தான் அவர்களுமே எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்கள் நலத்திட்டங் களைச் செயல்படுத்தவிடாமல் நாம் ஏன் குறுக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நான் முழுமையாக ஒத்துழைத்தேன். பரபரப்பான ஈகோ அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. அதனால்தான் தெலங்கானா மக்களும்கூட சமூக ஊடகங்களில் என்னை ‘பீப்பிள்ஸ் கவர்னர்’ என்று குறிப்பிடுகிறார்கள்.’’

“அதேசமயம், தெலங்கானா விவகாரத்தைக் குறிப்பிட்டு, ‘இதுதான் மாநில சுயாட்சிப் பெருமை’ என்று தமிழகத்தில் பேச்சு எழுந்துள்ளதே?

“இப்படியெல்லாம் சந்தோஷப்பட்டு, என்ன சாதிக்கப்போகிறார்கள்? முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன், இந்தியா வந்திருந்தபோது பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், காமராஜரோ அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். காரணம், அமெரிக்கா சென்றிருந்த அறிஞர் அண்ணாதுரை, அங்கே நிக்சனை சந்திக்க நேரம் கேட்டபோது, அந்தச் சந்திப்பை மறுத்தவர் நிக்சன். ஆக, ‘ஒரு தமிழரைச் சந்திக்க மறுத்த நிக்சனை, நாம் ஏன் சந்திக்க வேண்டும்?’ என்ற உணர்வு காமராஜரிடம் இருந்தது. இன்றைக்கு ஒரு தமிழருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிற சூழலில், தமிழ்நாட்டிலிருந்தே இப்படியெல்லாம் விமர்சனங்கள் எழுந்தால் அதை என்னவென்று சொல்வது?’’

“பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது தானே?’’

“எல்லோரிடமும் ஒரேவிதமான பணியை எதிர்பார்க்க முடியாது. அவரவர் தனித்தன்மைக்கு ஏற்றவாறு தங்கள் பணியைச் செய்வார்கள். அந்தச் செயல்பாட்டை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக மத்திய அரசைப் பழி சொல்வது சரியான பார்வை அல்ல. ஆளுநர்களை அரசியல்ரீதியாகத் தொடர்புபடுத்திக் குற்றம் சாட்டுபவர்கள், தெலங்கானா முதல்வர் இப்படி நடந்துகொள்கிறாரே... இதை என்னவென்று சொல்வார்கள்? ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சிக்குக்கூட தெலங்கானா முதல்வரோ அமைச்சர்களோ வரவில்லை. சமீபத்தில், தெலங்கானா பழங்குடியின மக்களின் ‘சம்மக்கா சாரக்கா’ திருவிழாவில் நான் கலந்துகொண்டேன். ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்வதுதான் நடைமுறை. ஆனால், அன்றைய விழாவில் கலெக்டர், எஸ்.பி என யாருமே கலந்துகொள்ளவில்லை. பொதுவாக, ஆளுநர் என்பவருக்கு அபரிமிதமான அதிகாரங்கள் உண்டு. இந்த அதிகாரங்களில் நீதிமன்றம்கூட தலையிட முடியாது. ஒரு சாமானியனுக்கு கொடுக்கக்கூடிய மரியாதையைக்கூட ஓர் அரசு, ஆளுநருக்குக் கொடுக்கவில்லை என்றால், பதிலுக்கு நானும் இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு மேல் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனாலும்கூட நான் அதையெல்லாம் செய்யவில்லை. ஆக, ஆளுநர்களைக் குறை சொல்கிற நீங்கள், இந்த அரசியல்களை எல்லாம் என்னவென்று சொல்வீர்கள்?’’

“தமிழ்நாட்டிலேயேகூட, நீட் விலக்குத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திவருவதன் பின்னணியில் அரசியல் உள்ளதுதானே?’’

“தெலங்கானா ஆளுநராகப் பதவி வகித்து வரும் நான், இன்னொரு மாநில அரசியல் குறித்துக் கருத்து சொல்ல விரும்பவில்லை. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நான் இந்த விவகாரத்தில் கருத்தும் சொல்ல முடியாது. அதேசமயம், அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப் பட்டிருக்கும் ஆளுநருக்கான அதிகாரங்கள் அடிப்படையில், ஒரு மசோதாவைத் தெளிவுற ஆய்வுசெய்து ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு எந்தவிதக் காலக்கெடுவும் அரசியலமைப்புச் சட்டத்தில் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற் காகக்கூட, ஆளுநர் கால அவகாசம் எடுத்துக் கொள்ள நேரிடலாம்.’’

“ஆனால், ஏற்கெனவே ஆளுநர் ஆய்வுசெய்த தீர்மானம், இரண்டாவது முறையாக ஒப்புதலுக்குச் செல்லும்போதும் ஆளுநர் காலம் தாழ்த்துவது நியாயம் தானா?’’

“இதுபோன்ற சூழல்களிலும்கூட, ‘உடனடியாக ஆளுநர் கையெழுத்து போட்டே ஆக வேண்டும்’ என்று சட்டம் சொல்லவில்லை. சம்பந்தப் பட்ட தீர்மானத்தில் ஆளுநர் சமாதானம் ஆகவில்லை என்றால், யார் என்ன செய்ய முடியும்? அதனால்தான் இது போன்ற பல சமயங்களில், ‘ஆளுநரை நாங்கள் கட்டாயப் படுத்த முடியாது’ என்று உயர் நீதிமன்றங்களே கருத்து தெரிவித்திருக்கின்றன. சமீபத்தில் தெலங்கானா சட்டமன்றத்தில்கூட, மேலவை உறுப்பினர் நியமனம் சம்பந்தமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக என்னிடம் அனுப்பி வைத்தனர். அதை ஆய்வுசெய்து பார்த்தபோது, அதில் கூறப்பட்டிருந்த தகவல்களில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. எனவே, நானும் அந்தத் தீர்மானத்தை திருப்பி அனுப்பிவிட்டேன். ஆனால், ‘அமைச்சரவை முடிவு செய்துவிட்ட பிறகு ஆளுநர் கையெழுத்திட்டே ஆக வேண்டும்’ என்றனர். அப்படியான, ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் நான் கிடையாது!’’

ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் நான் கிடையாது!

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பணிகளில் ஆளுநர் தலையீடு செய்வது ஜனநாயக விரோதம்தானே?’’

“ஆளுநர் என்பவர் அரசியலில் ஈடுபட முடியாதே தவிர... பொதுச் சேவையில் ஈடுபடலாம். கொரோனா காலகட்டத்தில் நானும்கூட மக்கள் பணியில் ஈடுபட்டேன். சுகாதாரத்துறைப் பணியாளர்கள், அமைச்சர், முதல்வர் என இவ்வளவு பேர் இருக்கும்போது, ஏன் கொரோனா பணி செய்கிறீர்கள் என்று யாராவது கேட்டால், அது சரியான கேள்வியாக இருக்குமா?

சமீபத்தில், சிறப்பாகப் பணிபுரிந்த ஐந்து மாநில ஆளுநர்களின் பணிகளை ராஷ்டிரபதி பவன் தேர்வு செய்துள்ளது. அதில் தென்னிந்தியாவில் தெலங்கானா மாநில ஆளுநரின் பணி மட்டும்தான் தேர்வாகியுள்ளது. அதாவது தெலங்கானா, புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சிறப்புற செய்ததற்கும், தெலங்கானாவில் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு ஆளுநர் ஆற்றியிருந்த பணிகளுக்காகவும்தான் இந்தப் பெருமை கிடைத்துள்ளது. ஆக, சேவை மனப்பான்மையோடு ஆளுநரும் மக்கள் பணி செய்யலாம். ஆளுநரை இப்படியெல்லாம் கேள்வி கேட்பவர்கள், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மாநிலங்களவை உறுப்பினர் அல்லது சட்ட மேலவை உறுப்பினரான நீங்கள் ஏன் மக்கள் பணிக்காக எங்கள் ஊருக்கு வருகிறீர்கள்’ என்று கேட்டிருக்கிறார்களா? ஆக, அவர்களையெல்லாம் கேள்வி கேட்காதவர்கள், ஆளுநர்களை மட்டும் ஏன் கேள்வி கேட் கிறார்கள்?’’

“சமீபத்தில், ‘பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர்’ என்ற மேகாலய ஆளுநர் சத்தியபால் மாலிக் பேச்சு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறதே?’’

“அவரவருக்கென்று தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பொறுப்பில் உள்ளவர்கள், இது போன்று பொறுப்பில்லாமல் பேசுவது தவறு.’’

“2018-ல், உங்களுக்கு எதிராகக் கோஷமிட்டுக் கைதான மாணவி சோபியாவுக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தர விட்டுள்ளதே..?’’

“அன்றைக்கு நடந்த விஷயமே வேறு. எனது தனியுரிமை என்று சொல்லிக்கொண்டு விமானத்தில் ஒருவர் கோஷமிடுகிறார் என்றால், அது சக பயணிகளின் தனி உரிமையைப் பாதிக்காதா? விமான நிலையத்தின் அமைதியைப் பாதிக்காதா? இதைத்தான் தவறு என்று நான் சுட்டிக்காட்டியிருந்தேனே தவிர... யாரையும் கைது செய்யச் சொல்லி நான் கேட்கவில்லை. அப்படியான நபரும் நான் இல்லை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism