Published:Updated:

ஆளுநரான சில மணி நேரங்களில்! - 2 பெண்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை!

ஆளுநருடன் தெலங்கானா அமைச்சரவையின் ஒரு பகுதியினர்
ஆளுநருடன் தெலங்கானா அமைச்சரவையின் ஒரு பகுதியினர்

இரண்டு பெண்களும் பதவியேற்பதற்கு சிலமணி நேரம் முன்புதான் தெலங்கானாவின் ஆளுநராகத் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றார்.

ஆளுநராகப் பதவியேற்ற அன்றைய தினமே இரண்டு அமைச்சர்களுக்கு, அதுவும் இரண்டு பெண் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது எல்லாம் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மட்டுமே சாத்தியப்படும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னராகப் பதவியேற்றுக்கொண்டார் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே நாளில்தான் தெலங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெற்றது. முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் உட்பட ஆறு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்ற ஆறு அமைச்சர்களில் இரண்டு பெண்களும் அடக்கம். அந்த வகையில் இவர்கள் இருவரும் தெலங்கானாவின் முதல் பெண் அமைச்சர்களாகிறார்கள்.

ஒருவர் சபிதா இந்திரா. ஒருங்கிணைக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்த காலத்தில் முதல் பெண் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். இவர் தவிர, தெலங்கானாவின் முதல் பழங்குடியினப் பெண் அமைச்சராகப் பொறுப்பேற்ற பெருமையை சத்தியவதி ரத்தோட் பெறுகிறார்.

ஆளுநராகப் பதவியேற்ற தமிழிசை
ஆளுநராகப் பதவியேற்ற தமிழிசை

சத்தியவதிக்கு பெண்கள் மற்றும் பழங்குடியின மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெண்களும் பதவியேற்பதற்கு சிலமணி நேரம் முன்புதான் தெலங்கானாவின் ஆளுநராகத் தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றார். இதுவரை ஆந்திராவின் ஆளுநராக இருந்த நரசிம்மன் தான் தெலங்கானாவுக்கும் பொறுப்பு ஆளுநராக இருந்தார். அதன்படி பொறுப்பேற்ற வகையில் தெலங்கானாவுக்கான முதல் ஆளுநராகிறார் தமிழசை.

அடுத்த கட்டுரைக்கு