Published:Updated:

பல கோடிகள் மதிப்பில் மீட்கப்படும் கோயில் நிலங்கள்... ஆக்கிரமித்தவர்கள் மீதான நடவடிக்கை என்ன?

பல கோடி மதிப்பிலான, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டபோதும் ஆக்கிரமித்தவர்கள், பயன்படுத்தியவர்கள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகச் செய்திகள் வரவில்லை. அதற்கான காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாடுகளில் இருக்கும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பாலான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு, அவை இந்து சமய அறநிலையத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்ட பிறகு பேசிய அமைச்சர் சேகர் பாபு, ``98 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட கோயில் இடத்தைக் குத்தகைதாரர்கள் மறைந்த பிறகு, அவரது வாரிசுகள் வேறு ஒருவருக்கு வாடகைக்குவிட்டதோடு அதைக் கோயிலுக்குச் செலுத்தாமல் அவர்களே செலவழித்து வந்துள்ளனர். 12 கோடிக்கு மேல் வாடகை நிலுவையில் இருக்கிறது. வழக்கு தொடர்ந்து இதை வசூல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். `இறை சொத்து இறைவனுக்கே...’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டு ஆக்கிரமிப்பு நிலங்களைத் தமிழ்நாடு அரசு மீட்டுவருகிறது. கடந்த நான்கு நாள்களில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தோம். அந்த இலக்கு தற்போதே எட்டப்பட்டுவிட்டது. இன்னும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சேகர் பாபு
சேகர் பாபு

இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

``இறைவன் சொத்து இறைவனுக்கே; கோயில் நிலத்துக்குப் பட்டா வழங்க முடியாது!''- அமைச்சர் சேகர் பாபு

சென்னை மதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 23 கோடி மதிப்பிலான 12,222 சதுர அடி பரப்பிலான நிலம் மீட்கப்பட்டது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரவங்குறிச்சி கரந்தமலை அடிவாரத்திலுள்ள வேட்டுவ அய்யனார் கோயிலுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்பிலான 24.14 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள படலூர் வாகீஸ்வரர், சென்றாயப் பெருமாள், கரிய காளியம்மன் ஆகிய மூன்று திருக்கோயில்களுக்கும் சொந்தமான சுமார் 70 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. திருப்பூர் அருகே நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி விசாலாட்சியம்மள் கோயிலுக்குச் சொந்தமான 15 கோடி மதிப்பிலான 1.67 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் பூக்காரத் தெரு முருகன் கோயிலுக்குச் சொந்தமான 40 லட்சம் மதிப்பிலான 1,680 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பகுதியிலிருக்கும் கோயில்களில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், கைதுசெய்யப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அறநிலையத்துறை அமைச்சர் பதில்
அறநிலையத்துறை அமைச்சர் பதில்

பல கோடி மதிப்பிலான, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டபோதும் ஆக்கிரமித்தவர்கள், பயன்படுத்தியவர்கள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகச் செய்திகள் வரவில்லை. அதற்கான காரணம் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அரசின் நடவடிக்கை குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``அரசு மீட்டதாகச் சொல்லும் அத்தனை கோயில் நிலங்களும் நீதிமன்ற உத்தரவின்பேரில் இதுவரை குத்தகைக்கு இருந்தவர்கள் மீண்டும் கோயில்களுக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டவைதான். நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்தாலே நான் சொல்வதில் இருக்கும் உண்மை புலப்படும். முறையாகக் கோயில் நிலம் ஒப்படைக்கப்பட்டதை ஏதோ அரசாங்கமே நேரடியாகச் சென்று நிலங்களையெல்லாம் மீட்டதாகச் சொல்வது வெறும் நாடகம்தான். இந்து விரோத அரசு என்ற விமர்சனத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தி.மு.க அரசு இந்த நாடகத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. கோயில் நிலங்களை உண்மையாக ஆக்கிரமித்துள்ள யாரிடமிருந்தும் இதுவரை ஒரு சதுர அடி நிலம்கூட மீட்கப்படவில்லை. கட்சி பாரபட்சமின்றி பெரும்பாலான அரசியல் கட்சியினரும் கல்வி நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவை அனைத்தும் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இன்றி மீட்கப்பட வேண்டும்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

தங்கத்தை உருக்குகிறேன். அதன் மூலம் வருமானத்தைப் பெருக்குகிறேன் என்ற நாடகத்தை விட்டுவிட்டு கோயில் நிலங்களுக்கு உரிய குத்தகையைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள், நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்களிடமிருந்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசின் நடவடிக்கை குறித்த விமர்சனத்தோடு, எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் விவரித்தார்.

அரசின் நடவடிக்கை மீதான விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் இராஜீவ்காந்தியிடம் கேட்டோம். ``நிலம் தொடர்பாக இருக்கும் எல்லா வகையறாவும் நீண்டகாலக் குத்தகை, வாடகை, ஆக்கிரமிப்பு ஆகிய மூன்று வகையில்தான் அனுபவிக்கப்படுகிறது. குத்தகை தராமலோ, வாடகை கொடுக்காமலோ இருப்பவர்களைத்தான் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கணக்கிடப்படுகிறார்கள். அப்படிக் கணக்கிடப்பட்டவர்கள் எல்லாரிடமிருந்தும் நீதிமன்ற உத்தரவின்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. எஞ்சியவர்களுக்கும், ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுவருகிறது. ஆக்கிரமிப்பாளர்களாகவே இருந்தாலும் `நாங்கள் இந்த வகையில் வந்தோம். இவ்வளவு வாடகை கொடுத்திருக்கிறோம், எங்களுக்கு அவகாசம் வேண்டும்’ என அவர்களுக்கான சில சட்ட வாய்ப்புகளும் இருக்கின்றன. அதையும் நாம் மதித்து, பின்பற்றியாக வேண்டும்.

நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகள் மற்றும் கண்டறியப்பட்டவர்களுக்கு நிலங்களை ஒப்படைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தால் ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிவில் வழக்கு சட்டப்படி சிலர்மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தீவிரமான பிரச்னைகள் உள்ள இடங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டத்தின்படி இந்த ஆக்கிரமிப்பு வழக்கில் உடனடியாகக் கைதுசெய்ய வாய்ப்பில்லை. அதனால்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

தி.மு.க-வைப் பொறுத்தவரை சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. குற்றம் செய்திருக்கிறார் என நிரூபிக்கப்பட்டால், கண்டறியப்பட்டால் அவர்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் கட்சிப் பாகுபாடெல்லாம் தி.மு.க அரசுக்குக் கிடையாது” என நடவடிக்கை எடுப்பது தொடர்பான சட்ட விவரங்கள், அரசின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு