Published:Updated:

டாஸ்மாக்: தின்பண்டங்கள் விற்பனைக்கு டெண்டர்... பாமக-வின் விமர்சனத்துக்கு தி.மு.க-வின் பதில் என்ன..?

டாஸ்மாக்
News
டாஸ்மாக்

``மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ம.க வலியுறுத்திவரும் நிலையில் தின்பண்டங்களுக்கெல்லாம் டெண்டர்விடுவோம் என அறிவிப்பு வந்திருக்கிறது'' என்கிறார் திலகபாமா.

``டாஸ்மாக்கில் தின்பண்டங்கள் விற்பனை செய்வதற்கெல்லாம் டெண்டர்விடுவோம் என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. இதை வன்மமான திணித்தலாக நாங்கள் பார்க்கிறோம்'' என பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா கருத்து தெரிவித்திருந்த நிலையில், ``எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, மதுக்கடைகளை ஒழிக்க மட்டும் பா.ம.க குரல் கொடுப்பதற்குப் பின்னால் வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ எனச் சந்தேகிக்கிறோம்'' என தி.மு.க தரப்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

கரூர் மாவட்ட பா.ம.க புதிய நிர்வாகிகள் கூட்டம், நேற்று அங்கிருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரேம்நாத், மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சதீஸ்குமார் இருவரையும் அந்தக் கட்சியின் பொருளாளர் திலகபாமா நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா, ``மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ம.க வலியுறுத்திவரும் நிலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்வதற்கெல்லாம் டெண்டர்விடுவோம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

திலகபாமா நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம்
திலகபாமா நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதுமட்டுமல்ல, பெண்களுக்கு தனி பார் உருவாக்கப்படுகிறது. மது குடிப்பது தவறு என்று பா.ம.க எதிர்த்துவரும் நிலையில், அந்தத் தவற்றில் அனைவரையும் இந்த அரசு ஈடுபடுத்துகிறது. இது போன்ற தவற்றை, பா.ம.க சார்பில், பெண்கள் சார்பில் கண்டிக்கிறோம். டாஸ்மாக் கடைகளை மூடுவதோடு மது ஆலைகள் அனைத்தையும் மூடிவிட தமிழக அரசு முன்வர வேண்டும்'' என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய திலகபாமா,

``தின்பண்டங்களுக்கு டெண்டர்விடுவதைக் கேலியாக நான் பேசியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், மிகவும் சீரியஸாக இந்த விஷயத்தை நான் பார்க்கிறேன். டாஸ்மாக் கடைகளின் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது என்பதற்காக அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சமூகத்தில் பல்வேறு குற்றங்களுக்கு வழிவகுக்கும் ஒவ்வாத ஒரு விஷயமாக மது இருக்கிறது. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்பற்கு, மக்களிடமிருந்து மதுக்கடைகளை தூரப்படுத்துவதற்கான முயற்சிகளைத்தான் இந்த அரசு செய்ய வேண்டுமே தவிர, சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரையும் பல்வேறு வழிகளில் அதில் ஈடுபடுத்தக் கூடாது.

திலகபாமா
திலகபாமா

முறுக்கு விற்பவர்கள், முட்டை விற்பவர்கள், தண்ணீர் சப்ளை செய்பவர்கள் என அனைவரும் இதில் ஈடுபட்டால், டாஸ்மாக் வேண்டாம் என்று குரல் எழுப்பினால், பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வரும். அடிப்படையில் அவர்கள் மதுவுக்கு எதிரானவர்களாக இருந்தாலும்கூட, தங்களின் வியாபாரத்துக்காக மதுக்கடைகள் இருக்க வேண்டும் என நினைப்பவர்களாக மாறிவிடுவார்கள். இது போன்ற ஒரு சூழலை இந்த அரசு திட்டமிட்டு உருவாக்குவதாகவே நான் பார்க்கிறேன். சமூகத்தின் மோசமான மாற்றத்துக்கு இது காரணமாக அமையும். பள்ளிகளில் முறையாகக் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்துதர முடியாதவர்கள், தொழிற்சாலைகளை உருவாக்க முடியாதவர்கள் அனைத்து விஷயங்களிலும் டெண்டர்விடுவதற்கான வாய்ப்புகளை மட்டும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்தின் விழுமியங்களையெல்லாம் சீரழிக்கும் முயற்சிகளில் தி.மு.க அரசு ஈடுபட்டுவருவதாக நான் பார்க்கிறேன்'' என்றார் காட்டமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விமர்சனங்கள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், சிவ.ஜெயராஜிடம் பேசினோம்.

``டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்பது பா.ம.க-வின் விருப்பம். ஆனால், 2016 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என வாக்குறுதி கொடுத்ததால்தான் நாங்கள் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம். நாங்கள் சொன்னால் செய்துவிடுவோம் என மக்களுக்குத் தெரியும். கடந்தகாலத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறோம். அந்த வகையில், டாஸ்மாக் கடைகளைக் குறைக்க வேண்டும், பள்ளிகளுக்கு, கோயில்களுக்கு அருகில் கடைகள் இருக்கக் கூடாது என துறையின் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதிகாரிகளுக்குத் தெளிவாக உத்தரவிட்டிருக்கிறார்கள்.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

பார் டெண்டர்விடுவதை டாஸ்மாக் நிறுவனம் செய்யவில்லை. ஒருபோதும் செய்வதற்கும் வாய்ப்பே இல்லை. இது தவறான தகவல். அதேவேளையில், டாஸ்மாக் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று பார் நடத்துகிறார்கள். இந்த நடைமுறை கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் இருந்தது. கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், அரசே பார் நடத்துகிறது. ஆனால், இங்கு அப்படியான நிலை இல்லை. ஒருசில சமூக விரோத சக்திகள் மீண்டும் கள்ளச்சாராயத்தைக் கொண்டுவருவதற்காக டாஸ்மாக் நிர்வாகத்தைச் சீர்குலைக்க நினைக்கிறார்கள். கஞ்சா, போதை ஊசி, குட்கா போன்ற பல போதைப்பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துவருகிறது. ஆனால், டாஸ்மாக்கின்மீது மட்டும் பா.ம.க-வினர் குறியாக இருப்பதற்கு, பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என நான் சந்தேகப்படுகிறேன்'' என்கிறார் அவர்.