Published:Updated:

கன்னிப்பேச்சிலும் `உதயநிதி புகழ்'- சர்ச்சையைக் கிளப்பிய தென்காசி தொகுதி எம்.பி!

மலையரசு

தனது கன்னிப்பேச்சை பேசிய தனுஷ்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்னவோ இரண்டு நிமிடங்கள்தான்.

உதயநிதி
உதயநிதி ( twitter )

தென்காசி தொகுதி எம்.பி தனுஷ்குமார். தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்றவர். நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நேற்று முதல்முறையாகப் பேசினார். தன்னுடைய முதல் பேச்சில் விவசாயிகளின் பிரச்னைகளை எழுப்பினார். திருவள்ளுவரின் `உழுதுண்டு வாழ்வாரே' திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசியவர், ``தற்போது விவசாயிகள் ஒவ்வொரு அமைச்சர் பின்னாடியும் சென்று தங்களைக் காப்பாற்றுங்கள் எனக் கதறி வருகின்றனர்.

எம்.பி தனுஷ்குமார்
எம்.பி தனுஷ்குமார்

இந்த நிலையை தற்போதுள்ள அரசுதான் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 6,000 ரூபாய் பணத்தையோ, ரசாயன உரம் போன்ற இலவசப் பொருள்களையோ அரசிடம் இருந்து விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு விளைவிக்கும் பொருள்களுக்கு நியாயமான விலையை மட்டும்தான்" என்று விவசாயிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இப்படி பேசுவதற்கு முன்னர் அறிமுக உரையில், ``இந்தியப் பேரரசை வழிநடத்துகிற இந்த அவையில் பங்குபெற எனக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுதந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, அன்பகம் `கலை', கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். தனது கன்னிப்பேச்சை பேசிய தனுஷ்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்னவோ இரண்டு நிமிடங்கள்தான்.

உதயநிதியுடன் எம்.பி தனுஷ்குமார்
உதயநிதியுடன் எம்.பி தனுஷ்குமார்

அதிலும் உதயநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி சொல்லவே முப்பது நொடிகளைக் கடத்திவிட்டார் என்பது சர்ச்சையாக மாறியுள்ளது. உதயநிதி இளைஞரணிச் செயலாளராக பதவியேற்று சில நாள்களே ஆகிறது. அதற்குள், சட்டசபையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் அவரது புகழ்பாடுவது தி.மு.க உறுப்பினர்களிடையே அதிகரித்து வருகிறது. அதேநேரம் கட்சியில் இரண்டு மாவட்ட நிர்வாகிகளை அதிரடி மாற்றம் செய்துள்ளார் உதயநிதி.